Tuesday, September 04, 2007

@ 11:21 AM எழுதியவர்: வரவனையான்அப்பல்லாம் காலையில வெள்ளனவே எந்திரிச்சுருவேய்ன், எந்திரிச்சவுடனே நேரா வீட்டுக்கு வெளியே செந்திலு வீட்டுக்கு எதிரில இருக்குற நம்பிக்கை டீச்சர் காம்பவுன்ட் கிட்ட நான் போக சரிய வெளிய வருவான் ராஜ்குமாரு. ரெண்டு பேருக்கும் அந்த செவுத்துல யாரு உசரமா உச்சா போறதுன்னு போட்டி நடக்கும் தெனமும் . உண்ணி உண்ணி அடிச்சதுல ஒரு தடவை காம்பவுண்டு தாண்டி உள்ள அடிச்சு ஜஸ்டின்'னோட பாட்டி மேல பட்டு எங்கள வெளக்கமாத்த எடுத்து தொரத்துனது தனி கதை.

எங்க காம்பவுண்டுக்கு எதுத்தாப்புல இருந்து இடதுபக்கமாய் அண்டிராயர் மாமா விட்டுக்கு அடுத்து இருந்துச்சு என் முதல் நண்பன் செந்தில் வீடு. கொழும்பு நகைக்கடை செட்டிமாரு அவுங்க. என்னை விட ஒரு வகுப்பு மூத்து அவன். என்ன பெரிய மூத்து நான் கிண்டர் கார்டன் அவன் லோயர் கின்டர் கார்டன் அம்பூட்டுதான். நானும் செந்திலும் அவ்ளோ அந்நியோனியமா இருப்பம். அவன் ஒரு கோயிலு செங்கல வச்சு கட்டி முருகன் படம் வச்சான், அதுக்கு முன்னாடி ஒரு குழிய தோண்டி அதுக்கு மேல பழைய புத்தக அட்டைய வச்சு அது நடுவுல பிளேடு வச்சு கீரி உண்டியலா மாத்தினான்.

"செட்டிப்பய கூட சேர்ந்தா உண்டியல வைக்கதான் கத்துக்கொடுப்பான்" ராஜ்குமாரு அம்மாச்சி கிண்டலடிக்கும்.

இத கேட்டுட்டு

" அவ கெடக்க ஏழுருகாரி "ன்னு செந்திலு ஆச்சி கைய நெடிக்கும். ( ராமநாதபுரம் கிருத்துவ வேளாளர்களை மதுரை பக்கம் இப்படி அழைப்பார்கள், 7 கிராமத்து வேளாளர்கள் மட்டும் முன்பு கிருத்துவத்துக்கு மாறியதால் இப்பெயர் )

இப்படி போயிகிட்டிருந்த போதுதான் ஒருனாக்காலையில உச்சா அடிக்கிற போட்டிக்கு மூத்திரத்த அடக்கிகிட்டு வெளிய ஓடினா அன்டிராயர் மாமா வீட்டுக்கு வலப்புறம் இருந்த "யார்" வீட்டு முன்னாடி ஒரு லாலி ச்சா லாரி நின்னுச்சு. ( அது யார் வீடு என்று தெரியாதாலும், அப்போ யார் என்கிற பேப்படம் "பயங்கரமாய்" ஓடியதாலும் என் மூத்த தலைமுறையான அண்ணனின் நண்பர்கள் வைத்த பெயர் ) அந்த வீட்டின் அருகில் கூட போக மாட்டோம். அதன் தோற்றம் அப்படி. ஆண்டுகணக்காய் வாராப்படாத காய்ந்த இலைகளும் குப்பையுமாய் இருக்கும். அந்த சின்ன தெருவுக்கு சம்மந்தமில்லாத மிகப்பெரிய வெராந்தை கொண்ட முகப்பும் அதன் வாசலில் இருக்கும் சாத்தானை கொல்லும் பெரிய சைஸ் படம் என்று அது குறித்து அளக்கபட்ட கதையை உண்மையாக்குவது போன்றே இருக்கும் அதன் தோற்றம். கிரிக்கெட் ஆடும் போது கூட "யார்" வீட்டுக்குள்ள அடிச்ச அவுட்ன்னு ரூள்ஸ் வச்சுருந்தோம்.

