Wednesday, April 09, 2014

@ 12:50 AM எழுதியவர்: வரவனையான்

என்னாதான் முன்னமே பேசித்தான் வைத்திருந்தவைதான் என்றாலும் போலீஸ் ஜீப்பில் குற்றவாளியாக ஏற்றும் போது ஏமாந்துவிட்டமோ என்கிற அச்சம் வந்துவிட்டது சார்லிக்கும் பெனடிக்கிற்கும். ஜீப்பின் இருக்கைகளுக்கு இடையே கீழே உக்கார வைக்கப்பட்டிருந்த இருவரின் கண்களிலும் வலையில் அகப்பட்டுக்கொண்ட முயல்களின் அச்சமிருந்தது. உருவத்திற்கு பொருத்தமில்லா கீச்சுக்குரலில் ’தீப்பெட்டிருக்கா என்று டிரைவர் காளிதாஸ் சைகையில் கேட்க ’இருக்குங்க’ என்றபடி பெனடிக் எடுத்து நீட்டினான்.”அது யாரு நெலம், உங்களுதுன்னு சொன்னீங்க” , சந்தேகமாக கேட்டார். ’சார், எங்களுக்கு கவர்மெண்ட்டு கொடுத்ததுங்க. நல்லமநாயக்கன்பட்டி வாத்தியாரு தோமஸ் அய்யாதான் எங்க சார்பா சப் கலெக்டருக்கும் தாசில்தாருக்கும் எழுதினது. போன கிறிஸ்துமஸுக்கு துணி வாங்க போனப்ப எங்ககிட்டவெல்லாம் கைநாட்டு வாங்கி மனுப்போட்டாரு. இந்த கிறிஸ்துமஸுக்கு மந்திரி ராகவன் ஆளுக்கு முணு ஏக்கரு கொடுத்தாருங்க. எங்களோட சேத்து 18 பேருக்கு கொடுத்தாரு. மித்தவுங்களுக்கெல்லாம் கொடுத்த இடத்தில இருந்து பாத்தா  ரெண்டெல்லப்பாறை பெரிய கோயிலு லைட்டு நல்லாத்தெரியுற மாதிரி காலனி பக்கத்திலயே இடம்.  எங்களுக்கு அடிவாரத்தில கொடுக்கிறேன்னுட்டு கடசில இங்கின கொடுத்திட்டாக “ என்றான பெனடிக் .
விழா நடந்த அன்று தாசில்தார் பட்டியலை ஒவ்வொருவர் பெயர் வாசித்து மேடைக்கு அழைத்த போதும் காலனி மக்களுக்கு ஒரே கூத்தாகயிருந்தது.  பெனடிக்கிற்கும் சார்லிக்கும் எப்பவும் ஆகாது, அவர்கள் பகை என்பது குடும்பப்பகை, ஜென்மப்பகை . விழா நடந்த நாளிற்கு முதல் நாள் கூட  இருவரின் மனைவியும் வெளக்குமாத்தால் அடித்துக்கொண்டனர். “ தோல் ஷாப்பு பாய் கூட படுத்தவளே “  - மணியடிக்கிற கோயில்பிள்ளைகூட   படுத்தவளே” என்று இருதரப்பின் ராஜாங்க ரகசியங்களை சனங்கள் நடுவே குன்றிலிட்ட விளக்காய் ஏற்றி வைத்தனர் .  குழாயடியில் பெனடிக் இருந்தால் சார்லி அந்த பக்கம் போகமாட்டான். தோட்டங்காட்டில் வேலை என்றாலும் பெனடிக் தலை தென்பட்டால் கஞ்சியில்லாம இருந்தாலும் இருக்கலாம் இவன் சகவாசம் வேண்டாம் என்று இருந்துவிடுவான்.  அப்படியே போனாலும் பெனடிக் சாடை பேசாமல் விடமாட்டான். சார்லியின் அம்மாள் அவன் தந்தையுடன் இருந்து பொழைக்கவில்லை.

சார்லிக்கு நேர்மார் அந்தாள். வேட்டைக்கு போறேன்னு சொல்லிட்டு போய் நரியை புடிச்சு உரிச்சு கேழையாட்டு கறின்னு , சாராயம் குடிக்க வந்தவய்ங்க கிட்ட நெருப்புல வாட்டி வித்துருவாரு. அந்த காசில சாராயத்தை குடிச்சிட்டு வந்து படுத்துகிட்டு ஒரே அலம்பலுதான். விடிஞ்சதும் எல்லா ஆம்பளைகளும் வேலைக்கு கிளம்பி போகும் போது இவரு வேப்பங்குச்சிய கடிச்சிகிட்டு 

” யாரவது காசு கொடுத்தா, எவன் பொண்டாட்டி எங்க போனா எத்தன தடவ ஏறினாளுன்னு டிரிப் சீட்டு எழுதி வைக்கிறேன்”னு சொல்லி கடுப்பை கெளப்புவாரு.  

