Thursday, March 27, 2014

@ 6:10 PM எழுதியவர்: வரவனையான்

( மார்ச் 26 -2014 தேதி இரவு எழுதத்துவங்கினேன் இந்த நாவலை இங்கு அதன் RAW வெர்சன் புத்தகமாக வரும் வரை வெளியிடுவேன் )
                                            பைசாசன்                               


அத்தியாயம் 1

அந்த காவல் நிலையம் நகரத்தின் மையத்திலிருந்தது. மையத்தில் இருந்தாலும் அது வடக்கு காவல் நிலையம் என்றே அழைக்கப்பட்டது. அது போலவே மேற்கு காவல் நிலையம் வடக்கிலும், தெற்கு காவல் நிலையம் மேற்கிலும் இருந்தது. அவை திசை மாறியிருந்தாலும் அவையின் சட்ட வரம்பிற்காக அப்படி குறிப்பிடப்பட்டிருந்தது

பெருங்கிராமமாக இருந்து நகரமாக அவ்வூர் மாறி 30 ஆண்டுகள்தான் ஆகியிருந்தால் பெரு நகரத்திற்குரிய கூறுகளும் இல்லை அது போல ஒரு பேரூராட்சியின் பரப்பை போல் அரைமணியில் முழு ஊரையும் வெறும் கால்களில் அளந்துவிடுமளவிற்கு சிறியதாகவும் இல்லை.

சின்ன வியப்பென்னவென்றால் கிழக்கு காவல் நிலையம் ஊரின் கிழக்கிலேயே இருந்ததுதான். இதில் ஒவ்வொரு நிலையத்திற்கும் ஒரு குணமிருந்தது. வடக்கு நிலையத்திற்கான சட்ட எல்லைகள் முழுவதும் நகரத்திற்குள்ளே வரும்,அதனால் அது சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும்,அதனை கண்காணிக்கவும், நிறைந்திருக்கும் அரசு அலுவலகங்களின் அதிகாரிகளோடு இணைந்து செயல்படும் குணயியல்பு கொண்ட காவலர்களால் நிறையப் பெற்றிருந்தது. மேற்கு நிலையத்தில்தான் நகர திருட்டு தடுப்பு பிரிவு இருந்தது. காணும் யாரையும் ஏன் சமயங்களில் தன்னைக்கூட சந்தேகப்பார்வையுடன் பார்க்கும் காவலர்களும், குற்றவாளிகளை கொடூரமாக வதைத்து எத்தகைய உண்மைகளையும் வாங்கிவிடும் திறன் படைத்த காவலர்களும் கொண்டது

சமயங்களில் அந்த சரகத்தின் எல்லைக்குட்பட்டு ரவுடித்தனம் செய்யும் சட்டமீறீகள் கொடுங்காவலர்களால் வெகுவாககவனிக்கப்பட்டுதானாக முன்வந்து ரௌடித்தொழிலிருந்து குறைந்தது சில வருடங்களாவது விலகியிருக்க நேரிடும். இதனால் மேற்கின் எல்லையில் சட்ட ஒழுங்கெல்லாம் மீறப்படும் சாகச வேலைகள் ஏதும் இருக்காது.


தெற்கு நிலையமோ இவையிரண்டுடன் ஒப்பிட முடியாத அளவுடன் வித்தியாசமாய் சவசவ என என்னேரமும் திருவிழாக்கூட்டமாய் இருக்கும். அந்த நகரத்திற்கு அடிமட்ட வேலைகள் செய்யும் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமம் ஒன்றும், அந்நகரத்தின் கூலித்தொழிலாளர்கள் நிறைந்த மிகவும் பிற்படுத்தபட்ட மக்களால் (இரண்டு சமூக மக்களும் தங்களை ஆண்ட பரம்பரை என்றே சொல்லிக்கொள்கிறனர், அதற்காக வரலாற்றிலிருந்து சில மன்னர்களின் பெயர்களையும் எடுத்து வந்திருக்கின்றனர் ) நிரம்பபெற்ற ஒரு கிராமமும் இருந்தது.

அந்த இரண்டு கிராமத்தை மேய்ப்பதே தெற்கு கச்சேரிக்கு முழு நேர வேலையாக இருந்தது. சொல்ல மறந்துவிட்டேன், நகர மக்கள் காவல் நிலையம் என்று சொல்வதில்லைகச்சேரிஎன்றே சொல்வார்கள். இரவுகளில் நடக்கும் விசாரணைகளின் போது கேட்கும் அலறல் சத்தத்தினால் அப்படி அழைக்கப்பட்டது. காலையில் நொண்டியடித்துக்கொண்டு கைவிலங்கொடு கோர்ட்டு ஏட்டய்யாவினால் சைக்கிளில் ஏற்றி நீதிமன்றன்றத்திற்கு அழைத்து செல்லப்படுபவரே இரவில் கச்சேரியில் பாடியவித்துவான்என்று அருகில் உள்ளோர் அறிந்து கொள்வார்கள். கிழக்கு கச்சேரி பற்றி கொஞ்ச நேரம் கழித்து பாப்போம் முதலில் வடக்கு கச்சேரியின் இந்த கோடைக்கால காலையில் என்ன நடக்குதென பார்ப்போம்.

வடக்கிலிருந்து வந்து போல கிழக்கினை நோக்கி திரும்பும் இடத்தில் தெற்கு பார்த்திருந்து வடக்கு கச்சேரி.

யோவ் , பாரா பாக்குற மம்புட்டி, இங்க வாயாஎன்றபடி புல்லட்டிலிருந்து இறங்கி வந்தார் கடற்கரை செல்வம். அவர்தான் சர்க்கிள் இன்ஸ்பெக்டர். பைசாவெல்லாம் வாங்கமாட்டார். மேற்கு கச்சேரியிலிருந்தவரை இங்கு மாற்றி ஒரு வாரம் பத்துநாளே ஆகியிருந்தது. அவருக்கும் இங்கு வரவெல்லாம் இஸ்டமில்லை. ஒரு மாதம் முன்பு புதியதாக கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் என்று எதோ படிப்பு மெட்ராஸில் வந்திருக்கிறது அதில்தான் படிப்பேன் என்று மகன் ஒற்றைக்காலில் நிற்கவும் அவனை அழைத்துக்கொண்டு சென்னைக்கு விடுமுறையில் போயிருந்தார்.


அந்நேரம் பூட்டிய மில்லில் திருடியதாக வெங்கலப்புடுக்கு என்கிற கந்தவேலுவை விசாரணைக்கு கச்சேரிக்கு அழைத்து போயிருக்கின்றனர். போன இடத்தில் ’மானம் வரின் உயிரை மயிராய் நினைத்து உதிர்த்துவிடும்’ குலக்கொழுந்தான பிரபலஅபேஸ் மன்னன்வெங்கலப்புடுக்கு அலைஸ் கந்தவேலு அருணாகயித்தால் லாக்கப் கம்பிக்குள் நின்று கொண்டே நாண்டுவிட்டான். இப்படி சுலபமான வழிகளை ஜாப்பானிய ராணுவத்தினருக்கு வெங்கலப்புடுக்கின் மூதாதையர்களான இரும்பாலனதோ அல்லது அதற்கு முந்தைய கற்புடுக்கோ கற்றுக் கொடுத்திருந்தால் உலகப்போரின் போது களத்தில் தோல்வி சூழும் போது கைதாக விரும்பாமல் தொப்புளுக்கு கீழான இரண்டாவது இஞ்சில் கத்தியை சொருகி கடும் வலியுடன் தற்கொலை கொண்டிருக்கமாட்டார்கள்.

கடற்கரைசெல்வம் மெட்ராஸிலிருந்து பொலபொலவென விடியும் போதும் பாண்டியனில் இருந்து இறங்கினார். நாளிதழ்களில் கொட்டை எழுத்துகளில் கச்சேரியில் எழவு விழுந்திருந்த செய்தி வந்திருந்தது. செய்தாள்களின் போஸ்டர் பார்த்தவுடன் இறங்கிய ரயிலில் ஏறிக்கொண்டார். மகனிடம் ”வீட்டிற்கு யார் வந்தாலும் அப்பா 10 நாள் லீவு இருந்தாலும் லாக்-அப் டெத் விஷயமாகத்தான் மருதைக்கு எஸ்பி அய்யாவை பார்க்க போயிருக்கிறார் என்று சொல் என்று அனுப்பி வைத்தார்

அதே டிரையினில் திடுதிடுவென்று ஓடி வந்து அவரின் ஸ்டேசனில் வேலை பார்க்கும். பிச்சைமுத்து இரண்டு பைகளுடன் ஏறினார். கடற்கரையை பார்க்கவும் ரயிலின் மரத்திலான தரை அதிர கப்பார் என்று ஒரு சல்யூட்டடித்தார்.