லாரியில இருந்து வீட்டு சாமான் இறங்கிட்டு இருந்துச்சு, அது வரை நான் பார்க்காத பொருளா இருந்துச்சு. மதுரை டவுண்ஹால் ரோட்டில பார்த்திருந்த டிவீ ஒன்னு இறக்குனாங்க. அது கடையில பார்த்ததை விட முணு மடங்கு பெருசா இருந்துச்சு. இத பாத்த ஆச்சரியத்துல உச்சா போட்டிய மறந்துட்டேன். அடக்கி அடக்கி பாத்த ராஜ்குமாரு அடக்க முடியாம டவுசரோட அடிச்சு அவங்க அப்பாட்ட குண்டி குண்டியா முருங்கை குச்சில அடிவாங்குனது அடுத்த நா காலையிலதான் தெரிஞ்சுச்சு.

அதுக்கடுத்த ஆச்சரியம் ஒண்ணு நடந்துச்சு, அந்த "யார்" வீட்டுல இருந்து ஏய்ன் வயசு பசங்க ரெண்டு பேரு வெளிய வந்தாங்க. ஒரு கைல டீ கப் வச்சுகிட்டு வாசலில இருந்த திண்ணையில உக்காந்தவங்க ஒரு மடக்கு டீயை குடிக்க இன்னோரு கைய்யில எதையோ வச்சுகிட்டு ஒரு நக்கு நக்கவுமா இருந்தாங்க. எனக்கு ஒரு சிறுவனுக்குரிய ஆச்சரியம் கிளர்ந்தெழ அருகே போய் பாக்க ஆசை அதே நேரத்துல பயமும் இருந்துச்சு. காரணம் அவங்க அம்மா ஒரு கவுனு போட்டுகிட்டு நின்னுகிட்டு இருந்தாங்க. அது ஒரு ஆச்சரியம் இப்படி தெரிந்தே ஆகவேண்டிய புதிர்களுடன் நின்னுகிட்டு இருந்தவனை கைப்பட்டைய புடிச்சு பரபரன்னு இழுத்து குளிக்க கொண்டுபோக பள்ளி நினைவுகள் அழுகை கொண்டு வர எல்லாம் மறந்து போனேன்.

மைக்கானாளு காலையில ஒன்னுக்கடிக்க ஓடினா செந்திலு வீட்டுல ஒரே சத்தம். ராஜ்குமாருகிட்ட கேட்டேன்.அவனும் தெரியலைன்னு சொல்ல செந்திலு வீட்டுக்குள்ள ஓடினேன் செந்திலும் அவன் சித்தி மக உமாவும் ஒரே அழுகையும் கையுமா உக்காந்து இருந்தாங்க. சாயுங்காலம் ஒளிஞ்சு புடிச்சு வெளையாட போறப்பத்தான் செந்திலு சொன்னான் எங்கப்பா கடைய எரிச்சுப்புட்டாங்க அப்பாவையும் கொன்னூட்டாங்கன்னு. எனக்கு அப்ப பாத்த எதோ படத்துல ஒருத்தன் அப்பாவை கொல்லுற சீனுதான் நாபகத்துக்கு வந்துச்சு. அடுத்த நா காலையில ஏரோபிளைனில அவங்கப்பவ கொண்டுவந்தாங்க. பொணத்த வாசலிலிலையே வச்சாங்க உள்ளாற கொண்டு போகல. என் நெனவு தெரிஞ்சு மொத மொற ஒரு பொணத்த அப்பத்தான் பாக்குறேன்.

எங்க அப்பாவும் தோமாஸ் வாத்தியாரும் போயி மாலை போட்டாங்க. அப்ப அவங்களுக்கு பின்னாடியே "யார்" வீட்டுக்கு குடி வந்திருக்கிற அந்த பசங்களோட அப்பாவும் அந்த பசங்களும் வந்து மாலை போட்டாங்க. குளிப்பாட்ட தூக்கிட்டு போனவுடன் எங்கப்பாட்ட பேசிகிட்டு இருந்தாரு அப்போதான் அவனுங்ககிட்ட பேசினேன். ஒருத்தன் பேரு சரவணன் இன்னோருத்தன் பேரு ருத்திரன். எங்கட அப்பா டொக்டர், கெனடாவுல இருந்து வந்திருக்காரு எங்கட வூரு ஸீறீலங்கன்ன்னு சொன்னானுக.

