Wednesday, November 28, 2007

@ 9:21 PM எழுதியவர்: வரவனையான் 2 மறுமொழிகள்
கை நிறைய அள்ளி தின்ற
தினை தொன்டை அடைக்க
குடுவை கவிழ்த்து - கன்னம்
வடிய தேன் குடித்து
வள்ளி தேடி அலைகிறான்
காட்டில் வழி தவறிய முருகன்
மருத நிலத்து குருவிகளை
அவனாய் நினைத்து - கள்ளச்சிரிப்புடன்
ஆலேலோ சொல்லி விரட்டியடிக்கிறாள்
குறத்தி - இருவரும் கண்ணோடு கண் பார்க்கும்
பொழுதறிந்த காளி - பாலை
அதிர சிரிக்கிறாள்

Sunday, November 11, 2007

@ 4:34 PM எழுதியவர்: வரவனையான் 10 மறுமொழிகள்
ஆண்டாள்களின் சாபம்
ராதை கிழித்தெறிகிறாள்
என் காதல் கடிதத்தை
கல்லாய் சமைந்து
பிறவி முடிக்க
அமர்கிறேன் மரமொன்றின் கீழ்
வேறெவரோ வாசிக்க
தொலைவிலிருந்து கேட்கும்
வேணுகாணத்தில் மெல்ல
பற்றுகிறது
பெருந்தீ ஒன்று

Saturday, November 03, 2007

@ 3:31 PM எழுதியவர்: வரவனையான் 1 மறுமொழிகள்
02.11.2007


பெரியார் தி.க. சார்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரவணக்க நிகழ்வுகள்

சேலம் போஸ் மைதானம் அருகில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க நிகழ்வும் அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளத்தை அழித்த சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் வித்துடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டித்தும் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணிக்கு வீரவணக்க நிகழ்வும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பெரியார் திராவிடர் கழக நிர்வாகி டைகர் பாலன் தலைமை வகித்தார். ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு மனித உரிமைக் கழகம், புதியன பண்பாட்டுக் கழகம், குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, தலித் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் திராவிடர் கழக அலுவலகமான பெரியார் படிப்பகத்தின் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் பெரியார் தி.க.வின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் வெ. ஆறுச்சாமி, நிர்வாகிகள், தமிழின உணர்வாளர்கள் பலரும் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர். பிடிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் பெரியார் தி.க.வின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. ்.
விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வீரவணக்க நிகழ்வு
[சனிக்கிழமை, 03 நவம்பர் 2007, 10:47 AM ஈழம்] [புதினம் நிருபர்]
வீரகாவியமான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழ்நாட்டின் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் இன்று வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் தலைமையில் இன்று சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு இந்நிகழ்வு நடைபெற்றது.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் பிரம்மாண்ட திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. வீரவணக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்வில் பாவலர் அறிவுமதி, ஓவியர்கள் வீரசந்தானம், புகழேந்தி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் நிர்வாகி பாலு, தமிழ் முழக்கம் சாகுல் அமீது, பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பெருந்திரளான தமிழின உணர்வாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.நன்றி : சங்கதி & புதினம்

Friday, November 02, 2007

@ 3:27 PM எழுதியவர்: வரவனையான் 9 மறுமொழிகள்

தமிழீழ போராட்டத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் ஒருவர் துரோகம் இழைத்து வெளியேறிய செய்தி படித்து கவலையாய் மூவேந்தர் புத்தக நிலையத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். "கவலைப்படாதடா, நான் இருக்கிறேன் அங்கு" என்று சொன்னார் ஒரு நண்பர். எப்போதும் என்னை கிண்டலடித்து வாங்கிகட்டிக்கொள்பவர். முறைத்து பார்த்தேன். "டேய் இல்லடா; என் பேரு என்னா"னு கேட்டார் ...ம்ம் தமிழு. என்றேன். அதான் அங்க தமிழ்செல்வன் இருக்காருல ஒரு பிரச்சினையும் வாராது கவலைபடாதேன்னு சொன்னார். இருவரும் புன்னகைத்து கொண்டோம்.

ஒடுக்கபட்ட சமூகத்தில் பிறந்து ஈழவிடுதலை போரில் தம்மை இணைத்து களமாடி விழுப்புண் பெற்று இன்று ஈழத்தமிழ் மக்களின் அரசியற்பிரதிநிதியாய் இருந்த தமிழ்ச்செல்வன் நம்மிடையே இல்லை. உலகத்தமிழர் இதயங்களில் தன் குழந்தை புன்னகையால் குடி கொண்டிருந்த அந்த மாவீரன் இல்லை.

மதிய உணவில் முதல் கைவைத்த போது சேதி கிடைத்து ஓடி வந்தேன். "தேசத்தின் குரல்" மறைவு வருத்தமளித்தாலும் அவரின் நோய் முற்றிய நிலை முன்பே தெரிந்திருந்ததால் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை எனக்கு என்பதே உண்மை. ஆனால் இந்த சேதி மிகவும் கவலையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.

" நின்ற இடம் நடுகல் ; யாழ் வீரருக்கு " என்பார் கவிஞர் சூரிய தீபன். தேசவிடுதலைக்கு களமிறங்க மரணம் ஒன்றே முன் நிபந்தனை என்பதை ஏற்று வந்தவர் என்றாலும் விடியலின் முகப்பில் நிற்கும் நேரத்தில் வெற்றியின் திட்டிவாசலில் ஈழப்போர் இருக்கும் நிலையில் அரசியற்துறை பொறுப்பாளரின் இழப்பு ஈழத்தமிழ் மக்களுக்கு பேரிழப்புதான்.

சிறீலங்க இனவெறி பயங்கரவாத அரசு இது போன்றதொரு நடவடிக்கையின் மூலமும் மாவீரன். புன்னகை அரசன். தமிழ்ச்செல்வன் தம் வீர மரணத்தின் மூலமும் சொல்லி சென்ற செய்தி சிங்கள காடையர்களிடம் இருந்து ராணுவரீதியான தீர்வில் மட்டுமே ஈழதேசத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதுதான்.

நான் மிகவும் மதிக்கும் பதிவர் நயனனின் கவிதை ஒன்று கண்ணீர் வரவைத்தது இங்கு பகிர்கிறேன்"அநுராதபுரத்து வெற்றிகளை
கண்ணிமைக்காது பார்த்தவர்களின்
கண்ணடி பட்டதாலா இவன் குண்டடி பட்டுப் போனான்?"
தேம்பித்தவிக்கும் உலக தமிழ்ச்சமூகத்துக்கும் என் தோழிக்கும் இதன் மூலம் நான் சொல்லவிரும்புவது "ஈழம் 'பிரபாகரனின் தேசம்' இதற்கெல்லாம் கலங்காது , முன்னை விட முனைப்பாய் தமிழ்ச்செல்வனின் புன்னகையை தங்கள் முகங்களில் சுமந்து களம் நிற்பர் புலிகள்; மீட்பர் தேசம் தனை "