Wednesday, September 05, 2007

@ 5:31 PM Labels: எழுதியவர்: வரவனையான்

சமீபத்தில் ஒரு 35 ஆண்டுகளுக்கு முன் சின்னாளபட்டியில் பொதுக்கூட்டம் முடித்து தோழர் ஒருவர் வீட்டில் இரவுணவுக்கு செல்கிறார் பெரியார். இயக்கத்தோழர் குடும்பத்துடன் உணவுக்கு பின் பேசிக்கொண்டிருக்கையில் அந்த இளம் குடும்பத்தலைவர் தனக்கு அப்போது பிறந்திருந்த பெண் குழந்தைக்கு பேர் வைக்க சொல்லிக்கேட்டார். அந்த குடும்பம் தெலுங்கை தாய் மொழியாய் கொண்ட குடும்பம். பேசும் போது இதைக்கேட்டறிந்த பெரியார் அக்குழந்தைக்கு "செந்தமிழ்ச்செல்வி" என்று பெயரிட்டார். பெரியாரின் நடைமுறைச்செயல்களில் கூட ஒரு கலக செயற்பாட்டினை காணலாம். கூட்ட மேடைகளில் பெயர் வைக்கச்சொல்லி கேட்டால் "மாஸ்கோ" "ருசியா" லண்டன் என்றெல்லாம் பெயரிட்டுள்ளார் கேட்டால் "திருப்பதி,காசி, பழநி, சிதம்பரம்னு நீ மட்டும் ஊருகளோட பெயரை வச்சுகிட்டு திரியலையா என்ன நான் வெளீநாட்டு ஊரு நாடு பெயர்களை வைக்கிறேன்'ன்னு விளக்கம் சொல்லியுள்ளார்.சமயங்களில் இன்னும் ஒரு படி மேலே போய் பெண்களுக்கு ஆண்களின் பெயரையும் சூட்டி பாலின பேதத்தையும் ஒரு கை பார்த்துள்ளார் எடுத்துகாட்டாக திமுக மகளிரணியின் முதன்மை தலைவர்களில் ஒருவரான காரல் மார்க்ஸ் . இவருக்கு மார்க்ஸின் பெயரினையிட்டுள்ளார் பெரியார். பெரியார் எந்த ஒரு விதயத்திலும் ஆதிக்கத்துடன் செயல்பட்டது கிடையாது அதே வேளை ஆதிக்கத்துக்கு எதிராக இயங்கும் நிலையில் பிறமொழி கலக்காமல் வடமொழியினை துறந்து தம்பெயரை தமிழ்ப்படுத்திக்கொண்ட இயக்கதினைரை விமர்சிக்காமல் ஆதரித்துள்ளார். ராமைய்யா என்கிற பெயரை அன்பழகன் என்று பேராசிரியர் மாற்றியது இயக்கத்தினுள் பெயர் மாற்றம் குறித்த ஒரு சிந்தனை அலையயை ஏற்படுத்தியது. ஒரு முறை கலைஞர் தனது தெக்ஷ்ணாமூர்த்தி என்கிற பெயரை கருணாநிதியென்று தான் மாற்றியது குறித்து பெரியாரியடம் சொல்லிக்கொண்டிருந்தபோது பெரியார் குறுக்கிட்டு இப்போ வச்சுருகிற பெயரும் வடமொழிதான் ஆனா அதுக்காக ரொம்ப மெனகெட்டு மாத்த தேவையில்லைன்னு சொல்லியிருக்கிறார் சிரித்துக்கொண்டே.

ஒரு மனிதனின் பெயர் என்பது அரசியற் செய்தி ஒன்றை கொண்டிருக்கவேண்டும் என்கிற முறை திராவிட இயக்கத்தினாரால் முழுவீச்சுடன் கொண்டு செல்லபட்டது. அண்ணா கலைஞர் போன்றவர்களிடம் இருந்த மென்மையான தமிழ்த்தேசிய போக்கினால் பெயர் மாற்றமும் தமிழ்ப்படுத்தலும் ஆதிக்கம் செழித்துக்கொண்டிருந்த வடமொழிக்கெதிராய் இயங்கவைத்தது.

செல்லன் - செல்லச்சாமி
வெள்ளையன் - வெள்ளைச்சாமி
கருப்பன் - கருப்பசாமி
குப்பன் - குப்புசாமி

மேற்கண்டவற்றில் இலகுவாய் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பெயரையும் ஆதிக்க இடைச்சாதியினரின் பெயரையும் அடையாளம் கண்டுகொள்ளலாம். தமிழ்பெயர்களான இவற்றிள்ள நுண்ணரசியலை களைந்து வந்ததுதான் திராவிட இயக்கத்தின் தமிழ்பெயர் மாற்றும் எதிர்கலாச்சார போக்கு. அதில் தெரியும் தொன்மையைப்போற்றிய நீட்சேயிசத்துக்கிடான விதயங்களையும் நாம் மறுப்பதற்கில்லை .