“ எட்டணா காசு கொடுத்து மன்னாரில கப்பலேறினா மதியம் தாசய்யர் கடை ஊத்தாப்பம் சைசில ஊளி மீனு வறுவலோட சோறு போட்டு இந்தியாவுல இறக்கிவுடுவாய்ங்க கப்பல்லர்ந்து, அப்படியே இறங்கினா ரயிலு நிக்கிற இடத்திலர்ந்து, ராம்நாட்டில நல்ல படமா இல்ல மதுரையிலேயான்னு போஸ்டர் பாத்து டிரையினுல டிக்கட்டெடுத்து வந்து சினிமா பாத்துட்டுப்போவேன்”   

என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கண்ணில் நீர் துளிர்த்துவிடும் தன் குடிசையைப் பார்த்து “ஒரு நா ஓழுக்கு ஒடம்பட்டாளேங்கிற நன்றிக்கு வந்து இங்க சீப்படறேன்” என்று கத்துவார் . அந்த குடிசையில் அவர் மட்டும்தான் இருந்தாலும் அதில் அவரின் மனைவி இன்னும் இருப்பபது போலவே பேசித்திரிவார்.

அவரின்  இளமைக்காலம் நன்றாக இருந்தது என்று மட்டும் சுற்றியுள்ள பெரியவர்களுக்கு புரிந்தது. எப்போதுமே கொண்டாட்டக்காரனாய் இருப்பவனிடத்தில் ஒரு பெருஞ்சோகம் புதைந்திருக்கும் என்பதை முதலில் கண்டுபிடித்தது  விசுவாசம் தான். விசுவாசத்திற்கு 70 வயதாகியது,  மூன்று கணவன்களுடன் வாழ்ந்து முடித்திருந்தாள், “ ஏண்டாய்யா நல்ல பொழப்ப பொழச்சுபுட்டு இங்க வந்து கோமாளியாட்டமா ஆடிகிட்டு திரியுற,புடிக்கைலேன்னா எங்கிட்டாவது ஓடிப் போயிடய்யா !” என்றாள் யாருமில்லாத பொழுதின்றில். குடிவெறி கலைந்துவிடுமளவுக்கு  அழுதவாறே சொன்னான் “ மொத புள்ள அல்போன்சா மொகத்த பார்க்காம இருக்க முடியலம்மா, எங்க அம்மா போலவேயிருக்கா , ஒரு நா ராத்திரி இல்லைன்னா மக்க நா நெஞ்சிலேறி படுத்துக்கிறா. பொட்டப்புள்ள அப்பன் ஒடம்பு சூட்ட பழகிட்டா நாய்க்குட்டியாட்டம் கெண்டைக்காலை கவ்விகிட்டுவிடாதுங்கிறது சரியாத்தான் தாயி இருக்கு”

”தின்னவேலி தாண்டி வள்ளியூருக்கு தெக்கால எங்கிட்டோ கெடந்த சிறுக்கி தாயி அவ, ராம்நாட்டில இருந்து தங்கிச்சிமடத்துக்கு ஒரு டொங்கிரி லாரி போச்சு, காலையில ஒரு கப்பலு கெளம்புதுனு பேசிகிட்டாய்ங்க, செரி அங்கின போயி எவனையாது கெஞ்சிக்கெதறி ராமேஸ்வரம் போய் கப்பலேறிடலாம்ன்னு லாரியில ஏறின அன்னைக்கு பிடிச்ச கெரகம், அவளே போனாலும் விடமாட்டேங்கிது” 

அப்படியான குடும்பப்பகையாளிகள் இருவருக்கும் அடுத்தடுத்து அழைத்து கொடுத்த போதே கொல்லென்று சிரித்த மக்கள்,  அடுத்த நாள் தலையாரி வந்து யார் யாருக்கு எங்கெங்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லும் போது சிரித்து குமித்துவிட்டார்கள்.    .கேணி மேட்டுக்கு போனவர்கள் வந்தனர். “ ஜீப்பின் அருகே வரவர ஃப்யூலா கெஞ்சிக்கொண்டே வரும் சத்தம் கேட்டது. பின்னாடிக்கதவை திறந்து படியே “ போறவெய்ன் வாறவேய்ன இவ படுக்க கூப்பிட்டானு கேசெழுதி திருச்சிக்கு அனுப்பு, அங்கதான் தேவெடியாவ பூராம் மொட்டையடிப்பாளுக” என்றபடியே அவளின் செம்பட்டை பாவியிருந்த கூந்தலை சுருட்டி பிடித்துக்கொண்டு வந்த கடற்கரை அதை வைத்தே ஃப்யூலாவை வண்டியிலேத்தினார்.

அய்யா சாமி என்று அதுவரை ஜீப்பினுள் புலம்பிக்கொண்டிருந்த ஃப்யூலா,  சிறுமலை செட் அருகே மூடிய  ரயில்வே கேட்டிற்காக ஜீப்பை நிறுத்தி அதிகாரிகளும், காவலர்களும் திசைக்கொரு பக்கம் புகைக்கபோன போது, பெனடிக்கிடமும் சார்லியிடமும் “பயப்பிடாதீங்க, மாமா கொஞ்ச நேரத்தில வக்கிலோட வருவாரு” என்றாள். 
( தொடரும் ) 
    0 மறுமொழிகள்: