Friday, March 28, 2014

@ 4:44 PM எழுதியவர்: வரவனையான்
வெள்ளோடு ரயில்வே ஸ்டேசனில் மீதமாகி போன தண்டவாளத்தின் நடுவே வரும் மர ரீப்பர் கட்டையால் செய்யபட்டிருந்த பெஞ்சில் அந்த காலை வேளையிலேயே புறமண்டையில் சுள்ளென்று அடிக்கும் வசந்தகால வெயிலில் அமர்ந்திருந்தார் கடற்கரை.

பாண்டியன் வெள்ளோட்டில் எப்போதும் நிற்காது. அன்று எதோ சிக்னல் கிடைக்காமல் வேகத்தை குறைத்திருக்கிறான், இறங்கிவிட்டார், அங்கிருந்து மெயின்ரோட்டுக்கு 2 மைல் இருக்கும் ஊருக்கு பஸ் ஏறனும்ன்னா மெயின் ரோட்டுக்குத்தான் போகனும் . கள்ளச்சாராய தடுப்பு பிரிவில் எஸ்.ஐயாக இருந்த போது இந்த பகுதி சாராய வியாபாரிகளை கடையோ கடையென கடைந்து வெண்ணை திரட்டியிருக்கிறார்

ரெய்டின் போது மாட்டிய வியாபாரிகளை ஊறல் பானையை தலையில் தூக்கி வைத்த படியே 8 மைல் இருக்கும் ஊரக காவல் நிலையத்திற்கு நடக்க வைத்தே அழைத்துச்செல்வார். ” என்னை அடிச்சுகூட கொன்னுக்கோ, பிட்டு நவர முடியாது”ன்னு யாகப்பன்பட்டி மேட்டில தலையில இருந்த பானையை டொப்ன்னு போட்டு உடைச்சிட்டு படுத்துகிட்ட சேவியரின் காதுல எதோ சொன்னார். அவன் சாவி கொடுத்த பொம்மையாட்டமா எந்திரிச்சு “அய்யா, சாமி சாமி அப்பிடி கிப்பிடி எதும் செஞ்சுடாதிங்கய்யா”ன்னு கையெடுத்து கும்பிட்டு உடைஞ்ச பானை ஓடுகளை பொறுக்கி தலையில் வச்சுகிட்டு மறுபடியும் ஸ்டேசன் இருந்த தெச பக்கம் நடக்க ஆரம்பிச்சான் .


சும்மா என்னேரமும் லத்தியெடுத்து சளார் சளார்ன்னு அடிச்சுகிட்டே இருந்தா காவாலி போலீசுன்னுதான் பேரு வாங்கனும். புத்தியையும் அப்பைக்கப்ப பயன்படுத்தலன்னாக்கும் மரியாதையில்லை. இப்ப பாருங்க சேவியரு காதில “நீ நல்ல சாதிமான் தானே, உன் கன்ணெதிரே உன் வூட்டுக்குள்ள சாராயம் இருக்கான்னு அந்தோணி போலீச விட்டு சர்ச்சிங் பண்ணவுடுவேன்”னு சொல்லவும் நடந்து செத்தாலும் பரவாயில்லைன்னு லொங்குடி லொங்குடின்னு சேவியர் போறதை.

அந்தோணி போலீஸ் என்பவரும் மனிதர்தான், அதிலும் அமைதியானவர். போலீஸ் என்றாலும் யாரையும் தேவையில்லாம அடித்து பார்த்ததில்லை, அதிகபட்சம் சத்தம் போடுவார் அவ்வளவே. அவர் சேவியருக்கு கீழான சாதி அதனாலாத்தான் கெரண்ட தொட்ட மாதிரி இம்புட்டு வெறப்பா போறான். ஆனா பத்து கி.மீ வழியிலிருக்கும் ஊர்களில் எல்லாம் அவன் டவுசருடன் வருவதையோ, ஒவ்வொரு கிராமத்திற்குள் நுழையும் போது லத்தியை சுழற்றி சுழற்றி பின்பக்கத்தில் ”இனிமே சாராயம் விப்பியா, விப்பியா “ என்ற கேள்வியோடு அடிவிழும் போதெல்லாம் “செய்யமாட்டேன்யா செய்யமாட்டேன்யா” என்றலருவதை ஊர் மக்கள் 
எல்லாம்வேடிக்கையாய் பார்ப்பது பற்றி துளியளவு எண்ணமில்லை, அவனைப் பொறுத்தவரை ஊரறிந்த அந்தோணி போலிஸு தான் வீட்டுக்குள்ள வரக்க்கூடாது.