அய்யா, இப்போத்தான் வர்றீகளா, பெரிசா ஆகிப்போச்சுங்கய்யாஎன்றார்.
என்னத்த எளவுகூட்டித் தொலஞ்சிங்கஎன்றார் இன்ஸ்பெக்டர்.

அந்த சிந்தலக்குண்டுக்காரி மவேன் கந்தவேலு இருக்கான்லையா,. மூடிக்கிடந்த வாளி கம்பேனிக்குள்ள குதிச்சு தேட்டைவுட்டுருக்கான், சேர்மன்நகர் குப்பைக்கடையில திருட்டிரும்பை எடை போட்டுகிட்டு இருக்கும் போது பெரியாம்பிளை ஏட்டய்யா எதார்த்தமா போனவரு புடிச்சாந்திந்திருக்கார்என்றபோது ரயில் விசில் அலறியது. இஞ்சினுக்கு இரண்டாவது பெட்டி என்பதால் கரும்புகையடித்தடித்து எதோ பாண்டியன் விரைவு ரயிலின் நீராவி இஞ்சினை விடியவிடிய கரியள்ளி நெருப்பில் போட்டு மெட்ராஸிலிருந்து கடற்கரைதான் ஓட்டி வந்தது போலிருந்தார். அவரின் முகம் பார்த்து பிச்சைமுத்துக்கு கொஞ்சம் மகிழ்ச்சி. ’புதைத்து புடுங்கிய பொணம்என்கிற உதாரணம் அவரின் மனதில் வந்தது.

இஞ்சின் ஓட்டுறவன் பொண்டாட்டிக்கி சொல்லுறான் போல பொச்ச கழுவி வய்யின்னு,... மருதைக்கே கேக்கும் இவன் அடிக்கிற விசிலுஎன்று ரயிலின் நீண்ட விசிலுக்கு அலுத்துக்கொண்டார் கடற்கரை.

சொல்லுய்யா அவன் அடிச்சா அடிக்கட்டும் என்றார் ஏட்டை பார்த்து.

பெரியாம்பிள்ளையும் நேரு போலீஸும் விசாரிக்கட்டும்னு சின்னய்யா சொன்னாருங்க

யோவ் கையில பொருளோட மாட்டினதுக்கப்புறம் என்ன மயிரை அவன்கிட்ட விசாரிக்கிறீங்க, நாலு நாளு ஆள் இல்லைன்னா பூராத்தையும் நீங்களே நறுவிசா நக்கனும்ன்னு நெனைப்பிங்ளே

அய்யா, .எஸ்பி பொண்ணோட மாமனாரும் அத்தையும் பழநி கோயிலுக்கு கூட்டி போகச்சொல்லி போன் வந்து நான் போய்ட்டேங்கய்யா

வழக்கமா இந்த பண்டார வேலையெல்லாம் நார்த் போலீசுதானே பாப்பாங்க, நீ ஏதும் முருகனுக்கு வேண்டுதல் வச்சிருந்தியா

இல்லங்கய்யா, வடக்கு சரகத்தில கம்யூனிஸ்ட் மாநாடாம், அதான் ஸ்ட்ரெந்த் பத்தலைன்னு, நம்ம ஸ்டேசனுல இருந்து போக சொல்லிட்டாங்க, அப்புறங்கய்யா, ராத்திரி இஞ்சி விக்கிற கதிரேசனுகிட்ட ஒரு பவுண்ட் எடுத்தாந்து சர்பத் கிளாசுல பாதி ஊத்தி அதுல முட்டை உடைச்சி ஊத்தினாரு பெரியாம்பளை, அப்படியோ இட்லி கணக்கா முட்ட பொரிஞ்சிடுச்சு

சரிதான், போதையில் அடிச்சே கொன்னுட்டானா அந்தாளுஅந்த அவுசாரி மகனெ இஞ்சி விக்கவுடாதீங்கய்யான்னு சொன்னேன், இப்படியாவும்ன்னு அப்பவே தோணுச்சி, ம்ம்.. சொல்லு

அய்யா அந்த வாளி கம்பேனிக்காரரு வந்து இதுவரைக்கும் 400 கிலோ காணோம் நல்லா விசாரிங்கன்னு சின்னய்யாகிட்ட சொல்லிட்டு அவரு வீட்டுக்கு நாலு வாளியும் ரெண்டு சேவலும் கொடுத்துவிட்டாராம்.’ சின்னய்யாவும் அதான் கொஞ்சம் விசாரிங்கன்னு சொல்லிட்டு போனாரு

