Friday, April 25, 2014

@ 7:34 PM எழுதியவர்: வரவனையான்


முதலில் வந்தது குமாஸ்தா ரங்கசாமிதான். நரிச்சிரிப்பு சிரித்துக்கொண்டு பம்பைத்தலையுடன் வரும் ரங்கசாமியைக்கண்டாலே கடற்கரைக்கு எரிச்சலாய் வரும். வக்கீல் பொன்மாயத்தேவர் ஏட்டுப்பள்ளியில படிக்கும் போதே ரங்கசாமியை குமாஸ்தாவாக்கிட்டாருன்னு கிண்டலா சொல்லுவாங்க, அவரு பொண்டாட்டியை விட ரங்கசாமிதான் அதிக நேரம் கூட இருந்திருப்பான். ஒரு நாளில்லாட்டி ஒரு நாளு காதோரம் கையை விட்டு பொடணி மண்டை பாகவதரு முடியை கொத்தா பிடிச்சி சொவத்துல நாலு இடிஇடிக்கனும்னு ரங்கசாமியை பாக்கும் போதெல்லாம் நெனப்பு வரும். ஒரு காரணமும் இல்லாம எதுக்கு இவனை கண்டாலே சுறுசுறுங்கிறது என்றும் தெரியவில்லை.

“என்னய்யா உங்க வக்கீலு நெலம ’கஞ்சிக்கு லாட்டரி கையில பேட்டரி’ன்னு ஆகிப்போச்சா, சாராயக்கேசுக்குல்லாம் வர்றீங்க”

“ என்ன கேசுக்குன்னு தெரியலை சார் ! நீங்க இருக்கிங்களான்னு எங்க சார் பாத்திட்டு வரச்சொன்னார், யாரோ முக்கியமானவுக போன் போட்டாக போல “

”வக்கீல் குமாஸ்த்தான்னா சார் போடுவீயா, அய்யான்னு சொல்றா வெண்ணை மவனே” மனதிற்குள் கறுவினார்.

” யோவ் ஸ்டேசனில் ஒக்கார வச்சிருக்கிறது ஒரு கேஸு, வேறென்னாத்துக்கு இங்க வர்றாராமாம், பம்பரம் வெளாடவா ? பழநி முன்சீப் கோர்ட்டுல ஒரு வேலை இருக்கு, நான் கெளம்பிட்டேன், சாயந்திரமா வரச்சொல்லு..

ரங்கசாமியின் தயங்கி எதோ சொல்ல வந்தான், படாரென எழுந்து இன்ஸ்பெக்டர் ரூமிற்குள் போன கடற்கரை
இன்ஸ்பெக்டரிடம் ” சார், வந்து முக்கா மணி நேரம் கூட ஆகலை, அதுக்குள்ள வக்கீலை புடிச்சாந்திருக்காய்ங்க, இவய்ங்க லேசுப்பட்டவனுங்க இல்ல” என்றார்.