போலீஸ் என்றால் இது போன்ற விஷயங்களில் கொஞ்சம் வஞ்சத்தோடு நடந்து கொள்ளவேண்டும். அவரை பொறுத்தவரைக்கும் சாதி ஒரு நல்ல ஏற்பாடு, கீழ இருப்பவனுக்கு அவனை மதிக்கிற மாதிரி ஆக்ட் கொடுக்கனும், மேலே இருப்பவனுக்கு லைட்டா பம்முற மாதிரி காட்டிகிட்டா போதும். ரெண்டு பயலும் சலாம் போடுவானுக. போலீசில் அப்படியல்ல மேல இருப்பவனுக்கு பம்மோ பம்முன்னு பம்மனும். கீழ இருக்கிறவன நாயினும் கீழ நடத்தனும்.

அன்னைக்கு அப்படித்தான் டிஎஸ்பி தோட்டத்துக்கு ஆட்டு புழுக்கை ரெண்டு லோடு அடிக்கனும்ன்னு சொல்லிருந்தாருன்னு ரெண்டெல்லைப்பாறை போயி ( போலீசில் இது போன்ற வேலையெல்லாம் சாதாரணம் – குண்டி மட்டும் கழுவிவிட சொல்லமாட்டாய்ங்க அந்தளவுக்கு சேமம் ) பேசி மாட்டு வண்டியேத்திவுட்டு வரும்போது பெனடிக்கும் சார்லியும் நடந்து வந்துகிட்டு இருந்தாய்ங்க.

இந்த பெனடிக்கிற்கும் சார்லிக்கும் பஞ்சமி ஜாரில கவர்மெண்ட் ஆளுக்கு முணு ஏக்கரா கொடுத்திருக்கு. அன்னைக்கு இத அளந்து கொடுத்த கணக்குப்புள்ளையும் சர்வேயரும் என்ன கணக்கில இந்த இடத்தை ஒதுக்குனாய்ங்களோ ரெண்டு பேரு இடமும் இப்படி குடியானவுக நிலத்துக்கு மத்தியில மாட்டிக்கிச்சு. அரசாங்கம் அவர்களுக்கு கொடுத்த இடத்துக்கு போறதே நரகல் மத்தியில பெருவிரல்களினால் கவனமா தாண்டித்தாண்டி நடந்து போற மாதிரி ஆகிப்போச்சு. நெரந்தர வெவசாயம் செய்யக்கூடாது, வெங்காயம், கடலைன்னு ஆசையா போட்டப்பலாம் விதைச்ச காட்டில மாடவுட்டு உழுதுப்புடுவாங்க. யாரு மேல பிராது சொல்லி என்ன பிரியோசனம். யாரு நல்லது கேக்கனுமோ அவருதான் செஞ்சிருப்பாரு.

ஞாயித்துகிழமை பூசை முடிச்சிட்டு போன சாமியாரு பின்னாடியே போய் ’அய்யா இப்படி அந்த சவரிமுத்து பெரியதனக்காரர் இப்படி பண்ணிட்டாக, கேட்டா இருநூறு குழி எனக்கு நெலம் இருக்கு நடுவுல என் கோவணத்து அளவுல வச்சிருந்தா யாருக்கு பிசாசே தெரியும், போ போயி ஓசியில கொடுத்த கவருமெண்டுகிட்டயே திருப்பி கொடு’ன்னு வெரட்டிவுட்டுடாருங்க என்று பிராது சொல்லிருக்கின்றனர்.