அதுக்குபிறகு ஒரு நா செந்திலு அண்ணன் சேகர் ஜெயவர்த்தனா படத்தை எங்க மேலப்போன்னகரம் 7 வது தெருவுல வரைஞ்சு செருப்பால அடிச்சிகிட்டே கோசம் போட சொல்லி கொடுத்தாரு.

" அஞ்சு பைசா முறுக்கு ஜெயவர்த்தனாவை நொறுக்கு"ன்னு


சொல்லிகிட்டே இருக்கனும் அவரு ஓரமா நின்னுகிட்டு பாப்பாரு. கொஞ்ச நேரம் கழிச்சு சிலோன் தேங்காய் மிட்டாயி கொடுப்பாரு. இது கேள்விபட்டு 8வது தெருல இருந்து பசங்க வந்து அவனுங்களும் கோசம் போட்டு செந்திலு அண்ணன்கிட்ட இருந்த தேங்காய்மிட்டாயிலாம் காலி பண்ணிட்டாங்க.


அடுத்தநாளு தமுக்கம் மைதானம் கூட்டிட்டு போனாங்க அங்க எதோ மாநாடாம். நான் பொருட்காட்சிக்கு மட்டும் ஒரு தடவ போயிருக்கேன். அப்ப ஒரு ஸ்டாலுக்குள்ள படமா வச்சுருந்தாங்க அதுல ஒரு படத்துல ஒருத்தரு டயர கட்டி எரிச்சுகிட்டு இருந்ததை படம் புடிச்சு போட்டிருந்தாங்க. எனக்கு அழுகையா வந்துச்சு, செந்திலு அப்பா இப்படித்தான் செத்திருப்பாருன்னு நெனச்சதாலா. நெறையா பொஸ்தகம் காலண்டரு வாங்கினாங்க அப்பாவும் சித்தப்பாவும். ஒருத்தரு படம் போட்ட சின்ன புத்தகம் வாங்கின போது காசு என்கிட்ட கொடுத்து குரூஸ் வாத்தியாரு மாதிரி பெல்ஸ் போட்டு குட்டைய இருந்த ஒருத்தருட்ட கொடுக்க சொன்னாங்க. அவரும் வாங்கிட்டு என் கன்னத்தை கிள்ளிட்டு "நன்றி தம்பி"ன்னு சொன்னாரு. வீட்டுக்கு வந்து பாத்தா அவரு படம்தான் இந்த புத்தகதுல போட்டு இருந்துச்சு ஆனா இதில கோடுகோடா சட்டை போட்டு கையில தூப்பாக்கி வச்சுருந்தாரு.சவணனும் ருத்திரனும் பிரண்டாகிட்டானுங்க இப்போ, அவங்க வீட்டுக்கிட்ட போனா சாயாங்காலத்துல "தேத்தண்ணி குடிங்கோ"ன்னு கேப்பாங்க சீனி போட்டு கொடுத்தா குடிப்பேன்னு சொல்லிட்டேன்.

அவனுங்க செய்யுறதுல்லாம் ஒவ்வோன்னும் ஆச்சரியமா இருக்கும்.

"அம்மா, தம்பியை பாருங்க குழப்படி செய்யுறார்"ன்னு சரவணன் சொல்ல

அவங்கம்மா வந்து " ருத்திரன் ஏன் இப்படி செய்றீங்கள், அண்ணனிட்ட மன்னிப்பு கேளுங்க"ன்னு சொல்ல எனக்கு பெரிய ஆச்சரியமா இருக்கும்.என் அண்ணனோ என்னைய பாத்தாலே பொடனில லொட்டு ஒரு அடி போட்டுட்டுதான் அடுத்த வேலை பார்ப்பான். நான் அவனும் அவன் பிரண்ட்ஸும் குண்டுவெளையாடுற குழில ஆள் இல்லாதப்போ ஒண்ணுக்குகடிச்சு வச்சுட்டு அடுத்தநாள் அவனுங்க வெளைட்யாடும் போது ஹிஹின்னு சிரிப்பேன். அவணுங்களுக்கு புரிஞ்சுடும் வெரட்டி வந்து புடிச்சு அவன் மட்டுமில்லாம அவன் கூட்டாளுகளும் சேர்ந்து மண்டையில் ஆக்கர் பார் விளையாண்டு போவானுக.