பெரும் புத்தக பொதியுடனே எப்போதும் காட்சியளிக்கும் பாவலேறு அய்யா. பெருஞ்சித்திரனாரை ஒரு முறை கூட்டமொன்றில் சந்தித்த போது உடன் இருந்த பெரியார் திராவிட கழக மாவட்டச்செயலாளர் துரை.சம்பத் என்னை அறிமுகம் செய்து வைத்தார். பாவலேறு முழுக்க முழுக்க பிறமொழி கலக்காமலேதன் பேசுவார். தன்னிடம் பேசிக்கொண்டிருக்கும் நண்பர்களின் பெயரையும் கலப்பற்ற தமிழிலேயேதான் விளிப்பார். தோழர் . சம்பத்தை " உட்காருங்க செல்வம் என்றார். என்னை செந்தில் தம்பீ உட்காருங்க என்று அவர் சொல்லிய போதுதான் என் பெயர் முழுக்க தமிழ் என்கிற விதயம் தெரிந்தது. ஆனாலும் அவர் கிளம்பும் முன் சொன்னது இனி செந்தில்குமார் என்று போடாதீர்கள் செந்தில் செல்வன் என்றே உங்கள் பெயரை சொல்லுங்க என்றார்.

என்னிடம் அன்பர்களும் நண்பர்களும் குழந்தைகளுக்கு பெயர் ஒன்றினைக்கேட்கும் பொழுதெல்லாம் முழுமையான தமிழ் பெயர்கள் அல்லது அரசியற்பெயர்களைத்தான் பரிந்துரைப்பது வழக்கம். இப்போது எங்கள் வீடுகளிலும் நண்பர்களின் வீடுகளிலும் பிரபாகரன்களும், தீலிபன்களும் பேரறிவாளன்களும் , விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆதிக்கத்துகுள்ளான ஒரு இனம் தன் இனமீட்புக்கான ஒரு விதயமாகவும் அரசியற் செய்தியைக்கொண்டும் இருக்கும் பெயர்களை தமது பிள்ளைகளுக்கு இடுவதே சரியான விதயமாக இருக்க வேண்டும்.

குறைந்தது அப்பிள்ளைகளுக்கு பெயரிடும் அதிகாரம் அவர்களின் 15 வயது வரைதான் நமக்கும் இருக்கிறது. அதன் பின் தேவையும் அவர்களின் விருப்பமுமேதான் முதன்மையானது.

நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் !
நான் ஒரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள் !

37 மறுமொழிகள்:

 1. பின்னூட்ட கயமைன்னா இன்னாங்க ?

 1. //நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் !
  நான் ஒரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள் !//

  வழிமொழிகிறேன் தோழர்...
  சினிமா பார்த்தும் நடிகன் களை பார்த்தும் கிரன், சிம்ரன், அபிஷேக், சாருக், அமர் என்று பெயர் வைப்பவர்களைப் பார்த்தால் எரிச்சல் தான் வருது. பாருங்க என்னோட பேரே சத்யாவாம்ல. மெய்னு மாத்திக்கலாமான்னு யோசிச்சேன் ஆனா பொய் சொல்ல நா கூசும்னிட்டு சத்தியாவாவே இருக்கேன்.

  அல்லாஞ்சரி முருகேசன் தமிழ்ப் பேரா? முருகன் தமிழ்க்கடவுள்னு சொல்றாங்கோ...ஈசன் ஈஷானாயிட்டான். ஒரு எழவும் புரியல். ஈசன் இமாலயால இருக்கானாம் அப்போ தமிழ் நாட்டுல டூர் வரும்போது ஜாலில பொறந்தவரா முருகா? அப்போ ஜாலில பொறந்தவன் பேர நம்மாளுங்க ஏன் பேரா வெக்கறானுங்க?

 1. நல்ல பதிவு வரவனை.

  வடமொழி பெயரை சுமந்துகொண்டு மனம் கொள்ளா துயருடன் திரியும் என்னைப் போன்றோருக்கு தான் இப்பதிவின் அருமை தெரியும்.

 1. ஏறத்தாழ சரியாக இரண்டு வருடங்களுக்கு முன் நான் எழுதிய பதிவொண்டு சொந்த செலவில் சூனியம் வெச்சிக்கறதுக்கு

 1. இன்னொரு பின் குறிப்பு. சரியாக இம்மாதத்தின் இடை திகதியில் தமிழ்மணம் ஒரு நாள் முழுதும் ஹேக் செய்யப்பட்டது அது தான் என்னுடைய மூன்றாவது இடுகை. அதை வைத்து தமிழ்மணத்தில் பதிய முயற்சித்தேன் ஆனால் மறுத்துவிட்டார்கள். அதன் பின்னர் அதை நீக்கி வேறொரு பதிவு மொக்கையா எஸ் எஸ் சந்திரனை திட்டி போட்ட பிறகு தான் சேர்த்துக் கொண்டார்கள். ஏதோ சொல்லனும்னு தோணிச்சு...சொல்லிட்டேன்

 1. நல்ல பதிவு!
  //இனி செந்தில்குமார் என்று போடாதீர்கள் செந்தில் செல்வன் என்றே உங்கள் பெயரை சொல்லுங்க என்றார்.
  //

  முத்து குமரனா? முத்து செல்வனா? எது சரி

 1. வரவனை,

  மிக அருமையான நட்சத்திர பதிவு, பாவலேறு ஐயாவைப் பற்றிக் குறிப்பிட்ட இருக்கிறீர்கள் மிக்க நெகிழ்ச்சியாக உள்ளது.