அந்தாளே சீட்டிங்சேலத்துல மஞ்ச நோட்டிஸுட்டுட்டு அந்த காச இங்க போட்டு மச்சினன் பேரில கம்பேனி நடத்துறான்

அய்யா, ஏற்கனவே லாக்கப்பில லாரி பேட்டையில ஜாக்கி லவட்டின செல்வம்ன்ற கிளினர் இருந்திருக்கிறான், பெரியாம்பளை வெங்கலப்புடுக்கை அடிஅடின்னு அடிச்சி விசாரிச்சிருக்காருஅவன் சாமி சத்தியமா இல்லைன்னு சொல்லியும் கேக்கலையாம். அப்புறமா ரொம்ப அக்கிரமம் பண்ணிருக்காருங்கய்யாஅந்த செல்வத்த அடிச்சி இவனுத புடிச்சி வாயில வைக்க சொல்லிருக்காரு

யாரு பெரியாம்பிளை வாயிலையா

இல்லங்கய்யா, வெங்கலப்கந்தவேலோட அத எடுத்து செல்வம் வாயில வச்சு எதோ செய்யசொல்லிருக்காருய்யா

அதுக்கு செல்வம் உம் பொண்டாட்டிய கூட்டியா அங்க வைக்கிறேன்னு சொன்னான் போலாங்கையா

இந்தாளு உங்களுது மாதிரி பெரிய லத்தி எடுத்து செல்வத்தை அடிக்கப் போக அடியப்பூராம் குறுக்கால விழுந்து கந்தவேலு வாங்கினதுல தலை பொளந்துகிச்சுங்கய்யா ! விடிய வரைக்கும் செல்வம் கத்தியிருகான் யாராவது வாங்கண்டுகச்சேரி சத்தம்ங்கிறாதால யாரும் கண்டுக்கலைய்யா. ரத்தம் நிக்காம போயி செத்துட்டான், நேரு ஏட்டய்யா காலையில ரோல்காலுக்கு வந்து பாத்தவரு பதறிப்போய்ட்டாராம். அந்நேரம் ஸ்டேசனை கூட்டி வாசத்தொளிக்கநெளிசல்வந்திருக்கான் அவனைக் வச்சு பாடியை அண்ணாகயித்த கழுத்துல மாட்டி நிப்பாட்டியிருக்காங்க

ஃபாரசின்க் போட்டோக்காரரு திருமாறனும், தினமுரசு போட்டோகாரரும் வந்து படம் புடிச்சிட்டு போயிட்டாங்களாம் மித்த யாருக்கும் தெரியாம கணக்குபிள்ளைய கூட்டியாந்து காட்டி அவரு போயி தாசில்தாரையும் சரி பண்ணி நேரில கையெழுத்து வாங்கியாச்சு, பின்ன சூசைட்டுன்னு எப்..ஆரும் போட்டாச்சு. அதுவரைக்கும் எல்லாம் சரியாத்தாங்கய்யா போயிட்டிருந்துச்சாம், போட்டோ எடுகிட்டிருந்த நேரத்தில அந்த செல்வம் பய லைன்வுட்டுட்டான். ஒடீன தாயோளி கம்யூனிஸ்டுக கூட்டதுல போய் சொல்லிட்டான்.

கட்டழகு மாமா பொட்டழகு பூமா.. விட்டுபுட்டு ஓடாதே வெட்கங்கெட்ட டோமா வெட்கங்கெட்ட டோமா வெட்கங்கெட்ட டோமாபேட்டரிக் கட்டை ரேடியோவின் பாடல் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுஸ்தாபனதிலிருந்து ரயிலொசையுடன் சரிக்கு சரியாய் மல்லுக்கு நின்றுகொண்டிருந்தது.

கடற்கரை செல்வத்துக்கு அதன் பின் என்ன நடந்திருக்கும் என்று முழுவதும் தெளிவாய் ஆரம்பித்தது. போன மாதம் இதே கம்யூனிஸ்டுகள் அவரின் மேற்கு சரகத்தில்தான் மாநாடு நடத்த அனுமதி கேட்டு வந்தார்கள். இவர் காளியம்மன் கோயிலுக்கு மலைக்கொழுந்தாபிள்ளை மண்டகப்படி நடத்துவதால் அனுமதி மறுக்கப்படுகிறது என்று மறுத்து அனுப்பிவிட்டார். அந்த காளியம்மன் கோயில் எளிய சாதியினர் கும்பிடுவது அதுக்குள்ளேகூட பெரிய சாதிக்காரர்கள் போகமாட்டார்கள் பின்னர் எப்படி மலைக்கொழுந்தாபிள்ளை மண்டகப்படி நடத்துவார் என்று கம்யூனிஸ்ட்கள் எதிர் குரல் எழுப்பினர்.