வெளாட்டு சாமானும் பூர புதுசா இருக்கும் சரவணன் கிட்டையும் ருத்திரன் கிட்டையும். மெஷின் கன் அப்படியே உண்மையா இருகிற போலவே இருக்கும். என் கிட்ட ஈகிள் கொல்ட் தூப்பாக்கி இருந்துச்சி பாக்க நெசமான தூப்பாக்கி போலவே இருக்கும். அதுல கழுகு எம்பளம் இருப்பத பாத்து சரவணன் தன்னோட புது மெஷின் கன்'ன்னை எனக்கு கொடுத்துட்டு அந்த தூப்பாக்கியை கேட்டான் நான் ஆசையா வீட்டுக்கு கொண்டு வந்தா எங்கம்மா முதுகுல ரெண்டு அடி கொடுத்து மரியாதையா திரும்ப வாங்கியாடான்னு வெரட்டி விட்டுச்சு. இத கொடுக்க போனபோதுதான் மொததடவ அவங்க வீட்டுக்கு போனேன். உள்ளார எல்லா ரூமிலையும் கழுகு படமா இருந்துச்சு. சரவணனுக்கு கோவம் தூப்பாக்கியை திரும்ப கேட்டதுல. எங்களுக்கு கழுகுதான் புடிக்கும் உங்களுக்கு எது புடிக்கும்ன்னு கேட்டான்; எங்களுக்கு புலின்னு சொன்னேன், அவங்கம்மாக்கு ஒரே சிரிப்பு.

எங்கண்ணன் என்.சி.சி பரே ஒன்னு பழசு கிடந்துச்சு வீட்டுல அத எடுத்து போட்டுகிட்டு ஒரு நா காலையில " நாந்தான் புலி, நான் சுடுவேன் எங்க ஓடு"ன்னு ராஜ்குமாரை வெளையாட கூப்பிட்டேன். அவனுக்கு கண்ணுல தண்ணிகட்டிருச்சு டேய் நானும்தாண்டா புலி சொல்லி அழுகுறமாதிரி ஆகிட்டான். சரி வாடா வெளையாட போகலாம்ன்னு "யார்" வீட்டுக்கு கூப்பிட்டு போனேன். அவனுங்க ரெண்டு பேரும் கழுகுன்னு சொல்லிகிட்டானுக்க. வெளையாண்டிகிட்டு இருக்கப்பவே அவங்க அம்மா வர அது வரை "கழுகாய்" இருந்து சுட்டுகிட்டு இருந்த ருத்திரன் உடனே நான் இப்போ புலின்னு சொல்லி எங்க பக்கம் சேர்ந்துகிட்டான். சரவணனுக்கு அழுகை வந்து ஓடிப்போக வெளையாட்டு முடிஞ்சுபோச்சு. நான் மாடில இருந்து நாலு நாலு படியாதாண்டி இறங்க கீழ விழுந்து நெத்தில ஒரு வெட்டு விழுந்து ரத்தம் கொட்டு கொட்டுன்னு கொட்ட வேலை விட்டு வந்துகிட்டு இருந்த ராஜ்குமாரு அப்பா தூக்கிகிட்டு சரவணன் வீட்டுகுள்ள ஓடினாரு.