  பெயரளவில் முதலில் தமிழன் தனியடையாளம் பெற வேண்டும்,

 1. நன்றி கோவியாரே !

  கெஞ்சுவதில்லை பிறர்பால்
  அவர் செய் கேட்டினிக்கும்
  அஞ்சுவதில்லை - மொழியையும்
  நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை
  எனவே தமிழன் தோளேழுந்தால்
  எஞ்சுவதில்லை எவரும் எதிர் நின்றே - எனும் வரிகள் தாங்கி வரும் தென்மொழி தமிழர்களுக்கு கொடுத்த செய்திகள் ஏராளம்.

 1. நல்ல ஒரு அரசியல் செய்தியை தரும் பதிவு செந்தில். இதே செய்தியை எனது பெயருக்கான காரணத்தை அறிய தந்தையிடம் கேட்டபோது அறிய முடிந்தது. பல நாடுகளில் அந்த மக்களின் வாழ்க்கையோடு பழக்கப்பட்ட பொருட்கள், இடங்களின் பெயர்களே மனிதர்களுக்கும் இருப்பதை அறிகிறேன்.

  தாய்லாந்தில் பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு இஸ்லாமிய தோழியின் பெயர் தமிழாக்கம் 'வெட்டுக்கிழி'. இன்னொருவர் 'வாத்து'.

  ஒருவருக்கு மூன்று பெயர்கள் மற்றும் கோத்திரம் என ஆரியர்களுடையது அவர்களது வரலாற்றையும் கலாச்சாரத்தையும் சொல்லுகிறது.

  பெயரில் ஒரு இனத்தின் வரலாறும், கலாச்சாரமும் உள்ளது.

 1. அப்படியே என் பெயரை எப்படி தூய தமிழில் சொல்வதுன்னு தெரிஞ்சவுங்க உதவுங்க. (பெயர்: காசிலிங்கம்)

 1. பேதங்காட்டுதலை-அது எந்த அடிப்படையிலாயினும் சரி எதிர்த்தவர் பெரியார். ஒருவரின் பெயரைக்கொண்டே அவருடைய பாலினம், மதம்,சாதி, தாய்மொழி ஆகியவற்றைப் பெரும்பாலும் ஊகித்துவிட முடியும்;பேதங்காட்டுதல் துவங்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான் வகைப்படுத்தமுடியாத முறையில் பெரியார் பெயரிட்டார்.
  எடுத்துக்காட்டாகரஷ்யா,விடுதலை எனும் பெயர்களிலிருந்து சம்பந்தப்பட்ட நபர்களின் பாலினம் அல்லது மதம் அல்லது தாய்மொழியை
  இனங்கான முடியுமா?

  ரஷ்யா:குத்தூசி குருசாமியாரின் மகள். பிற்காலத்தில் தமிழ்நாடு மருத்துவப் பல்கலையின் பதிவாளராகப் பணிபுரிந்தவர்.

  விடுதலை:முன்னாள் அமைச்சர் இராகவானந்தரின் மகன்.தற்பொழுது
  தலைமை வழக்குரைஞர்(advocate-general)

 1. //நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் !
  நான் ஒரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள் ! //

  நன்று.நன்று.
  மதுரை மக்களை இப்போது விசித்திர வியாதி ஒன்று பிடித்துள்ளது.குழந்தைகளுக்கு 'ஷ' என்னும் எழுத்து வருவதைப் போன்ற வடமொழிப் பெயர்களாக கண்டுபிடித்து வைக்கிறார்கள்.இது எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.

  அழகு தமிழ்ப் பெயர்களுக்கான ஒரு வலைப்பூ நாம் தொடங்க வேண்டும்.

 1. தமிழ் பெயரின் அருமை அதை தரித்திருக்கும் நபர்களுக்கு தான் தெரியும்.

  மத்தவங்க நம்ம பெயருக்கு ஒரு பொருள் உள்ளது என்று ஆச்சரியப்படும் போதும் நம் மொழியின் சிறப்புகளான ழ, ந, ங வை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் போதும்... சட்டை கழுத்தை தூக்கி விட்டுக்கலாம்.

  தமிழின் அருமையில் இன்னொன்று மொழியின் பெயரை மாந்தர் பெயராக தரித்தது தமிழில் மட்டும் தான்.

  யாரையும் ஆங்கிலம் , இந்தி தெலுங்கு என்று கூப்பிடகேட்டதில்லை

 1. கூடுதலாய் ஒரு செய்தி, தமிழ் மொழி என்பது ஒரு மொழியினை சொல்வதாக இருக்கும் அதே நேரத்தில் " தமிழ் மொழி" என்று அழுத்திச்சொன்னால் கட்டளைச்சொல்லாகவும் மாறிவிடும் அதாவது தமிழில் மொழி (பேசு) என்று நானறிந்த வகையில் வேறெந்த மொழியிலும் இது இல்லை என்றே சொல்லலாம்

 1. 10:19 PM  
  Anonymous said...

