Wednesday, June 20, 2007

@ 11:35 AM Labels: எழுதியவர்: வரவனையான்


இந்தியாவின் உளவுத்துறைகள் தாந்தோன்றித்தனமாக எப்படி ஈழப்பிரச்சினையில் செயல்படுகிறது என்பதையும் ஒரு ஜனநாயக பூர்வமான நாடு என்று அழைத்துக்கொள்ளும் இந்தியாவின் உளவுத்துறைகள் அன்டை நாட்டு விடுதலைப்போராட்டத்தில் தேவையற்ற தலையீடு செய்வதையும் ஆதாரங்களுடன் அம்பலபடுத்துகிறது தோழர்.விடுதலை ராஜேந்திரனின் புதிய நூலான "ஈழபிரச்சினையில் இந்திய உளவுத்துறையின் சதி "

நூல் கிடைக்கும் இடம் : புரட்சி பெரியார் முழக்கம்
29, பத்திரிக்கையாளர் குடியிருப்பு
திருவான்மியூர்
சென்னை


இனி நூலில் இருந்து சில பகுதிகள்
தமிழ்நாட்டில் நடந்த தி.மு.க. ஆட்சியில் உள்ள சில முக்கிய தலைவர்கள் விடுதலைபுலிகளுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதே தேச விரோதமாக - நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக உளவுத் துறை மூலம் அறிக்கை தயாரித்தவர் எம்.கே. நாராயணன். உளவுத் துறையின் தலைவர் என்ற முறையில், அன்றைய பிரதமர் வி.பி. சிங் பார்வைக்கு இதைக் கொண்டு போயிருக்க வேண்டிய கடமை எம்.கே. நாராயணனுக்கு உண்டு. ஆனால், அதிகார மட்டத்தில் கமுக்கமாக வைக்கப்பட்டது அந்த அறிக்கை. மண்டல் குழு பரிந்துரை, ஈழத் தமிழர் பிரச்சினைகளில் - பார்ப்பன அதிகார வர்க்கத்தின் உணர்வுகளுக்கு எதிராக உறுதியோடு நின்றார் வி.பி.சிங் என்பதால் அவரது ஆட்சியை பார்ப்பன சக்திகள் திட்டமிட்டு கவிழ்த்தன. சந்திரசேகர் தலைமையில் பொம்மை ஆட்சி ஒன்றை உருவாக்கியவுடன், உளவுத் துறை தயாரித்து வி.பி.சிங்கிடம் மறைக்கப்பட்ட அறிக்கையை வைத்து, அதையே காரணமாக்கி, அன்று தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அன்றைய காலகட்டத் தில், விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். ராஜீவ் கொலைச் சம்பவம் நடந்தது, அதற்குப் பிறகுதான். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்படாத காலத்திலேயே - அந்த இயக்கத்தினரோடு பேசுவதே ‘தேச விரோதம்’ என்ற கருத்தை உருவாக்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்க்கும் அதிகாரம் கொண்டவைகளாக உளவு நிறுவனங்கள் செயல்பட்டன என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

இந்திராவின் மரணத்தைத் தொடர்ந்து, அரசியலின் ஆழம் புரியாத - ராஜீவ் காந்தி பிரதமராக வந்தார். பார்ப்பன அதிகார வட்டம் மகிழ்ச்சிக் கடலில் குதித்தது. ஆசியாவின் வலிமை மிக்க தலைவராக உயரவேண்டும் என்ற துடிப்பில் இருந்த ராஜீவுக்கு அதிகார வர்க்கம் தூபம் போட்டது. கடந்த காலத்தில் இந்திராவின் ஆட்சி யில் பின்பற்றப்பட்டு வந்த வெளியுறவுக் கொள்கைகளை மாற்றி அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கினால்தான் உடனடியான மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று ராஜீவ் காந்தியிடம் தெரிவிக்கப்பட்டன. அதற்கு ராஜீவ் காந்தியும் பச்சைக்கொடி காட்டினார். அதன் காரணமாக இலங்கைப் பிரச்சினையில் இந்திராவின் ஆலோசகர்களாக இருந்த அதிகாரிகள் ஓரம் கட்டப்பட்டனர். ஈழத் தமிழர் பிரச்னையில் ஓரளவு தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பார்த்தசாரதியிடமிருந்து அந்தப் பொறுப்புகளைப் பறித்து ரமேஷ் பண்டாரி என்ற மற்றொரு பார்ப்பன அதிகாரியிடம் ராஜீவ் ஒப்படைத்தார்.