ரெண்டு பேரையும் உற்று பார்த்த சாமியார், ”பெனடிக்கு, குருமாரா படிச்சி வந்தோனே என்னை மொதல்ல அந்த பங்குகிற்குதான் பொறுப்பா போட்டாங்க. ஆர்ச் பிஷப் ஆபிஸுல யாரோ அந்த ஊருக்காரங்க இருப்பாங்க போல. அங்கேருந்து இங்க சொல்லி இந்த ஊருக்காரங்க லாரி புடிச்சு திருச்சிக்கே வந்து இந்த சாதிக்கார சாமியாரத்தவிர குடியான சாமியாருல யாரை வேணுமின்னாலும் போடுங்க இல்லைன்னா நாங்க மதம் மாறிடுவோம்ன்னு சத்தம் போட்டாங்க. அப்புறம்தான் இந்த பங்கிற்கு வந்தேன். அவங்களுக்கு சேசப்பன் இப்படி தாழ்வான சாதின்னு தெரிஞ்சா மறு நிமிசமே அவரை தூக்கி போட்டுருவாங்க. உங்களுக்காக அந்தோணியப்பனை வேண்டுறேன், அவரு நமக்காக கடவுள்கிட்ட துதிப்பாரு” என்று அனுப்பி வைத்தார்.


புல்லட்டை நிறுத்தி இருவரையும் விசாரித்தார். மலையடிவாரத்தில் இருக்கும் கொழும்புக்கார பாய் தென்னந்தோப்பில் தென்னைமரத்துக்கெல்லாம் பழுது நீக்கி எரு வைத்துவிட்டுருவதாக சொல்லவும். வண்டியில் ஏறச்சொல்லி ஸ்டேசனுக்கு அழைத்து வந்தார். வரும் வழியில் மேற்சொன்ன சுயபுராணத்தை கடற்கரையிடமும் சொன்னார்கள். “அய்யா எங்களுக்கு கொடுத்த இடத்தை விக்கவும் முடியாதாமுல்ல, நாய் தேங்கா வச்சுகிட்டு உருட்டினமாரி இன்னும் 30 வருசத்துக்கு ஒண்ணு செய்ய முடியாதமுல, உண்மைகங்களா “ என்றனர். ஸ்டேசனும் வந்துவிட்டது.

ஸ்டேஷன் பின்னாடி அஞ்சு ஆறு மரம் இருக்கு ஏறி பழுது பாத்துட்டு எதுத்த புளியமரத்து கடையில் ஸ்டேசனில் சொல்லிவிட்டதா சொல்லி இட்டிலி சாப்பிட்டு வந்து வாசலில் ஒக்காந்திருங்க “ என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

திரும்பி வந்த கடற்கரை அவர்களை உள்ளே வரச்சொன்னார். வேறு வேலையாக என்றாலும் காவல் நிலையத்துக்குள் போகும் போது பெனடிக் சார்லி போன்ற அப்பாவிகளுக்கு தானக கைகள் மார்பின் குறுக்கே போய் முதுகு சற்று குனிந்து விடுவது அவருக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் அவரின் மேலதிகாரியை பார்க்கப் போகும் அவரின் முதுகும் லேசாக கூன் விழுந்துவிடும். அங்கு அடிக்கும் சலாம்களை எல்லாம் இங்கு வந்து அவருக்கு கீழான நபர்களிட்ம் மீட்டெடுத்துக்கொள்வார்.

தரையைக்காட்டி இருவரையும் உக்காரச்சொன்னார். ”இங்க பாருங்க இப்ப ஒரு வெவரம் சொல்லுறேன் அதுபடி செய்யுங்க அப்பத்தான் உங்க நெலத்துக்கு போயி வெள்ளாமை வைக்கலாம், ஆனா என்னைய நம்பணும் என்னாங்கய்யா சொல்லுறீங்க”

சாமி, கடவுளாட்டம் நல்லது செய்யுறேங்கிறீங்க , இதுக்கும் கீழ என்ன கேவலப்பட்ட பொழப்புயா பொழச்சிட போறோம் சொல்லுங்க சாமீ “ என்றனர் இருவரும்