அப்படி சொன்னதன் பொருள் எதும் சிபாரிசின் பெயரிலோ , காசு வாங்கிக்கொண்டோ விட்டுவிடாதீர்கள் என்கிற மறைமுக எச்சரிக்கை. 57 வயதில் நிற்கும் இன்ஸ்பெக்டரின் அனுபவத்திற்கு இது புரியாமலில்லை. பொதுவாக இது போன்ற ஸ்டேசன்களில் கடற்கரை போன்ற சட்டம் தெரிந்த உதவி ஆய்வாளர்கள் வந்து விட்டால், ஓய்வு பெறும் வயதிலிருக்கும் இன்ஸ்பெக்டர்கள், மகன்கள் தலையெடுத்தபின் அமைதியாக ஈசி சேரிற்கு போய்விடுவதைப் போல எதிலும் பெரிதாக தலையிட மாட்டார்கள். கிட்டதட்ட உதவி ஆய்வாளர்கள் தான் ஸ்டேசனை இயக்குவார்கள். கடற்கரை இங்கு மாற்றலாகி வந்த புதிதில் ஒரு சம்பவம் நடந்தது, அதன்பின்னரே இன்ஸ்பெக்டர் கடற்கரையை மேலதிகாரம் செய்வதில்லை. அது சின்ன திருட்டு வழக்குத்தான் என்றாலும் அந்த பையனை விசாரிக்கையில் ஹேபிச்சுவல் அஃபெண்டர் என்று புரிந்தது. லாரி ஜாக்கி திருடி மாட்டியிருந்தான். நாலு இழுப்பு இழுத்தால் இதுவரை எத்தனை ஜாக்கியை ஆட்டைய போட்டிருக்கிறான் என்று தெரியவரும். ஆனால் அதற்கு முன்னவே அவனை பிடித்து வந்து புகாரளித்த லாரி ஷெட்காரர் யாரோ சொல்லியோ அல்லது மிரட்டியோ புகாரை வாபஸ் வாங்க வந்திருந்தார். இன்ஸ்பெக்டரின் நண்பர் என்கிற கோதாவில்

“சரி சரி, அந்த பையனை கொஞ்சம் கண்டிச்சு அனுப்பி வைங்க , நான் வாபஸ் வாங்கிக்கிறேன், பொருளு ஏய்ங் கைக்கு வந்துருச்சு ” என்றார் அசால்ட்டாக.

”யோவ் எந்திரிய்யா, எங்களை என்ன குடியரசு தினத்துக்கு டிரம்ஸ் வாசிச்சுகிட்டு போற குட்டப்போலீசுன்னு நினைச்சியா, ஸ்டேசன் கட்டி , உள்ளார லாக்-அப் வச்சு கொடுத்திருக்கிறது என்னாத்துக்கு எவளையும் வச்சு குடும்பம் நடத்துறதுக்கா, ரெண்டு பேரும் சேந்துதான் திருடினிங்கன்னு எழுதி ரிமாண்டுக்கு அனுப்பிருவேய்ன் ஓடியே போயிரு” என்று விரட்டி விட்டிருந்தார். வெளியே பாராவிடம் எதோ கிசுகிசுத்துவிட்டு போனார் அந்த லாரி ஷெட்காரர். அவர் போனவுடன் பாரா போலீஸ் உள்ளே வந்து “இன்ஸ்பெக்டர் அய்யா வீட்டுக்கு வழி கேட்டுட்டு போறாருங்க என்றான்.