இதான்யா, ஊருக்குள்ள ஒரு நல்லதும் நடந்துறக்கூடாது. எவனும் ஒண்ணு சேர்ந்துடக்கூடாது. உங்களுக்கு பொசுப்பொசுன்னு ஆயிடும். சும்மாவா ஊரே உங்கள கொக்கி பார்ட்டின்னு சொல்றாய்ங்கஎன்று ஆட்காட்டி விரலை தூண்டில் முள் போல் வளைத்துக்காட்டினார் கடற்கரை.

இந்த கஞ்சிக்கு செத்த கம்யூனிஸ்ட்கள் நார்த் இன்ஸ்பெக்டர் திருமலைசாமியிடம் கெஞ்சிக்கூத்தாடி அவன் சரகத்தில அனுமதி வாங்கிருப்பானுங்க. இவனுங்க கெஞ்சவே வேணாம் அவனே இளிச்சவாயந்தான், ஆனா பெரிய ஓழன் . நல்லா துட்டு வாங்குறான் பொண்டாட்டிய அன்னைக்கு மாரியம்மன் கோயிலுக்கு புது லாம்பி ஸ்கூட்டரில கூட்டியாந்திருந்தான். நாம வெறும் வீராப்பு காட்டி டீசல் புல்லட்டை வச்சுகிட்டு லோலடிக்கிறோம். கூடிய சீக்கிரம் ஓதமே விழுந்துடும் இந்த டீசல் புல்லட்டை ஸ்டார்ட் செஞ்சு செஞ்சு என்றும் நினைத்துக்கொண்டார்.

சரித்தான் எப்படான்னு காத்திருந்திருந்திருப்பாய்ங்க வகையாக இந்த விஷயம் மாட்டவும் வஞ்சம் தீர்த்துகிட்டாய்ங்க என்று முடிவு கண்டவர் அப்புறம் என்னய்யா ஆச்சு என்றார் பிச்சைமுத்தை பார்த்து.

'மாநாட்டிலிருந்த அம்பூட்டு பேரும் ஸ்டேசன் வாசலில வந்து நீதி கேக்குறோம்ன்னு ஒக்காந்துட்டாங்க பெரிய அய்யாக்கும் அவங்களே தந்தியடிக்கவும் அவரும் வந்துட்டாரு என்னையும் தவிர ஸ்டேசனில எல்லாரையும் சஸ்பெண்ட் பண்ணிட்டாரு. பெரியாம்பிளைய கிழக்கு ஸ்டேசனில ஒக்காரவச்சிருக்காங்க உடனே போஸ்ட்மார்ட்டம் பண்ண பெரிய டாக்டருட்டையும் சொல்லிட்டு போயிட்டார். பிஎம் ரிப்போர்ட் பாத்துட்டு சொல்றேன் பெரியாம்பிளை மேல எப்..ஆர் போடுறதா வேணாமாம்ன்னு போகும் போது சொல்லிருக்காரு. அந்த இந்தான்னு பாடியை கோயிந்தாபுரம் சுடுகாட்டுலேயே எரிச்சாச்சுங்கய்யா' என்று முடித்தார்.

12 கேஸு இருக்கு அதும் போக எந்த வாய்தாவுக்கும் போகாம அதுலாம் ஒரு தனி கேஸாகி பிடிவாரண்டே அஞ்சாறு இருக்கும் அந்த திருட்டு்த்தேமகனுக்கு

எதோ நடந்தது நடந்து போச்சு அப்பாவி சப்பாவிக்கு இப்படியாச்சுன்னா சரி நியாயம் கேளு ரைட்டு. இப்படியாளுக்கு வக்காலத்துக்கு வர ஆளுகளை பாரேன்ன்னு கோவம் கோவமாய் வந்தது.

கையில என்னய்யா பெரிய பைஎன்றார் ஏட்டை பார்த்து.