இந்தியாவின் உளவு நிறுவனங்களும், வெளியுறவுத் துறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற, நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகளை வழி நடத்தி வருகின்றன என்றே சொல்ல வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தியாவை ஆட்சி செய்வது பார்ப்பனியம் தான். பார்ப்பனியத்தோடு கை கோர்த்து நின்றால் மட்டுமே, தங்களின் சுரண்டலை நடத்த முடியும் என்பதைப் புரிந்து கொண்ட - பனியாக்கள் பெரும் தொழில் நிறுவனங்கள் - பன்னாட்டு நிறுவனங்கள் - இதற்கு ஒத்திசைவாக தங்களது நடவடிக்கைகளை தகவமைத்துக் கொள்கின்றன. பெரும் தொழில் நிறுவனங்கள் உயர் பதவிகளில் பார்ப்பனர்களையே நியமித்துக் கொள்வதும், இந்தக் கண்ணோட்டத்தில் தான்.
இத்தகைய அதிகார அமைப்பில் பிரதமர்களாக வருபவர்கள் - பார்ப்பன பனியா - பன்னாட்டு - ஆளும் வர்க்க நலனோடு இணைந்து நின்றால்தான், தங்களது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் பிரதமர்கள் பலரும் பார்ப்பனியம் சுட்டும் பாதையிலேயே நடைபோடுகிறார்கள். இதற்கு மாறாக செயல்பட முடிந்தால் வீழ்ச்சியைத்தான் சந்திக்க வேண்டும். அப்படி பார்ப்பனியத்துக்கு எதிர் திசையில் - சமூகநீதி பாதையில் நடைபோட முயன்று வீழ்த்தப்பட்ட வெகு அபூர்வமான பிரதமர் வி.பி.சிங்! காவிரிப் பிரச் சினைக்கு நடுவர் மன்றம் அமைந்ததிலிருந்து, மண்டல் அமுலாக்கம் வரை அவர் பார்ப்பனிய கட்டமைப்புக்கு வெளியிலிருந்து, இயங்கிய பிரதமராகவே இருந்தார்.

இத்தகைய வி.பி.சிங்கை வீழ்த்தும் பார்ப்பனிய அணியில் தன்னையும் இணைத்துக் கொண்டவர்களில் ஒருவராகவே எம்.கே.நாராயணனும் இருந்திருக்கிறார் என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன.

ராஜீவ் மரணம் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயின் ஆணையத்தின் பரிந்துரையில் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. இவற்றை ஆராய்வதற்கு முன் ஈழத் தமிழர் பிரச்சினையில் உளவு நிறுவனங்களின் பார்வை அன்று முதல், இன்று வரை எப்படி இருக்கின்றன என்பதைக் குறிப்பிட வேண்டும். இலங்கைப் பிரச்சினையில் - இந்தியாவின் தலையீட்டுக்கு அடிப்படையான உள் நோக்கம் உண்டு. தெற்கு ஆசியாவில் தன்னை வலிமையான சக்தியாக நிலை நிறுத்திக் கொள்வதே இந்தியாவின் அடிப்படை நோக்கம். மாலத் தீவு, நேபாளம், பூட்டான் போன்ற இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளின் வெளியுறவு ராணுவ ரீதியான கொள்கைகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்த இந்தியா, இந்தப் பட்டியலில் இடம் பெறாத, இலங்கையையும், அதில் இணைத்துக் கொள்ள விரும்பியது. அதுதான், இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டுக்கான அடிப்படை நோக்கமாக இருந்தது.

அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை (ஆசியா பதிப்பு 3.4.89) இது பற்றி விரிவாக வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், இவ்வாறு குறிப்பிட்டது:

“இலங்கையில் மைனாரிட்டி மக்களான தமிழர்களுக்கு இந்தியா ராணுவப் பயிற்சி அளித்து, ஆயுதங்களை வழங்கி, இலங்கைக்கு அனுப்பி, ஜெயவர்த்தனாவுக்கு எதிராக கொரில்லா யுத்தத்தை நடத்துமாறு பணித்தது. இதுநாள் வரை, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று இந்தியா மறுத்து வந்தாலும், இதில் பயிற்சி பெற்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களும், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளும், இலங்கை உளவு நிறுவனமும் இதை உறுதிபடுத்துகின்றன. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு முதலும் முடிவுமான ஒரே காரணம் - இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் என்று இந்திய அதிகார வட்டாரங்கள், உறுதியாகக் கூறின” என்று சுட்டிக்காட்டியது அந்த ஏடு!

மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்தன. “1984-ல் இப்படிப் பயிற்சிப் பெற்ற ஈழப் போராளிகள் அமைப்புகள் இலங்கை ராணுவத்துக்கு எதிராக நடத்திய தாக்குதல்களில் தோல்வியே அடைந்தன. இதனால் சிங்களப் பொது மக்கள் மீது தாக்குதல்களைத் தொடருமாறு - ‘ரா’ உளவு நிறுவன அதிகாரிகள் வற்புறுத்தினர். ‘புளாட்’ என்ற அமைப்பின் தலைவர் உமா மகேசுவரன் கூறுகையில், “ஒரு ‘ரா’ அதிகாரி சிங்களர்களின் திரையரங்கு ஒன்றில், வெடிகுண்டு வீசுமாறும் அல்லது சிங்களர் கூடும் பேருந்து நிலையத்தில், வெடிகுண்டு வைக்குமாறும் எங்களிடம் கூறினார். நாங்கள் அதற்கு மறுத்து விட்டோம். சிங்கள பொது மக்களைக் கொன்றால், எங்களுக்கு ஏராளமாக பணம் தருவதாகவும் ‘ரா’ அதிகாரிகள் கூறினர்” என்று கூறினார்” - என்று எழுதியது, ‘டைம்’ ஏடு. இந்திய உளவு நிறுவனங்கள் - எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இதற்குப் பிறகு தான் அதுவரை ஆசியாவில் இந்தியாவுக்கு எதிர்ப்பான அரசியலை நடத்தி வந்த ஜெயவர்த்தனே, இந்தியாவிடம் இறங்கி வந்தார். (ஜெயவர்த்தனாவின் அரசியல் எதிரியும், அவருக்கு முன் அதிபராகவும் இருந்த திருமதி பண்டாரநாயகே. இந்தியாவின் பிரதமர் இந்திராவோடு நெருக்கமாக இருந்ததும், ஜெயவர்த்தனாவின் இந்திய எதிர்ப்புக்கு, முக்கிய காரணம்) ஜெயவர்த்தனாவைப் பணிய வைக்க - ஈழத்தில் போராளிகளுக்கு ராணுவப் பயிற்சியையும், ஆயுதங்களையும் தந்து அப்பாவி சிங்களர்களைக் கூட கொன்று குவிப்பதற்கு பச்சைக் கொடி காட்டிய உளவுத்துறை - அந்த முயற்சியில் வெற்றி பெற்ற பிறகு, தனது கவனத்தை போராளிகளைப் பணிய வைப்பதில் திருப்பியது.

14 மறுமொழிகள்:

 1. 1:26 PM  
  Anonymous said...

  Soon you will be called traitor, terrorist, separatist and much more. Better apologize and remove this article.

 1. தோழர் இராஜேந்திரன் ஊடகத்தில் வந்த செய்திகளையொட்டியே தனது புத்தகத்தை எழுதியுள்ளதாகத் தெரிகிறது. முழுப்புத்தகத்தையும் படித்தால்தான் அதைப்பற்றி மதியுரைக்க முடியும்.

  கூர்ந்து நோக்குகையில் அவர் டைம் ஏடு போன்ற ஊடகங்களின் அச்சிட்ட பொய்களை ஆதாரமாக எடுத்துக்கொண்டு மற்றுமொரு அச்சிட்ட பொய்யை வெளிக்கொணர்ந்திருக்கிறாரோ என்று நம்ப வேண்டியிருக்கிறது.

  டைம் ஏடு அச்செய்திகளை வெளியிட்ட காலகட்டத்தில் இருந்த சூழலையும் தற்போதைய சூழலையும் அறிந்தோர் இதன்பாலான உண்மையை அறிவர்.

  மேலும் தோழர் இராஜேந்திரன் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தில் எந்த அளவு உண்மை நடப்புகளை அறிந்திருந்தார் என்பது கேள்விக்குறியது. ஆக, வேடிக்கை பார்ப்போர் எல்லாம் காசு பார்த்துக் கொள்ளப் பாவிக்கும் நிலையில் ஈழத்தமிழர் போராட்டம் ஆகிப்போனது மிக வருத்தமான விடயம்தான்.

 1. 2:44 PM  
  கொண்டையை மறைக்காத பார்ப்பான் said...

  சரி, சரி,

  நீங்களும், அந்த புத்தகத்தை எழுதிய புண்ணியவானுமாக இலங்கை சென்று, தமிழருக்கு விடுதலை வாங்கி கொடுத்துவிட்டு வாங்க...

 1. 3:06 PM  
  Anonymous said...

  இவர்களின் பிழையான வழிநடத்தலினால் இந்தியா, நல்லதொரு தலைவரை அனியாயமாக இழந்து விட்டது.

 1. //Soon you will be called traitor, terrorist, separatist and much more. Better apologize and remove this article. //


  ஒரு புத்தகத்தை பற்றிய அறிமுகம் செய்தாலே மேற்படி அனானி கூறியுள்ளபடி ஆப்படிக்கும் அளவிற்கு இன்னும் நிலைமை மோசமாகவில்லை என்றே கருதுகிறேன்.


  :))))))))))))

 1. அந்த எம்.கே. நாராயனனை போய் சமீபத்தில் முதல்வர் டெல்லியில் சந்தித்து விட்டு வந்திருப்பது மானக்கேடு :(

 1. 5:49 PM  
  Anonymous said...

  தம்பி வா, தரணி ஆள வா...

 1. அம்பி ஷாப்ட்டேளா ?

  நல்ல நூல் அறிமுகம். ட்ரிப்ளிக்கேன்ல கிடைக்குமாடா அம்பி. அப்படி கிடைச்சா ஷெல்லு. ரத்னா கபேயில் ஒரு காபி ஷாப்டுண்டே படிச்சுடுறன்.

 1. 11:01 AM  
  Anonymous said...

  //வேடிக்கை பார்ப்போர் எல்லாம் காசு பார்த்துக் கொள்ளப் பாவிக்கும் நிலையில் ஈழத்தமிழர் போராட்டம் ஆகிப்போனது மிக வருத்தமான விடயம்தான்//

  மிக உண்மையான கருத்து திருவடியான்....தமிழகத்திலிருந்து கடந்த சில வருடங்களாக வரும் இக்கருத்துக்கள் அங்கத்தைய அரசியல் அடிவருடலுக்கும், காசு பார்க்கவும் மட்டுமேயன்றி தமிழ் போராட்ட ஆதரவு என்பது கிஞ்சித்தும் இல்லை என்பதே உண்மை.

 1. எது அடிவருடும் வேலை அனானி, காசு பார்க்க ஈழப்பிரச்சினையை பேச வேண்டிய அவசியம் இங்குள்ள தலைவர்கள் யாருக்கும் இல்லை. உங்கள் அரிப்பை போக்க இது இடமில்லை. மேலும் விமர்சனகருத்துகள் சொந்த பெயரில் வந்தால் மட்டுமே வெளீயிடப்படும். திருவடியானின் கருத்துகள் அவ்வாறே வெளியிடபட்டது.

 1. 4:17 PM  
  Anonymous said...

  //எது அடிவருடும் வேலை அனானி, காசு பார்க்க ஈழப்பிரச்சினையை பேச வேண்டிய அவசியம் இங்குள்ள தலைவர்கள் யாருக்கும் இல்லை.//

  இப்படி சூடா பேசிப் பிரயோசனம் ஒன்றும் இல்லை....உங்கள் அரிப்புக்கு மட்டுமே இது உபயோகம்....இராசீவ் கொலைக்குபின்னும் மேலும் குறிப்பாக கடந்த 4 மாதங்களில் தமிழக ஆளும் கட்சி தலைவர் இந்த விவகாரத்தில் நடந்துகொண்டுள்ள விதமே சாட்சி...நீங்க இதனை வெளியிடாவிட்டாலும் சரி, உங்களது மனச்சாட்சியிடம் கேளுங்கள், அது தரும் உண்மை.....

 1. இன்று புதினத்தில் வந்துள்ள செய்தி கீழே உள்ளது.புரிந்தால் படித்து பாருங்கள்.நீங்கள் முடிய நினைக்கும் சிண்டு இங்கு இல்லை :))))))))))))

  ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  எம்.கே. நாராயணன் விரைவில் நீக்கம்?

  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் விரைவில் நீக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தி.மு.க. அரசாங்கம் ஆதரவாக செயற்படுவதாகக் கூறி 1990 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியைக் கலைக்கக் காரணமாக இருந்தவர் எம்.கே.நாராயணன்.

  இந்திய உளவுத்துறை இயக்குநராக பதவி வகித்த பின்னர், இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்த ஜே.என்.டிக்சிட் மறைவைத் தொடர்ந்து நாராயணனை நியமிக்க மன்மோகன்சிங் முடிவு செய்திருந்தார். ஆனால் அதனை தி.மு.க. தலைவர் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். ஆனால் தயாநிதி மாறனின் உதவியுடன் கருணாநிதியை சமாதானப்படுத்தி அப்பதவியை எம்.கே.நாராயணன் பெற்றுக்கொண்டார்.

  தமிழக முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற பின்னர், ஈழப் பிரச்சினை தொடர்பாக எம்.கே.நாராயணன் சென்னையில் கருணாநிதியைச் சந்தித்த போதும் "அன்று ராஜீவ் காந்தியை சிக்கலில் மாட்டிவிட்டது நீங்கள்தான். இப்போது யாரை மாட்டிவிடப் போகிறீர்கள்?" என்று கடுப்படித்தார்.

  சென்னையில் கருணாநிதி மகள் கனிமொழி "சங்கமம்" நிகழ்ச்சி நடத்தியதனை விடுதலைப் புலிகளோடு தொடர்புபடுத்தி ஜெயா தொலைக்காட்சியில் விமர்சனம் செய்ய வைத்ததிலும் எம்.கே.நாராயணனின் பங்கு விமர்சனமாக்கப்பட்டது.

  அதேபோல் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழக நலனுக்கு எதிராக எம்.கே.நாராயணன் செயற்படுவதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  அதன் பின்னர் தயாநிதி மாறனைக் கொண்டு தி.மு.க. உடைப்பு வேலைக்கும் எம்.கே.நாராயணன் சதி செய்து வந்ததால் தயாநிதியை கருணாநிதி கழற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.

  அதேபோல் ஈழத் தமிழர் விவகாரத்தில் எம்.கே.நாராயணனின் ஒவ்வொரு சதிகளையும் நாம் தொடர்ச்சியாக "புதினம்" இணையத்தளத்தில் அம்பலப்படுத்தி வந்தோம்.

  தமிழகத்திலும் எம்.கே.நாராயணனை அம்பலப்படுத்தும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

  பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் "பெரியார் முழக்கம்" எனும் அந்த இயக்கத்தின் உத்தியோகப்பூர்வ ஏட்டில் நாராயணனை அம்பலப்படுத்தி தொடர் கட்டுரைகள் எழுதியதை "தமிழ்நாதம்" இணையத்தளம் வெளியிட்டிருந்தது. மேலும் இந்தத் தொடரை விரிவுபடுத்தி தற்போது "ஈழப் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி" என்ற பெயரில் பெரியார் திராவிடர் கழக வெளியீடாகவும் விடுதலை இராசேந்திரன் வெளியிட்டுள்ளார்.

  இந்நிலையில் திராவிடர் கழகத்தின் மத்திய குழுவிலும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் தமிழக முதல்வர் கருணாநிதியின் தற்போதைய நெருக்கமான கூட்டுக்கட்சிகளில் ஒன்றாக திராவிடர் கழகம் இருப்பதால் அனேகமாக எதிர்வரும் நாட்களில் எம்.கே.நாராயணன் நீக்கப்பட்டுவிடக் கூடும் என்று கருதப்படுகிறது.

  சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு புதிய ஊர்தி வழங்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழக முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 1. ஈழப்பிரச்சினையப்பற்றிபேசி இரண்டு மூண்று வருடங்கள் உள்ளே இருக்கவேண்டும் என்பது தமிழகத்தலைவர்களின் தலை எழுத்தா? இதை அனானி நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஆகக்குறைந்தது அவர்களை கொச்சைப்படுத்தாமலாவது இருப்பது மேல்.

 1. 12:59 PM  
  Anonymous said...

  //அந்த எம்.கே. நாராயனனை போய் சமீபத்தில் முதல்வர் டெல்லியில் சந்தித்து விட்டு வந்திருப்பது மானக்கேடு :( //

  Let's wait and hope something good will soon happen.