  மிக முக்கியமான பதிவு. நன்றி திரு.வரவனையான் அவர்களே.

  ஜாலிஜம்பர் சொன்னதுபோல இது மதுரைக்கு மட்டுமேயான நோய் அல்ல. ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான சமூகநோய். தமிழகத்தைச்சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் தமிழ்ப்பெயர் சூட்டுவதை ஏன் இவ்வளவு வெறுக்கிறார்கள் என்பதை ஒரு சமூகவியல் ஆய்வுக்கு உரித்தான விஷயம்.

  ஒவ்வொருமுறையும் இது தொடர்பான செய்திகளை எங்கேனும் படிக்க நேரும்போது என் பெண்ணுக்கு தமிழ்ப்பெயர் சூட்டுவது தொடர்பாக எனக்கும் என் மனைவிக்கும் நடந்த தொடர்சண்டை நினைவுக்கும் வரும். அவருடைய தமக்கை பெண்ணுக்கு சமஸ்கிருதப்பெயர். இவரும் இவருடைய சகோதர சகோதரியும் மத்திய அரசு கல்வித்திட்டத்தில் படித்தவர்களாகையால் தமிழகத்திலேயே, தமிழில் எழுதவோ, படிக்கவோ தெரியாமலேயே முதுநிலைவரை படிக்க முடிந்திருக்கிறது. இது தொடர்பான குற்ற உணர்வோ வருத்தமோ சிறிதும் இல்லை.(இதுவும் ஒரு சமூகவியல் ஆய்வுக்குரிய விஷயம் என்றே நினைக்கிறேன்) தனியாக கோடைவிடுமுறையில் மேற்கொண்ட ஏதோ துரித பயிற்சியினால் எழுத்து கூட்டி படிக்கும் அளவு மாபெரும் முன்னேற்றம். சிறப்புப்பாடமாக சமஸ்கிருதம் வேறு. கேட்கவேண்டுமா ?

  எனக்கு சமஸ்கிருதம் தெரியாதாகையால் எனக்கு அம்மொழியின் அழகு தெரியாது என்றும், அதனால்தான் நான் சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பதை எதிர்க்கிறேன் என்றும், அவர் சுமக்கும் பிள்ளைக்கு அவர் ஆசைப்படும் பெயர் வைக்க உரிமை இல்லையா என்றும், அவர்கள் வீட்டில் எல்லோரும் கூடி பேசி சமஸ்கிருதத்தில்தான், அதுவும் ஜாதகப்படி குறிப்பிட்ட எழுத்தில்தான் வைப்பார்கள் என்றும் அடிக்கடி சண்டை வரும். நான் 'எனக்கு சமஸ்கிருதத்தின் அழகு தெரியவேண்டும் என்பது எந்தவிதத்திலும் அவசியமில்லை. இன்னொரு மொழி என்ற அளவில் எனக்கும் அதை படிக்கவேண்டும் என்று ஆவலுண்டு, ஆனால் ஒரு தமிழனாக என் தாய்மொழி எனக்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற ஒரு தார்மீக பொறுப்பும் கடமையும் அதில் மகிழ்ச்சியும் உண்டு' என்றெல்லாம் விளக்க வேண்டும் என்று நினைத்து, அதில் பயனோ பொருளோ இல்லை என்பதால் 'தாராளமாக உன் விருப்பப்படி வைத்துக்கொள், ஆனால் சமஸ்கிருதம் இல்லாத தமிழ்ப்பெயர் தேர்வு செய்து சொல் அதேபடி வைப்போம்' என்று மட்டும் சொன்னேன். ஆனபோதிலும், சமஸ்கிருதத்தில்தான் பெயர் வைப்பேன் என்று பிடிவாதமாக இருந்தார். அப்புறம் உன்னிஷ்டம் என்று நான் ஒதுங்கிக்கொள்ள, பிறகு எப்படியோ சமாதானம் ஆகி என் வழிக்கு வந்தார் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதில் இன்னொரு கொடுமை, மின்னிலா என்ற தமிழ்ப்பெயரின் பொருளை பெயர்கேட்கும் ஒவ்வொரு தமிழரிடத்தும் விளக்க வேண்டியிருப்பதுதான். கொடுமைக்கு மேல் கொடுமை என்னவென்றால், என் மனைவியுடன் வேலைபார்க்கும் ஒரு தமிழன்பர் 'பேர் நல்லா இருக்குங்க, US பேரா ?' என்றாராம்.

  நிற்க !

  கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் இங்கே அமெரிக்காவில் நான் சந்தித்த பல தமிழர்களில் இரண்டே தமிழன்பர்கள் மட்டுமே தன் மகன்களுக்கு முறையே நம்பி மற்றும் சோழன் & செழியன் என்று தமிழ்ப்பெயர் வைத்திருந்தார்கள். மற்ற அனைவரும் வடமொழிப்பெயர்கள்தான். சில பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் வடமொழிப்பெயர்கள் என்றாலே பெரும்பாலும் அந்தண வகுப்பார் மட்டுமே சூட்டிக்கொள்வார்கள்; அவர்கள் யாரும் நல்ல தமிழ்ப்பெயரை வைப்பதில்லை (அப்படி வைத்தால் அது கடவுள் பெயராக இருக்கும்; ராகுல் ஸ்கந்தா என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? கடவுளைப்போலவே பெயரும் சமஸ்கிருதமயமாக்கப்பட்டாயிற்று) என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது அதில் விதிவிலக்கே இல்லை. எல்லா வகுப்பினரும் ஆதர்ஷ், விஷால், ரோனக், சஞ்சித், வர்ஷா இப்படி சரளமாக வடமொழி பெயர்கள்தான்.