அவங்கப்பா எனக்கு நெத்தில நாலு தையல் போட்டு ரெண்டு நாளைக்கு ஸ்கூலுக்கு அனுப்ப வேணாம்னு சொல்லிவிட்டாரு. தினமும் வந்து ஊசி போட்டுக்க சொல்லியிருந்தார். மறு நாளு காலையில வரமாட்டேன்னு அடம் புடிச்சவன் கைய தர தரன்னு இழுத்துட்டு முன்னாடி வீட்டு நாயக்கரு அம்மாச்சி கூட்டிட்டு போச்சு. ஊசி போட்டுகிட்டு வெளியே வரும்போதுதான் பாத்தேன் சரவணனும் ருத்திரனும் ஸ்கூலுக்கு போகாம இருந்தானுக. கேட்டாக்க அவங்க மாமா ஊரில இருந்து வாராருன்னு சொன்னானுங்க. நான் அங்கனயே வெளையாடிட்டு இருந்தேன். காரில வந்தாரு அவங்க மாமா கூடவே செவப்பா அவங்க மாமியும் வந்தாங்க. மொத நாளே எல்லாருகிட்டையும் பிரண்டாகிட்டாரு அவங்க மாமா. பேரு கேட்டேன் டைகர் மாமான்னு கூப்பிட சொன்னாங்க சரவணன் அம்மா. அவ்ளோ கதை சொல்லுவாரு அந்த மாமா. அவர சுத்தி ஒரே பசங்க கூட்டம்தான். உமர் முக்தர் படத்தை கதை மாதிரி அவரு சொன்னா ராஜ்குமாரு செந்திலு எல்லாம் வாய்க்குள்ள வண்டு போனாகூட தெரியாத அளவுக்கு பொழந்துகிட்டு கதை கேப்பானுங்க.

தையல் பிரிக்கும் போது டைகர்மாமா எங்கன்னு கேட்டேன் சரவணன்கிட்ட, அவங்க அப்ப எதுக்கு தம்பி கேக்குறீங்கன்னு கேட்டாரு. "இல்லை இன்னைக்கு ஒரு சண்டை கதை சொல்லுறேன்னு சொன்னாரு" அதுக்குதான்ன்னு சொன்னேன். இவரு அவங்க அம்மா பக்கம் திரும்பி "ஜாப்னாகாரங்க மாதிரி கதை அளக்கமுடியாதுல"ன்னு சொல்லி சிரிச்சாரு.

அதுக்கு பிறகு அவங்க மாமி மட்டும்தான் அங்க இருந்தாங்க. மாமா அடிக்கடி எங்கையோ போயிருவாரு அப்புறம் ஒரு மாசம் கழிச்சுதான் வருவாரு. எங்களுக்கு முழுப்பரீட்சை லீவுவிட்டுருச்சு. ஒரு நா மதியம் தெருவுல கிரிக்கெட் ஆடிகிட்டு இருந்தோம். அப்போ ஆட்டோவில வந்து இறங்கின சரவணன் மாமா "யார்"வீட்டு வாசலில நின்னு கத்தினாரு "டே சுப்பிரமணின்னு, உன்னைய குத்தாம விடமாட்டேன்டான்னு ஒரு கத்திய எடுத்து காட்டினாரு. பட்டன் கத்தியாம் அது அவரு போன பிறகு தாமஸ் அண்ணே சொல்லுச்சு.

மே மாசம் வந்துச்சுன்னா அன்டிராயர் மாமா வீட்ட ஒட்டி இருக்கிற மாமரத்துல காய் கொத்து கொத்துதா காய்க்கும் . ஒரு தடவ மாங்காய் பறிச்ச கம்மாய்கரைகாரணுங்களை வெரட்டி ஓடும் போது கைலி அவுந்துதது தெரியாம அண்டிராயரோட ஓடினாதால அவருக்கு "அண்டிராயரு மாமா"ன்னு பேரு வந்துச்சாம். நானும் அண்ணனும் நம்பிக்கை டீச்சர் நாலு மாங்காய் கேட்டாங்கன்னு சொல்லி தொரட்டி வாங்கிட்டு ஒரு டஜன் மாங்காயை உலுப்பிவிட்டுருவோம் அது "யார்"வீட்டு மேலேதான் விழுகும். அப்பறம் போய் எடுத்துகுவோம். ஒரு நா அண்டிராயரு மாமா காம்பவுண்டு சொவத்துல ஏறி தொரட்டியை தூக்கமுடியாம தூக்கிட்டு இருக்கும் போதுதான் ஜன்னல் வழியாய்பாத்தேன் சரவணன் அப்பா அவங்க மாமி மேல டிரஸ் இல்லாம படுத்து இருந்ததை, நான் அதை பாத்துகிட்டு இருந்த நேரத்துலதான் சரவணன் அம்மாவும் அந்த ரூமுக்குள்ள வந்தாங்க . அதுக்கு பிறகு ஒரே சத்தமாதான் கேட்டுச்சு. நா பாக்கிற முன்னே கக்கூஸு கழுவ வந்த வள்ளியம்மா பாத்துதான் சரவணன் அம்மாட்ட சொன்னாங்களாம்.