நம்ம வெங்கலப்புடுக்குதாங்கய்யா

என்ன அஸ்திய ராமேஸ்வரம் கொண்டு போறீயா

இல்லங்கய்ய அவனோட கொடலு குந்தாணியெல்லாம் ஜாடியில போட்டு கொடுத்துருக்காய்ங்க விஸ்ராவிற்கு

விஸ்ரா என்றால் இறந்தவனின் உள்ளுறுப்பு சோதனை.போலீசு வேலைன்னா சும்மாயில்ல, இந்த சம்பளத்துக்கு, தண்ணியில ஊறிப்போன பொணத்தை எங்கிட்டும் தூக்கிட்டு அலையமுடியாதுன்னு கேணியில கம்மாயில ஊருணியில எதுல மிதக்குதோ அந்த கரையிலையே வச்சு அறுத்து பரிசோதனை பண்ணுவாய்ங்க கூட நிக்கனும். அறுக்குற டாக்டர் ஈரல் அளவுலாம் எடுக்கும் போது குறிச்சுக்கணும். அந்த உப்புன வயித்தை அறுக்கும்போது டொப்புன்னு சத்தத்தோட வயிறு பொளக்கும் போது வீசுமே ஒரு வாடை. இந்த பொழப்புக்கு நாலு பேர புடிச்சுன்னு ஒரு என்ணம் வரும். இதுவுமில்லாம மெயின் ரோட்டில எதும் ஆக்ஸிடெண்ட்ன்னா ஸ்பாட்க்கு போய் வெள்ளைவேட்டி எவன் கிட்டவாச்சும் கெஞ்சிக்கெதறி வாங்கி பாடிய மூடனும். பொம்பளை கிம்பளை எவளாவது அடிப்பட்டிருந்தா அவ நகை நட்ட காப்பாத்தனும். சமணமும் பௌத்தமும் போட்டி போட்டு வளந்த மன்ணில்லையா சங்கடமே படாம காதை மூக்கையெல்லாம் சரட்ன்னு அறுத்து பொட்டு தங்கத்தையும் குசுவிவிட்டு போயிருவானுங்க. தைப்பூசத்துக்கு மாலை போட்டிருக்கும் போலீசை தூக்கு போட்ட பையன் பாடிய இறக்க சொல்லுவாங்க. அந்த எரும மொட்டைகுண்டியாவா தொங்கணும், அவன் அப்படி தொங்கினானா இல்லை கால் உதறனுதுல கைலி அவுந்து விழுந்துச்சான்னு தெரியலை. கழுத்து இறுகி பீயெல்லாம் தள்ளி விந்து எதுக்க இருந்த சொவத்துல சொத்துன்னு அடிக்க செத்துபோயிருக்கிறான். எட்டடிக்கு எதுக்க இருந்த சொவருல அடிக்கிற வீரியம். மவராசன் உயிரோடு இருந்திருந்தா ஒரு போடுல புள்ள பெத்துருப்பான் என்று நொந்தபடி அந்த தற்கொலைக்காட்சியை குறிப்பெடுத்துக்கொண்டிருக்கும் போலிசிடம் கருணையை எதிர்பார்க்கும் முட்டாள்தனத்தை பழநி முருகன் கூட செய்யமாட்டான். இதுல நீதியாம் சஸ்பெண்டாம்.

வெள்ளோடு ஸ்டேசன் வந்தது. ஏட்டய்யாவையோவ் நான் ஊருக்கே போறேன் நீ மருதைக்கு போனாமா டெஸ்ட்க்கு கொடுத்தமான்னு வந்திருய்யா, சிடிசினிமாக்கு அம்மணப் படம் பாக்க போயிறாத, சாயந்திரம் வேலையிருக்குஎன்று மதுரை போக சொல்லி விட்டு இறங்கியவரிடம் பிச்சைமுத்து 

அய்யா, உங்களை பெரியய்யா வடக்கு நிலையத்துக்கு மாத்திட்டாங்கஎன்றார்.


(கட்டாயம் தொடரும் :)   )3 மறுமொழிகள்:

 1. 11:19 PM  
  Anonymous said...

  வருசம் நாலு ஆனாலும்....
  மீண்டும் வந்து கொடுத்திருப்பது.. அட்டகாசம்!

 1. 11:21 PM  
  ஆரவாரப் புலி said...

  வந்துட்டான்யா வரவணையான்!
  போட்டுத் தாக்கு மாமே!

 1. அதைத்தான் அப்பவே சொன்னேன். இப்படி எழுத ஆள் இல்லைன்னு. சாகித்ய அக்கதமி மாதிரி விருது கொடுத்து டென்சன் ஆக்கிரப்போறாங்க. கேர்புல்..