மாலையில் வந்த இன்ஸ்பெக்டர், ரைட்டரை அழைத்து ”அதான்

கம்ப்ளைண்ட் கொடுத்தவன் நொணாம்னா கூப்பிட்டு வாபஸ் எழுதி வாங்கிட்டு அனுப்பவேண்டியதுதானே, பெரிய லா படிதான் ஊம்புவிகளோ ‘ என்று சிடுசிடுக்கும் சத்தம் கேட்டவுடனே அவரின் டேபிளில் நிரப்பிய எப்.ஐ.ஆரை கொண்டுபோய் வைத்துவிட்டு “சார், சைன் பண்ணிட்டா ரிமாண்ட்க்கு அனுப்பிறலாம்” என்றார் கடற்கரை. இன்ஸ்பெக்டர் டென்சனாகி எழுந்து போய்விட்டார். காலையில் கிரைம் மீட்டிங் மதுரையில் இருப்பதால் அங்கு போய்விடுவார். அந்த திருட்டு பயலை உக்காரவச்சு சோறு போட்டுக்கிட்டு இருக்கணும் இல்ல எப்.ஐ.ஆரை கிழிச்சி போட்டுட்டு துரத்திவிடனும் ரெண்டே வாய்ப்புதான் உள்ளது என்று மனதில் நினைத்துக்கொண்டு இன்ஸ்பெக்டர் போய்விட்டார். இது ஒரு வகை கெட்டிக்காரத்தனம். திடீரென மேலதிகாரிகள் ரெய்டு வந்தால் ஏன் அக்கூயுஸ்டை கோர்ட்டில் ப்ரொடியூஸ் பண்ணாமல் விருந்துபச்சாரம் செய்கிறீர்கள் என்று கடற்கரைக்குத்தான் மெமோ கொடுப்பார்கள். இதை யோசித்த கடற்கரை, டக்கென்று எப்.ஐ.ஆரில் தனது கையெழுத்தை போட்டு அந்த பயலை தனது புல்லட்டில் நடுவில் உக்கார வைத்து உடன் ரைட்டர் மணிமாறனையும் ஏற்றிக்கொண்டு ஜட்ஜ் வீட்டிற்கே கொண்டு சென்று ரீமாண்ட் புரொடியூஸ் செய்தார். இரவு 8 மணி என்றதும் வாட்சை பார்த்தவாறே ”அவசர அவரசமா ஜெயிலில் அடைக்கிற அளவுக்கு அவ்வளவு தொந்திரவான ஆளா ?” என்று கேட்ட படி காவலில் அடைக்க உத்தரவிட்டார். ஒட்டுமொத்த ஸ்டேசனுக்கும் ஹெட் கான்ஸ்டெபிளில் இருந்து எஸ்.ஐ வரை முதல் தகவல் அறிக்கை என்கிற எப்.ஐ.ஆரில் கையெழுயெழுத்து போட்டு வழக்கு பதியும் உரிமை இருப்பது கடற்கரையின் செய்கையால் தெரியவந்தது. அந்த சம்பவத்தோடு இன்ஸ்பெக்டர் அடங்கிக்கொண்டார். கடற்கரையை கேட்காமல் எதுவுமே செய்வதில்லை. அவரின் வேலை தினமும் காலையில் ரோல்காலின் போது யார் யாருக்கு என்ன டூயுட்டி என்று பிரித்தளிப்பதுதான்.

’ நாளைக்கு குருத்தோலை நாளாம் சர்ச்சிலர்ந்து ப்ரொடக்ட்ஷன் கேட்டிருக்காங்க. வரவர எதுக்குல்லாம் போலீஸ் பாதுகாப்பு கேக்குறதுன்னு ஒரு வகைதொகையில்லாம போச்சு, அவங்களை யாருய்யா வம்பிழுக்க போறாங்க. அடிச்சாலும் இன்னும் ரெண்டு போடுன்னு சொல்ற சாமி கும்பிடுறவுகளை” என்று நரை மீசைக்குள் பல் தெரிய சிரிப்பார்.

போலீஸ் ஸ்டெரந்த் கம்மியா இருக்குன்னு ரிப்ளை கொடுங்க சார், வேணுமின்னா ஹோம் கார்டு நாலு பேர அனுப்புறேன்னு சொல்லுங்க சார் ! “ என்று கடற்கரை சொல்லுவார்.

அதான் கடற்கரை வேணுங்கிறது “ என்று ஸ்டேசனில் அத்தனை போலீஸ் நிற்கும் காலை 7 ரோல்காலில் அந்த நிலைய அதிகாரி சொல்லும்போது மற்ற போலீஸ்காரர்களுக்கு இயற்கையாகவே கடற்கரை மீது மரியாதை வந்துவிடும்.

கடற்கரை உள்ளே வந்து வக்கீல் குமாஸ்த்தா வந்த விவரத்தை சொல்லவும், இன்ஸ்பெக்டர் எழுந்தபடி
’கடற்கரை, என் பொண்ணும் மாப்பிளையும் வந்திருக்காங்க நான் அவங்களை கவனிக்கனும்,வேலை இருக்கு இந்த கேசை நீயே பாரு, பொம்பளைய வேற ஒக்கார வச்சிருக்க – இழுக்காம முடிச்சுவிடு” என்றபடி தொப்பையின் கீழாக கிடந்த ஃபேண்ட்டை இழுத்து மேல் வயிற்றின் மேல் போட்டு டிரைவரை கூப்பிட்டு வண்டி எடுக்க சொல்லி கிளம்பிவிட்டார்.

’வாங்கடி மாப்ளைகளா, உங்க சாராயத்தை மட்டும் அவய்ங்க வாங்கி குடிக்கனும், அவனுங்களை அரசாங்கம் கொடுத்த நெலத்துகுள்ள கால் வைக்கவுட மாட்டீங்க . இருங்க இருங்க உங்க பருப்பை கடையுறேன் ’ என்று மனசுள் நினைத்தவாறே இன்ஸ்பெக்டரின் அறையை விட்டு வெளியே வந்தால் குமாஸ்தா ரங்கசாமி நின்றபடியே இருந்தான்.
கடற்கரைக்கு ரங்கசாமியின் சிரிப்புதான் பிடிக்காது, நெருப்பை அணைக்க சீமெண்ணை ஊத்தின கதையாய், அந்த சிரிப்புடனே அருகில் வந்தான்.

சார், கோவிச்சுக்ககூடாது இன்னிக்கு கோர்ட் லீவு, நாளைக்கு தேதிய இன்னைக்குன்னு நெனச்சுகிட்டு இருக்கிங்க போல, நீங்க தேவையில்லாம 40 மைல் அலையக்கூடாதுன்னுதான் சொல்றதுக்கு நின்னேன்ங்க சார்” என்றான்.

பகலில் பைக்கில் போகும் போதும் மறந்தவாக்கில் ஹெட்லைட் எரியவிட்டு ஓட்டி வந்தால் சின்னஞ்சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அது எதோ கொலைக்குற்றம் போல் எரியுது எரியுது என்பார்களே அதன் உட்பொருள் “ பகலு பளபளங்குது குருடான்னு வெளக்க போட்டுகிட்டு போறானே, இவன்லாம் எங்கிட்டு திருடன புடிக்கிறது “ என்கிற நக்கல்தான்.

எல்லா மயிரும் தெரியும், உம்ம வேலைய பாரும் – என்ற அடித்தொண்டையின் மெல்லிய உறுமலோடு கடற்கரை சொல்ல ரயில் பூச்சி சுருண்டு கொள்வதை போல ரங்கசாமி கூனிக்குறுகி ஓடிப்போனான்.

நேரே ரைட்டர் அறைக்கு போய் ” மணிமாறன், என் ரூமுக்கு வாங்க என்று சொல்லி விட்டு தன் அறையில் போய் அமர்ந்தார்.

ரைட்டர் மணிமாறன் வந்து, அய்யா சொல்லுங்கய்யா என்றதும்.

மோகன் போலீஸ் பலகாரம் சாப்பிட போயிருக்காப்ள வந்தவுடனே அவனுங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு ஸ்டேட்மண்ட் வாங்கிக்குங்க அதாவது கடுக்காய் வாங்கிட்டு வரச்சொல்லியிருந்தாங்க செவத்தியாரும், எங்க பக்கத்து தோட்டத்துகாரர் ஊர் பெரியதனம் சவரிமுத்துவும், சரின்னு சொல்லி வாங்கி கொடுத்திட்டு அந்த காச வாங்கத்தான் நின்னுகிட்டு இருக்கும் போது போலீசார் எங்களை கைது செய்தனர்ன்னு எழுதி கையெழுத்து வாங்கிடுங்க. மோகன் போலீசை வச்சு அங்க மச்ச அடையாளம் குறிச்சு டவுசரோட உக்கார வைய்யுங்க, நான் ஆயுத்தப்படை மைதானம் போய் லேடி போலீஸை அனுப்ப சொல்றேன், லேடி போலீஸை வச்சு அந்த பொம்பளைகிட்ட ஸ்கார் மார்க்கும் பாடி மார்க்கும் எடுங்க, அவளை அக்கூயுஸ்ட் முணா போடுங்க ஏ 1 செவத்தியாரு ஏ 2 சவரிமுத்து புரியுதா எப்.அய்.ஆர் எவ்வளவு சீக்கிரமா முடியுமோ அவ்வளவு சீக்கிரமா ரெடியாகனும் புரியுதா, அப்படியே அந்தக் கண்டாரொலி மேல தனியா மோகனை அடிக்க வந்தா, கொலை செஞ்சுடுவேய்ன்னு மிரட்டினா, காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தான்னு 353ம் 506ம் தனி எப்.ஐ ஆரா போட்டு வைய்யு, குறைஞ்சது ஒரு வருசம் களி திங்க உட்டாத்தான் வாய் கொறையும் என்றார். கிட்டதட்ட 1000 சொற்கள் வரக்கூடிய செய்தியை முன்று வரிகளில் கடற்கரை சொல்லிவிட்டார். ஆனால் மணிமாறனுக்கு இதுபோதும் எப்படியெல்லாம் வார்த்தைகள் இருக்கவேண்டுமோ அப்படியெல்லாம் கோர்த்து எழுதிவிடுவார்.

பசிக்க துவங்கியது ரயில்வே கேட்ட்டில் காத்திருந்த போது சாப்பிட்ட டீ ஒரு மணி நேரத்துக்கு மேலவா தாங்கும். புல்லட்டை எடுத்து முத்தையா கடையை நோக்கி போனார். காலை 5 மணியிலிருந்து 11 மணி வரைக்கும் சூடான இட்லியும் ஆட்டு நெஞ்செலும்பு மிளகு சாப்ஸும் கிடைக்கும். இன்று ஞாயிறு என்பதால் நுரையிரலை பொடிசா வெட்டிப்போட்டு கடலைப் பருப்போடு காரமாய் பிரட்டல் வைத்திருப்பான். இட்லி அது பாட்டுக்கு கணக்கில்லாம உள்ளார போயிட்டே இருக்கும். முத்தையா கடை என்பது ஒரு தூங்கி வாகைமரத்தின் கீழ் பழைய லாரி தார்ப்பாயின் தயவில் முன்று பெஞ்சுகளில் நடக்கிறது, அவ்வளவே. ஆயுத்தப்படை போகவேண்டிய அவசியமில்லாமல் அதைச்சேர்ந்த ஹெட் காண்ஸ்டபிள் ஒருவரை வழியில் பார்க்க நேர்ந்தது, உடனே ஒரு பெண் போலீசை அனுப்ப சொல்லிவிட்டு கடை அருகே வண்டி நிறுத்தி தாழ்வாக கிடந்த தார்பாயினுள் தலையை விட்டு நுழைந்தார். உள்ளே பெரிய தூக்குப்போணியை காட்டியபடி “அஞ்சஞ்சு இட்லியா முணு பொட்டணம், இதுல ஒரு நாலு நுரையிரலு கொழம்பு ஊத்திரு, பொன்மாயன் வக்கீல் சாருக்கு” என்றபடி செவத்தியாரு நின்று கொண்டிருந்தான். சட்டை காலரை பின்னால் இருந்து பிடித்தபடி “இன்னோரு அஞ்சஞ்சா அஞ்சு பார்சல் அதே தூக்குப்போணியில அஞ்சு நுரையிரல் கொழம்பு ஊத்தி கட்டு முத்தய்யா, தூக்குப்போணி கொழம்புக்கு போதுமா ” எனக் கேட்டபடியே ‘சரிதானே செவத்தியாரு, இங்க அவியுது ஸ்டேசனில போய் சாப்பிட்டுக்கலாம் என்று சிரித்தார். ஆற்றாமைக் கண்களோடு அவரை ஏறிட்டான் செவத்தியார் .

( தொடரும் )

1 மறுமொழிகள்:

  1. 6:45 AM  
    Anonymous said...

    சூப்பர், தொடர்ந்து எழுதுங்கள் பாஸ்.