அவுங்க மாமா அடுத்த நாள் வந்தாரு. இப்போ குடிக்கல அமைதியா வந்துட்டு, அவங்க மாமியை வெளியே கூட்டிட்டு போனாரு, வாசலில வந்து திரும்பி பார்த்து "னல்லவேளை இவளை லண்டன் எடுக்க நாய் மாதிரி அலைஞ்சும் வேலை நடக்காதது நல்லதாப்போச்சு'ன்னு சொல்லி டாக்டரு அங்கிளை பாத்து த்தூன்னு ஒரு துப்புதுப்பிட்டு போயிட்டாரு. அதுக்கு பொறகு சரவணன் அம்மா வெளியேவே வந்து நான் பாக்கல்ல .நானும் இப்பல்லாம் "யார்"வீட்டுக்கு வெளையாட போறதில்ல. நாயக்கரு அம்மாச்சி அங்க முனி நடமாட்டம் இருக்குன்னு ஒரு நா சொன்னதில இருந்து.

கால் பரீட்ச்சை முடிஞ்சு 10 நாளு லீவுன்னு வாத்தியாரு சொல்லிவிட்ட சந்தோசத்துல வீட்டுக்கு மதியம் ஓடி வரும்போதுதான் பாத்தேன் "யார்" வீட்டு முன்னே ஒரு ஆம்புலன்ஸும் போலிஸு ஜீப்பும் நின்னுகிட்டுருந்ததை. அம்மாட்ட கேட்டேன் ஒன்னும் சொல்லலை, இனி அங்க போகதேன்னு சொன்னாங்க. மறுபடி அங்க போயி பாத்தேன் ரிக்ஷால வந்து சரவணனும் ருத்திரனும் இறங்கினாங்க, உள்ளே போயிட்ட் வெளியே ஓடி வந்து ஒரே அழுகை. அவங்க மாமா வந்துதான் அடிக்கிறாரு போலன்னு நானும் ஓடி பாத்தேன். அவங்க அம்மா கன்னங்கரேல்ன்னு கரிகட்டை மாதிரி தூக்கிட்டு போனாங்க ஆம்புலன்ஸுக்கு.தீ வச்சுகிட்டாங்களாம், ஆனா சுகுணா பின்னி ( சித்தி) மட்டும் சொல்லும் "அந்த நாதாறி தீ வச்சு விட்டுருப்பான். அவ எவ்வளவு நெஞ்சு ஊக்கமானவ தெரியுமான்னு" இத சொல்லுறப்ப நாயக்கரு அம்மாச்சி இருந்துச்சுன்னா சுகுணா பின்னி'யை " நோரு மூசுகுன்னி போ"ன்னு சத்தம் போடும்

அதுக்கு பொறகு எப்போ "யார்"வீட்ட கடந்தாலும் முருக முருகான்னு சொல்லிகிடேந்தான் ஓடுவேன். ஆனாலும் வாய்தான் முருகன்னு சொல்லுமே தவிர மனசுகுள்ள சரவணன் அப்பா அவங்க மாமி, அவங்க அம்மா மூணுபேரும் தான் தெரிவாங்க.

14 மறுமொழிகள்:

 1. கொஞ்சம் பெரிய பதிவு. படித்துவிட்டு கும்மி அடிக்கிறேனே?

 1. 12:33 PM  
  Anonymous said...