  இதில் கொடுமை என்னவென்றால், சில அந்தணர் வகுப்பார், தன் பெண்களுக்கு தன் ஜாதி பெயரை கடைசீ பெயராக கொடுத்திருப்பது (இரு உதாரணங்கள் - சீமா ஐயங்கார், சேத்னா ஐயர்) 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடின எட்டையபுரத்துக்கவிச்சித்தன் நினைவுக்கு வந்து தொலைக்கிறான், என்ன செய்ய ?

  என் கேள்விகள் இவை :

  - ஏன் தமிழர்கள் சொந்த அடையாளத்தை இவ்வளவு வேகமாக துறக்கவேண்டும் ?
  - வடமொழி பெயர்கள் ஏதேனும் மேம்பட்ட அடையாளத்தை - கல்வியில், நாகரீகத்தில் இப்படி - தருகிறதா ?
  - தமிழ்ப்பெயர்கள் ஏதேனும் தீண்டத்தகாதவையா ?
  - ஏதேனும் மேட்டுக்குடி மனோபாவமா ?
  - தமிழ்ப்பெயர் என்பது ஏதேனும் அரசியல் அடையாளத்தை தந்து சங்கடத்தை ஏற்படுத்துகிறதா ?

  என்ன நடக்கிறது ?

  அன்புடன்
  முத்துக்குமார்

 1. பெயர் என்பது ஒரு பொருள் அல்லது ஒரு மானிடப்பிறவியை (விலங்குகளுக்கும் பெயர் வைத்து அழைக்கிறோம் அதை விடுங்க) அழைக்க, அடையாளம் கண்டுகொள்ள பயன்படுவது. அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்துக்கொள்வது. இதை இவ்வளவு பெரிதாக்கி ஊதுகிறீர்களே என்ன சொல்ல? பிரபாகரன் வடமொழிதானே? திலிபன் வட மொழி இல்லையா? தமிழ் வழி கிறித்துவர்கள் தமிழ் வழி பெயர் வைக்கிறார்களா? தமிழ் வழி முகலாயர்கள் பெயரில் தமிழாக்கம் செய்து கொள்கிறார்களா? மொழிப்பற்று அவசியம், மொழி வெறியல்ல. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை இதை புரிந்து கொள்ளவும். தரும நூல்களை ஊர்ந்து கவனித்துப்பார்த்தால் அதிலுள்ள அறிவியல் புரியும். இன்னும் வடக்கு தெற்கு என பிரிக்கப்பார்க்கிறோம் என்று மாறும் இந்த அவல நிலை. இன்னொறு முறை வேறு நாட்டினர் நம்மை ஆண்ட பிறகா? வூடு ரெண்டுபட்டா ஊர் சனத்துக்குத்தான் கொண்டாட்டம்

 1. நாவலர் நெடுஞ்செழியனின் இயற்பெயர்... நாராயணசாமி... நாவலர்... பேராசிரியரை தொடர்ந்து... கலைஞரும்... கருணாநிதியை அன்பு செல்வன் என மாற்றி கொள்ள விரும்பிய போது... கருணாநிதி என்ற பெயரில் பிரபலம் அடைந்து விட்டதால்... அண்ணா வேண்டாம் என சொல்லி விட்டாராம்...

  முப்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் அம்மா... என் அண்ணனுக்கு செந்தில் குமார் என பெயர் வைக்க வேண்டும் என கேட்ட போது... எங்கள் அப்பா வெற்றிச் செல்வன் பெயரை வைத்தாரம்... எங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு நல்ல தமிழ் பெயராக வைத்தார்கள்... முத்துச் செல்வன்... வெற்றி செல்வன்... கலைமணி... பாரி... நெருமாறன்... பாவை... எங்களை தமிழால் அடையாளம் கண்டார்கள்...

  ஆனால் அடுத்த தலைமுறையினர்... சூர்யா... ஆதித்யா... சந்தியா... சாணக்யா... என மாறி விட்டார்கள் என்பது குறையான ஒன்று...

 1. நாவலர் நெடுஞ்செழியனின் இயற்பெயர்... நாராயணசாமி... நாவலர்... பேராசிரியரை தொடர்ந்து... கலைஞரும்... கருணாநிதியை அன்பு செல்வன் என மாற்றி கொள்ள விரும்பிய போது... கருணாநிதி என்ற பெயரில் பிரபலம் அடைந்து விட்டதால்... அண்ணா வேண்டாம் என சொல்லி விட்டாராம்...

