Wednesday, April 15, 2009

@ 1:58 PM எழுதியவர்: வரவனையான்

தமிழனாய் இருப்பதா அல்லது மனிதனாய் இருப்பதா ? "இந்தியனாய்" என்கிற கேள்வி இங்கு தேவையற்றது. "நான் எந்தளவுக்கு உலகனோ, எந்தளவுக்கு ஆசியனோ, எந்தளவுக்கு இந்தியனோ அதைவிடக் கூடுதலாய் தமிழன்" என்று பாவேந்தரின் மாணாக்கர் ஈரோடு தமிழன்பன் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த கூடுதலான தமிழர்களில் ஒருவனாய் என்னை இணைத்துக்கொள்ளும் வேளையில் சிலவற்றை முன்வைக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

தமிழக அரசியலில் இதுவரையில் கலைஞரின் நிலைப்பாட்டினையும் அவரது பல்வேறு செயல்களுக்கும் ஆதரவாய் எழுதியும் பேசியும் வந்த ( சமயங்களில் "கொட்டை தாங்கியும்" ) என் போன்ற கூடுதல் தமிழர்கள் இன்று கருணாநிதியின் அரசியலுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய காலமிது.

"நான் நினைத்தால் என்றோ பிரதமராயிருக்க முடியும்" "என் உயரம் எனக்கு தெரியும்" இவை கலைஞர் என்கிற தனக்கிடப்பட்ட விலங்கை தானே மெச்சிக்கொள்ளும் ஒரு விசுவாச அடிமை தன்னை பற்றி சொல்லிக்கொண்ட வரிகளாகும். திமுக ஆதரித்தால் முழுமையாய் ஆதரிக்கும் எதிர்த்தால் முழுமையாய் எதிர்க்கும் என்று சொல்லி சொல்லி கூட்டணி சேர்ந்து அன்று பாரதிய ஜனதா கட்சியின் நரந்திர மோடி குஜராத்தில் 3000 ஆயிரம் முஸ்லிம்களை கொன்றொழித்த இனப்படுகொலைகளின் போது பொத்திக்கொண்டு "முழுமையாய்" ஆதரித்தது. மேற்குவங்கத்தில் சி.பி.எம் நிகழ்த்திய நந்திகிராம் படுகொலைகளை கண்டும் காணாமல் தன் கூட்டணி கட்சியின் பச்சை படுகொலைகளை "முழுமையாய்" ஆதரித்தது. இன்று தனது கட்சி ஆட்சியில் பங்கு வகிக்கும் , தனது ஆட்சிக்கும் முண்டு கொடுக்கும் காங்கிரசுக்கு ஆதரவாய் வரலாற்று துரோகமாய் தன் ரத்த சொந்தங்களை துடிக்க துடிக்க கொல்லும் காங்கிரசுக்கு ஆதராவாய் நிலையெடுத்திருக்கிறது.

ஆட்சியதிகாரம் என்கிற போதை தன் கோவணத்தையும் இழக்க வைக்கும். அன்மையில் இழந்தவர் கருணாநிதி. அவர் பன்முக கலைஞர் என்பதில் நமக்கு மாற்று கருத்தில்லை ஆனால் அவரின் அணுக்கத்தொண்டனும் அசந்து போகுமளவிற்கு சுப.தமிழ்ச்செல்வனுக்கு கண்ணீர் அஞ்சலி கவிதை, அன்டன் பாலசிங்கதிற்கு இரங்கல், பிரபாகரனிற்கு "சர்வாதிகாரி"பட்டம் என ஆல்ரவுண்டர் ஆட்டம் இனி தமிழ்க்களங்களில் செல்லுபடியாகாது என்பதே நிதர்சனமான உண்மை.

நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் யார் ? இப்படி ஒரு கேள்வி கலைஞரிடத்தில் முன்வைக்கபட்டது அதறி அவர் சொன்ன பதில் "ஃபிடல் காஸ்ட்ரொ" என்று.