  உண்மைத்தமிழனுக்குப் போட்டியான பதிவு.....

  மொக்கை என்பதற்கு சரியான இலக்கணம் இதுதான்....

  வாழ்க வளமுடன்.

 1. தோழருக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்!

 1. /// என் அண்ணனோ என்னைய பாத்தாலே பொடனில லொட்டு ஒரு அடி போட்டுட்டுதான் அடுத்த வேலை பார்ப்பான் ///

  எல்லா அண்ணன்களும் இப்படித் தானா?

  மதுரைத் தமிழின் சுவையோடிருக்கிறது.
  மிகவும் ரசித்துப் படித்தேன்.

 1. /// என் அண்ணனோ என்னைய பாத்தாலே பொடனில லொட்டு ஒரு அடி போட்டுட்டுதான் அடுத்த வேலை பார்ப்பான் ///

  எல்லா அண்ணன்களும் இப்படித் தானா?

  மதுரைத் தமிழின் சுவையோடிருக்கிறது.
  மிகவும் ரசித்துப் படித்தேன்.

 1. ஒரு நல்ல கதை படித்த உணர்வு...

 1. மதுரைத் தமிழ் விளையாடும் நல்ல பதிவு. மிகவும் ரசித்துப் படித்தேன்.

 1. பதிவை ஒரே மூச்சில் படிக்க முடியவில்லை. திண்டுக்கல் சர்தார் ஸ்டைலில் நீளமாக பதிவினை போட்டிருப்பதால் படிப்பதற்குள் தாவூ தீருகிறது. படித்துவிட்டு கும்மி அடிக்கிறேன்.

 1. அருமையான பேச்சுவழக்கில் எழுதப்பட்ட ஆக்கம். ஆனால் முடிவுப்பத்திகள் இழுத்து விட்டதென்று நினைக்கிறேன்.

  சில நினைவுகள்:
  நானும் 3 மாசத்துக்கு ஒரு தரம் ஈகிள் ப்ராண்ட் துப்பாக்கி வாங்கி ஒடச்சி முதுகுல டின் கிழிந்திருக்கிறது. அப்போதைய விலை 15-25 ரூ என நினைக்கிறேன்.

  எனக்கும் ஈகிளுக்கும் ரெம்ப தூரம்னு இதிலிருந்தே புரிஞ்சிடுத்து :))அதான்பா ஈரோஸ்...நமக்கும் டைகர்ஸ் தான்.அச்சுதன் அண்ணா என் கைய புடிச்சி ஒரு மரத்த கொள்ளில சுட்டது இன்னமும் நியாபகம் இருக்கு.

  மத்தபடி எங்கண்ணாவ நா இதுவரிலும் அண்ணான்னு கூப்டதே இல்ல. எங்கூட்ல நா என்ன பண்ணாலும் என்னோட அண்ணன் தான் அடி வாங்குவாரு...

  நாங்களாம் பொட்"டீ"கடைக்குட்டியாச்சே...

 1. This comment has been removed by the author.
 1. This post has been removed by the author.

 1. மேலே போட்ட பின்னூட்டத்தை கயமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளும்படி வேண்டி விரும்பி சிரம் குவித்து கேட்டுக் கொள்கிறேன்.

 1. //ஏறி தொரட்டியை தூக்கமுடியாம தூக்கிட்டு இருக்கும் போதுதான் ஜன்னல் வழியாய்பாத்தேன் சரவணன் அப்பா அவங்க மாமி மேல டிரஸ் இல்லாம படுத்து இருந்ததை, நான் அதை பாத்துகிட்டு இருந்த நேரத்துலதான் சரவணன் அம்மாவும் அந்த ரூமுக்குள்ள வந்தாங்க . //

  சரோஜாதேவி, விருந்து, மருதம், திரைச்சித்ராவெல்லாம் படிச்ச எபெக்ட்டு தோழரே!

  நல்ல பதிவுக்கு நன்றி!!

 1. இப்பதிவில் நீங்கள் போட்டிருக்கும் எந்தப் படத்தையும் என் ஓட்டை கணினியில் காணமுடியவில்லை. மின்னஞ்சல் அனுப்ப முடியுமா?