அந்தூரு பெரியதனம் சவரிமுத்து தோட்டத்தில கிழக்க இருக்கிற கேணிக்கு பக்கத்தில மிக்கெல்பாளையம் செபஸ்தியாரு ஊறலு போட்டிருக்கிறானாம். நான் ரெய்டுக்கு வருவேன் நீங்க உங்க நெலத்தில நில்லுங்க. ஊறலு எடுத்து அடுப்பு போட்டு வடிக்கிற வரைக்கும் எப்படியும் நோனி மகேன்ங்க யாரும் பக்கத்தில இருக்க போறதில்லை. உங்களை புடிச்சு ஊரில பாக்குற மாதிரி அடிச்சு இழுத்துகிட்டு வர்றேன்,” என்றார்.
சரிங்கய்யா ஜெயிலுக்கு ஏதும் அனுப்பிடாதீகய்யா, கண்ணு விடுக்காத பொட்டபுள்ள வச்சுருக்கேன் என்றான் சார்லி.

யோவ் ஒரு மாசம் உள்ள போகாம உங்க நெலத்துல நீங்க பீக்கூட பேலப்போவ முடியாது. சொல்லறத ஊளுன்னு கேளு இல்ல தலைக்கு ரெண்டு பிட்பாக்கெட் கேசு போட்டு இப்பவே ரிமாண்ட்டு அனு[ப்பிடுவேன்” கடற்கரை சட்டென்று போலீஸ்காரனாகினார் .

அய்யா அதுக்கு இல்லய்ங்கய்யா… என இழுத்தனர்.

நாஞ்சொன்னா நல்லதுக்குதான்யா சொல்லுவேன் – என்னைய யாருன்னு நெனச்ச என்ற படி சிகரெட்டுக்கு தீப்பெட்டி தேடி ரைட்டர் ரூமுக்கு போய்விட்டார்.

சார்லீ “யோவ் மாமா, அய்யா நம்மாளுகளா இருப்பாரா.. நமக்கு நல்லது யோசிக்கிறாரு” என்றான்

நேத்து முள்ளொடிக்க போறப்ப, வனத்து சின்னப்பருக்கு முழந்தாளில கோயில சுத்தி வந்து தென்னம்பிள்ளை வைக்கிறேன் என் நிலத்தில ஒரு நா ராத்திரி தூங்கினா போதும்ன்னு வேண்டினேன்” அவருதான் இவர அனுப்பிருக்காரு சின்னப்பரே தோத்திரமய்யா”என்றான் பெனடிக்.

நீராவி ரயிலிஞ்ஜின் மாதிரி முகம் எல்லாம் புகை கவிழ வந்தார் கடற்கரை.

நாளைக்கு 7 மணிக்கு வருவோம் நீங்க ரெண்டு பேரும் அங்க இருங்க புடிச்சாந்து கடுக்கா கேஸ் போட்டு உக்காரவைக்கிறேன். அப்புறம் பாரும் உங்க பிரச்சினை தன்னால முடிவுக்கு வரும் என்றார்.

கடுக்காய்ங்கிறது சாராய ஊறலுக்கு பட்டை, நாட்டு சர்க்கரை எவ்வளவு முக்கியமான பொருளோ அது போல இதுவும் . ஆனா கையளவு வச்சிருந்தா கேஸ் இல்லை மூட்டை கணக்கில வச்சிருந்தா வழக்கு போடலாம்.

சாமி, ஒரு வா ஒரே ஒரு வா என் நெலத்தில எடுத்த கம்புல கஞ்சி காய்ச்சி குடிச்சிட்டு செத்து போயிருனும் சாமி “ சார்லி தேம்பினான்.

அதுலையே போட்டு பொதைக்கிற மாதிரி வழி பண்ணுறேன் போயிட்டு வா” – சோகமான சினிமா பாட்டுக்கே கண்கலங்கிவிடும் கடற்கரையின் இயல்பை காவல்துறை வடித்து எடுத்திருந்தது

அவர்களுக்கு கையில் காசிருந்தாலும் நிலம் வாங்கும் உரிமையில்லை ஆயிரமாயிரம் வருடங்களாக. அதை அவனால் தெளிவாககூட சொல்ல முடியவில்லை. ஒரு நாளேனும் தனக்கு சொந்தமான நிலத்தை ஆண்டுவிட்டு செத்துவிட ஏங்கும் ஆயிரமாண்டு ஏக்கம். கடற்கரையால் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் அதிலேயே நெகிழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக வறட்டு கேலி பேசி அடுத்த பேச்சுக்கு போய்விடுவார்.