  முப்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் அம்மா... என் அண்ணனுக்கு செந்தில் குமார் என பெயர் வைக்க வேண்டும் என கேட்ட போது... எங்கள் அப்பா வெற்றிச் செல்வன் பெயரை வைத்தாரம்... எங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு நல்ல தமிழ் பெயராக வைத்தார்கள்... முத்துச் செல்வன்... வெற்றி செல்வன்... கலைமணி... பாரி... நெருமாறன்... பாவை... எங்களை தமிழால் அடையாளம் கண்டார்கள்...

  ஆனால் அடுத்த தலைமுறையினர்... சூர்யா... ஆதித்யா... சந்தியா... சாணக்யா... என மாறி விட்டார்கள் என்பது குறையான ஒன்று...

 1. Sorry for typing in English...
  good post... You have got plenty of good tamil names...

 1. முன்பெல்லாம் பெயரைக் கேட்டு எந்த மாநிலத்தவர் என்று சொல்லிவிடலாம். இப்போதும்தான். நல்ல பெங்காலி பெயரோ, பஞ்சாபி பெயரோ, வாயிலே நுழையாதவாறு ரூம் போட்டு யோசித்து வைத்த சமஸ்கிருத பெயரோ இருந்தால் உடனே சொல்லிவிடலாம், தமிழர் என்று :-)

 1. what about my name?

 1. தமிழில் மொழி (மொழிதல்) என்று நானறிந்த வகையில் வேறெந்த மொழியிலும் இது இல்லை என்றே சொல்லலாம்

  பேசு என்பதற்கு பதில் மொழிதல் என்று போட்டு இருந்தால் எளிதாக புரியும்.
  :)

 1. பதிவுக்குப் பாராட்டுகள் வரவணை.
  தொடர்ந்து இது குறித்து எழுதுங்கள்.
  நல்ல மாற்றங்கள் ஏற்பட உதவும்.

  ஆட்டம் கண்டு பிறழ்ந்து போன அடிப்படைகளில் இதுவும் ஒன்று.

  இவற்றையெல்லாம் மீட்காமல்
  தமிழர்களின் முன்னேற்றம் வளர்ச்சி
  என்பதெல்லாம் பொய்.

  அன்புடன்
  நாக.இளங்கோவன்

 1. நன்றி வரவனை.

  ஒரு காலத்தில், கல்லூரியில் படிக்கும்போது, என் பெயர் குறித்து எனக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தது. பின்னர் அது நல்ல அழகான தமிழ்ப்பெயர் என்பதை நானேயுணர்ந்து மகிழ்ந்தேன். அதேபோல் என் பையனுக்கும் ஒரு நல்ல தமிழ்ப்பெயர் சூட்டவேண்டும் என் நினைத்து அதன்படியே செய்தோம். இது குறித்து ஒரு இடுகையிட வேண்டுமென்பது என் நீண்ட நாளைய திட்டம். கூடிய விரைவில் கைகூடுமென நம்புகிறேன்.

 1. //"தமிழ் மொழி" என்று அழுத்திச்சொன்னால் கட்டளைச்சொல்லாகவும் மாறிவிடும்//

  'இல்' அங்குத் தொகையாகி நிற்கிறது.
  எனினும், எந்த மொழிக்கும் இல்லாத பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிலங்கும் தமிழுக்குப் புதிதாக, பொருந்தாத ஓர் உவமையைக் கூற வேண்டுவதில்லை.

  மொழிவது, கூறுவது, பேசுவது, உரையாடுவது, செப்புவது, முழங்குவது ஆகிய அனைத்திற்கும் தனித்தனி பொருட்கள் உள.

  "தமிழ்" "சொல்" என்னும் இரு சொற்களையும் என்றும் 'தமிழ்ச் சொல்' என்று ஒற்றிணைத்து எழுதுதலே முறை. "தமிழில் சொல்" என்று வலிந்து பொருள் கொள்ளத் தேவையில்லை.

  "தமிழில் மொழி" என்றால் தமிழில் மெள்ளப் பேசு என்று பொருளாம்.

  மெள்ளப் பேசுவதோ எம்மொழி?

 1. //தமிழின் அருமையில் இன்னொன்று மொழியின் பெயரை மாந்தர் பெயராக தரித்தது தமிழில் மட்டும் தான்.//
  பிரான்ஸில் francois என்று பெயர் வைக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த பெயர் பிரஞ்சு மொழியைக் குறிப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

 1. செந்தில்குமார் என்கிற பெயரும், பாலகிருஷ்ணன் என்கிற பெயரும் அருமையான தமிழ்ப் பெயர்கள்தான்.. இதில் செந்தில் என்பதில் ஒரு முருகனும், குமாரில் ஒரு முருகனுமாக இரண்டு முருகன்கள் தொக்கி நிற்கிறார்கள்.

  பாலகிருஷ்ணனில் பாலா என்பதில் ஒரு ராமனும், கிருஷ்ணன் என்பதில் ஒரு ராமனும் ஆக இரண்டு ராமன்கள் ஆண்டு வருகிறார்கள்.

  பேரை மாத்துறாங்களாம் பேரை.. அப்பா, அம்மா எம்புட்டு ஆசையா பெத்து, ஆசையா பேர் வைச்சா.. ஸ்கூல்ல போய் பாடத்தை மட்டும் படிக்காம கண்ட, கண்டதையும் படிச்சு புத்தி கெட்டுப் போய் அப்பன், ஆத்தா வைச்ச பேரையே மாத்தி வாய்ல நுழையாத ஒண்ணை பேருன்னு சொல்லி வைச்சுட்டு அதையே தம்பட்டம் வேற அடிக்கிறது.. அப்பன், ஆத்தா மனசு எம்புட்டு ரணமாகும்னு யாருக்குப் புரியுது..?

  ம்.. என்னத்த சொல்றது..? கலியுகம்..

 1. சம்பந்தமான சுட்டி : தமிழ்மக்கட் பெயர்

 1. மொழிக்கும் பெயருக்கும் முடிச்சு போடக்கூடாது. மொழி மட்டுமே அடையாளமன்று. மதம், இனம், வாழும் தேசம் என்று இன்னும் எத்தனையோ பிற காரணிகளை உள்ளடக்கியதுதான் ஒருவனின் பெயர். அவரவர் வாழும் சூழ்நிலைக்கேற்ப பெயர் வைத்துக்கொள்கிறார்கள். அந்தப் பெயரை மாற்றச் சொல்லி விவாதிப்பது வீண். நன்றி.

 1. வடமொழிப் பெயரை மாற்றுவதே வழக்கமாக உள்ளது. அது இன விடுதலையின் அறிவிப்பே அல்லால் வெறுப்பன்று. தன் பெயரை மாற்ற விரும்பிய கருணாநிதி தன் மகனுக்கு தமிழுக்கு ஒவ்வாத பெயர் (ஸ்டாலின் - மெய் முதல் வரும் பிற மொழிச்சொல்) வைத்தது சிறந்த எடுத்துக்காட்டு.

  எருமையூர் ஏன் மகிஷாவூர் -> மைசூர் ஆக வேண்டும் என யோசித்தால் தமிழ் பெயரின் அவசியம் புரியும்.

  உமையணன் தகவலுக்கு நன்றி.

  ஜம்பர், கொஞ்சம் சீரிய முற்சி தேவை. நானும் உதவகிறேன்.

  \\மதுரை மக்களை இப்போது விசித்திர வியாதி ஒன்று பிடித்துள்ளது.குழந்தைகளுக்கு 'ஷ' என்னும் எழுத்து வருவதைப் போன்ற வடமொழிப் பெயர்களாக கண்டுபிடித்து வைக்கிறார்கள்.\\

  அப்ப ஷிட் னு வைக்க சொல்லுங்க!

 1. விட்டுப்போன துணுக்கு, தன் இயற்பெயர் குறித்து வருந்திய லக்கிலுக் தன் புனைப்பெயர் குறித்து வருந்தாததின் காரணமும் மேற்சொன்னவாறு. அப்படித் தானே லக்கி?

 1. //அப்படித் தானே லக்கி?//

  ஆமாம் :-(

 1. 4:41 PM  
  Anonymous said...

  ( நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று எனும் மெட்டில் பாட வும்)
  தம்பி நான் படிச்சேன்
  டோண்டுவிலே நேற்று
  அதை நானுக்கு
  சொல்லட்டுமா இன்று

  டோண்டு மொக்கைகளை
  எழுதும் ஒரு அய்யர்
  இது சுகுணாவே சொல்லிவைத்த உண்மை

  (தம்பி...............)

  இணையத்தின் தந்தையென
  பலர் இருந்தார் -டோண்டு
  இடையினிலே மொக்கையாக
  வந்து ஒட்டினார்

  நாட்டுக்காக பதிவெழத
  டோண்டு நினைத்தார்
  தன் நலத்திற்க்குதான்
  பதிவெழுதி வெறுப்பேத்தினார்.

  எழுதியபின் மொக்கைகெல்லாம்
  பின்னூட்டம் இட்டார்
  தான் எழுதியது புகழடைய
  எழுதி ஒட்டினார் !

  தெருத்தெருவா உதைவாங்கும்
  பதிவர் டோண்டு
  சும்மா நோண்டிவிட
  நினைத்தாலே சுயநலம் உண்டு

  மக்கள் நலம் மக்கள் நலம்
  என்று சொல்லுவார்
  தம் குடுமி நலம்
  ஒன்றில்தான் கும்மியடிப்பார்!

  தம்மக்கள் நலம் ஒன்றுக்குத்தான்
  குடுமியாட்டுவார்!

  (தம்பி ..................... )

  ஏய்ப்பவர்க்கே காலம் என
  எண்ணிவிடாதே
  பொய் எத்தனை நாள்
  கைக்கொடுக்கும்
  மறந்துவிடாதே

  ஒருநாள் இந்த நிலமைக்கெல்லாம்
  மாறுதல் உண்டு
  அந்த மாறுதலை செய்வதற்கு
  தமிழ் மணம் உண்டு
  அந்த மாறுதலை
  செய்வதற்கு தமிழ் மணம் உண்டு

  ஒரு பதிவு என்பது
  நேற்று
  அது மொக்கை என்பது
  இன்று
  அது கும்மி ஆவது நாளை
  வரும் சோதனைதான்
  இடைவேளை.


  (தம்பி .....................

  (கம்யூனிஸ்டுகளின் சொர்க்கம் என டோண்டு எழுதிய அரைகுறை அசட்டுதனத்துக்கு பதில் எழுத நினைத்தேன் .ஆனால் டோண்டுவுக்கு அதெல்லாம் அதிகம் என நினைத்ததால் இந்த பாடல் உடன் நிறுத்தி கொள்கிறேன்.


  அடுத்த பாடல்
  வர்றார் வர்றார் நம்ம டோண்டு அய்யர்
  posted by தியாகு

 1. 9:19 PM  
  செ.ச.செந்தில்நாதன் said...

  தமிழ்ப் பெயரிடுதலின் பின்னுள்ள அரசியலை முழுமையாக புரிந்தவன் நான். எனவே எனது செல்லங்களுக்கு நாங்கள் இட்ட பெயர் கவின் மற்றும் ஓவியா. இதை எனது உறவினர்களிடம், நண்பர்களிடமும் எடுத்துச்சொல்லி தமிழ்ப் பெயரிடுதலின் பின்னால் உள்ள அரசியலையும் விளக்குவேன். அத்துடன் அவர்கள் பலருமே அவ்வாறு பெயரிடுதலை விரும்பி செய்பவர்களாகளாக இருப்பவர்கள்.

  எனது தங்கையின் மகன் பெயர் யாழினியன். என் தம்பியின் மகள் பெயர் இசை மொழி, மகன் பெயர் செழியன். ஏதோ காரணத்தால் அதை இப்போது குணவழகன் என்று மாற்றிவிட்டார்கள். எனது இன்னொரு தங்கையின் மகனுக்கு முகி்ல் என்று பெயர்வைத்தோம். (ஆனால் வேறு காரணத்துக்காக அதை ஜெயசூர்யா என்று பிறகு மாற்றிவிட்டார்கள் மாப்பிள்ளை வீட்டார்).

  எனது குடும்பங்களில் துள்ளி விளையாடும் மேலும் சில குழந்தைகளின் பெயர்கள் - இசை யாழினி, கலை யாழினி, முத்துக்குமரன்.

  எனது நண்பர்களின் வீட்டுச் செல்லங்கள் இவை - மகிழ்நன், பாவை, எழில், கதிர், கனல், பரிதி...

  இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் யாரும் தமிழாசிரியர்களோ தனித்தமிழ் இயக்கத்தவர்களோ அல்ல. அவர்கள் பலவிதமான தொழில்களில் ஈடுபடுபவர்கள். நான் மொழிபெயர்ப்பாளன், இரண்டு நண்பர்கள் அரசு ஊழியர்கள், இரண்டு உறவினர்கள் மருத்துவர்கள், ஒருவர் மென்பொருள் நிபுணர்.

  நிறைய நல்ல பெயர்கள் இருப்பதால் நிறைய பெற்றுக்கொள்ள முடியாதே என்று விட்டுவிட்டோம்.

  தமிழ்ப் பெயர் வைத்திருப்பதன் பின்னுள்ள அர்த்தத்தை புரிந்துகொண்டிருப்பவர்கள் அதற்காகவே பெருமைப்படுகிறார்கள் என்பதையும் பார்த்திருக்கிறேன்.

  எனது மகனின் பெயர் (கவின்) பலருக்கும் பிடித்திருக்கிறது போலிருக்கிறது. அதைப் பார்த்து ஒருவர் தன் பிள்ளைக்கு கவின் என்று பெயர்வைத்திருக்கிறார்.

  அவனது பள்ளி ஆசிரியைகள்தான் அவனை கெவின் என்றே கூப்பிடுகிறார்கள்.

 1. //வடமொழிப் பெயரை மாற்றுவதே வழக்கமாக உள்ளது. அது இன விடுதலையின் அறிவிப்பே அல்லால் வெறுப்பன்று. தன் பெயரை மாற்ற விரும்பிய கருணாநிதி தன் மகனுக்கு தமிழுக்கு ஒவ்வாத பெயர் (ஸ்டாலின் - மெய் முதல் வரும் பிற மொழிச்சொல்) வைத்தது சிறந்த எடுத்துக்காட்டு.//

  மிக்க நன்றி முகவை மைந்தன்.என் மகளுக்கு மனித இனத்தின் மாபெரும் தலை மார்க்ஸின் மனைவி ஜென்னியின் பெயரை வைத்திருக்கிறேன்.அது ஒரு நெருடலாகவே எனக்கு இருந்து வந்தது.உங்கள் விளக்கம் அதை தீர்த்து விட்டது.

  பிரியனின் சுட்டிக்கு மிகவும் நன்றி.

 1. 10:07 PM  
  இறையரசன் said...

  அன்பார்ந்தீர்! வணக்கம்.
  என் வலைப்பூ “தமிழ்ப்பெயர்கள்.பிளாக் ஸ்பாட்.காம்” பாருங்கள்.
  அன்பிலே
  தஞ்சை இறையரசன்.

 1. அன்பார்ந்தீர்! வணக்கம்.
  என் வலைப்பூ “தமிழ்ப்பெயர்கள்.பிளாக் ஸ்பாட்.காம்” பாருங்கள்.
  அன்பிலே
  தஞ்சை இறையரசன்.