பிடலை முதன் முதலாய் சந்தித்த பொழுது சே சொல்லிய முதல் அறிவுரை "துரோகிகளை ஒழியுங்கள்" என்பதுதான், இன்றைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடியில் தேங்கி நிற்கும் திராவக சொட்டாய் கூபா என்கிற பொதுவுடைத்தேசம் உயிர்த்து இருப்பது புரட்சியின் போது "துரோகிகளை" அப்புறப்படுத்தியதுதன். இன்றளவும் கூபா ஒரு பாட்டாளிவர்க்க "சர்வதிகார"நாடாகவெ இருக்கிறது இது கலைஞருக்கும் தெரியாமலிருக்காது; என்ன இருந்தாலும் "சகோதர யுத்தம்" கூடாதுதானே. மாமன் மச்சான் யுத்தமென்றாலும் சமாதான படுத்தி விடலாம், சகோதர யுத்த பலன்களை நாளும் தன் வீட்டிலேயே பார்ப்பவர்தானே. புளித்து போன தயிர் சாதத்தையே நினைவுபடுத்துகிறது கருணாநிதி அவர்களின் 80'களில் தேங்கிப்போன ஈழம் தொடர்பான அறிக்கைகளும் விளக்கங்களும். ஆனால் அவருக்கு நடப்பது ஏதும் தெரியாமலில்லை தெரிந்தும் கண்களை மூடிக்கொண்டவரை என்னவென்று சொல்வது


என்னை பொறுத்தவரை ஈழப்பிரச்சினையின் தாக்கத்தை ஏற்படுத்தியவர் கலைஞர் என்பதே உண்மை. 80,களின் தினகரன் நாளிதழின் இரண்டாம் பக்கம் திருப்பினால் வைகோ பாராளுமன்றத்தில் முழக்கம். இந்திய அரசுக்கு கேள்வி என்றெல்லாம் செய்தி வரும். இரண்டாம் பக்கத்தில் டெசோ தொடர்பிலான அறிக்கைகள் இருக்கும். கலைஞரின் பேச்சே தமிழுணர்வு கொண்ட பல்லாயிரம் பெயர்களை ஈழத்தின் பால் கவனம் கொள்ளச்செய்தது. இவ்வளவு ஏன் திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்று "இலங்கைத்தமிழரை என்றும் காப்போம்" என்பதுதான். "எப்படி இருந்தா நான் இப்படியாகிட்டேன்" விவேக்கின் காமடியைப்போல் ஈழத்தமிழ்ரை இவர்கள் காங்கிரசோடு சேர்ந்து காக்கும் லட்சணம் இதுதான் போலிருக்கிறது.


தி.மு.கவில் எஞ்சியிருந்த தமிழின உணர்வாளர்களின் கடைசி நம்பிக்கையாய் கருணாநிதியின் வார்த்தையிருந்தது. என்ன இருந்தாலும் இந்திய ராணுவத்தை வரவேற்க போகமாட்டேன்னு சொன்னவருதானே என்று அந்த நம்பிக்கையும் ரஜபக்சேவை அலக்சாண்டருடன் ஒப்பீட்டு பேசிய போதே தகர்ந்து போனது. செய்திகளையும் கணிப்புகளையும் கடந்து வெற்றி பெறுவது கடந்த காலங்களில் கலைஞரின் இயல்பு. அவரே இந்திய பிராந்திய வல்லாதிக்க ஆளும் காங்கிரசு அரசின் போலி பரப்புரைகளுக்கு புதிய ஊதுகுழலாய் மாறியது கொடுமைத்தான். வஞ்சக விடம் தோய்ந்த அந்த வரிகளிலும் ஒரு வரலாற்று உண்மையை ஊருக்கு உரைத்திருக்கிறார் கருணாநிதி. என்னாதான் அலக்சாண்டர் மாவீரனாக போற்றப்பட்டாலும் அவனும் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பாளன் தாம், போரஸ் பூர்விககுடிக்கு சொந்தக்காரன். புலிகளின் ரத்தம் கலந்த ஈழ மண்ணில் புற்களுக்கு மாறாய் இனி புலிகளே முளைப்பர். வரலாற்று அவப்பெயரை இன்று சுமந்து நிற்கும் வேளையில் அதை துடைக்கும் ஒரே வழி ஈழவிடுதலையை ஆதரிப்பதுதான். அதை விடுத்து சந்திரகாசன் போன்ற ஃபபூன்களை வைத்து காது குடையச்சொல்லி சுகம் கண்டு கொண்டிருந்தால் 60 ஆண்டுக அரசியல் வரலாறு ஒரு துரோக வரலாறாய் மாறிப்போகும்.

<ச்ட்ரொங்>இதோ தாய்த்தமிழகத்தின் கண்களுக்கு எதிரிலேயே ஒரு இனப்படுகொலை துவங்கிவிட்டது என்ன செய்யப்போகிறார் "தமிழின தலைவர்" கருணாநிதி.

3 மறுமொழிகள்:

  1. This comment has been removed by the author.
  1. :-(

  1. உங்களோடு உடன்படும் என் கருத்து:

    http://neo-lemurian.blogspot.com/2009/05/blog-post.html