ஆடு மாடு உள்ளே வராமல் இருக்கு தடுப்பிற்காக பாண்டியாட்டம் போல இங்கிட்டும் அங்கிட்டுமாய் மாற்றி மாற்றி ஊன்றப்பட்டிருந்த தண்டவாளங்கள் துண்டுகளை தாண்டி ஸ்டேசனை விட்டு வெளியே வந்தார்

வெளியே ஓலைக்கொட்டாய்யில் சின்ன காபிக்கடை. காபி குடிக்ககெனும்ன்னா குத்தவச்சுத்தான் குடிக்கமுடியும் அவ்வளவு தாழ்வா இருந்தது.சாணி மொழுகிய தரை. அதும் கடற்கரை 6 அடி ரொம்ப சிரமப்பட்டு குனிந்து யாருய்யா கடையில என்று சத்தமிட்டார்.
வெளிய வந்த பெண்மணி கடற்கரையை அடையாளம் கண்டுவிட்டாள்

சேசுவே.. மொதலாளில்ல வந்திருக்காரு” என்றபடி கும்பிட்டவாரே பத்தடி தள்ளி நின்றாள்.

இவருக்கு ஒன்னும் தட்டுபடலை அவள் யாரென்று. உம் புருசனை கூப்பிடும்மா என்றார்.

மாட்டுக்கு புல்லறுக்க போயிருக்கு, இருங்கெ மகனை தாட்டிவுடுறேன் என்று 7 வயது பயலிடம் சொல்லி அனுப்பினாள்.

நீ யாரும்மா, என்னை தெரியுமா

மொதலாளி ஒங்களாலதான் நல்ல கஞ்சி குடிக்கிறோம். எங்க நெலத்தக்குள்ள கொண்டு போய் ஒக்கார வச்சிகளே சாமி “

பெனடிக் பொண்டாட்டியா ?

அய்ய இல்லீங்க சார்லி சம்சாரங்க..

சார்லி வந்து சேர்ந்தான். வெள்ளைச் சட்டை கைலி கையில டீவி மோதிரம். ம்ம்ம் லேசா மஞ்சக்கொழுப்பு பாலாடை போல இப்பத்தான் அவனுக்கு கட்ட ஆரம்பிச்சிருக்கு என்று நெனைத்துக்கொண்டார்.

இந்த சுதந்திரம் கொடுப்பவர்களுக்கு அதை பெறுபவர்களின் கண்களுக்கு தெரியாமல் ஒரு எல்லையொன்றை வகுத்திருப்பார்கள். அதை சுதந்திரம் பெற்றவர்கள் தாண்டுவதாக தெரிந்தால் அவர்களின் சுதந்திரத்துக்கு முதல் எதிரியாக அவர்கள்தான் மாறுவார்கள். சார்லியின் கூன் கொஞ்சம் நிமிர்ந்திருப்பதாக பட்டவுடன் ”எலே, தாய்லீ உனக்கு வந்த வாழ்வா, கையில மோதிரம் தோளில துண்டா” மனசுக்குள் கருவினார் கடற்கரை. 

டேய் ஊருல டிவிஎஸ் 50 வண்டி எவனும் வச்சிருந்தா எடுத்கிட்டு வரச்சொல்லு டவுணில என்னை இறக்கிவுடனும் என்றார்.

அதுக்கு ஊருகுள்ள எதுக்கு சாமி போகனும் என்கிட்டவே லூனா இருக்கு.பின்னாடி நிக்குது எடுத்தாரேன். நீங்க ஓட்டுங்க சாமி நான் பின்னால உக்காந்து வாரேன்.

உக்காரும் இடத்தில் மொளகாய அரச்சு அப்புன மாதிரி இருந்தது கடற்கரை இன்ஸ்பெக்டருக்கு. ( தொடரும் )

1 மறுமொழிகள்:

  1. 8:39 AM  
    ஆரவாரப் புலி said...

    // அங்கு அடிக்கும் சலாம்களை எல்லாம் இங்கு வந்து அவருக்கு கீழான நபர்களிட்ம் மீட்டெடுத்துக்கொள்வார்.//

    அட்டகாசம்!