Wednesday, March 07, 2007

@ 6:26 PM எழுதியவர்: வரவனையான்


மரணங்கள் எப்போதும் என்னை ஆச்சரியபடுத்தியதில்லை. இவன் என்னோடிருப்பான் என்று நம்பிய நண்பன் விசமருந்தி செத்தபோதும். ' நமக்கென்ன சித்தப்பா இருக்காரு' என்று துள்ளித்திரிந்து கொண்டிருந்த 22 வயது இளைஞனை விட்டு அதர்சமாய் அம்மையாய் அப்பனாய் ஒப்பிலா மாமணியாய் வளர்த்து அழகு பார்த்த என்னருமை சித்தப்பா பட்டென ஒரு நாள் செத்துபோன போதும், பார்க்கும் போதெல்லாம் ஏசிக்கொண்டு , சிக்கினால் ரெண்டு மாத்து விடும் என் முதல் எதிரியாய் நான் முறைத்துக்கொண்டு அலைந்த அப்பா, நான் வேலைக்கு போன பின் ஒரு நள்ளிரவு அரவமில்லாமல் வீட்டின் வாசல் நிற்கும் என் காதில் விழுவது தெரியாமல் " சின்னவன் எப்படியும் நல்ல நெலைக்கு வந்துடுவான் " என்று என் குறித்து தளரா நம்பிக்கையை பகிர்ந்துகொண்டிருந்த எந்தை ஒரு கோடை அதிகாலை அமைதியாய் தூக்கத்தில் இறந்ததை போனில் அழைத்து சொன்னபோதிலும் இன்னும் இன்னும் தெரிந்த , பார்த்த, கேள்விபட்ட ஆட்கள் உயிரின்றி போன போதும் எப்போதும் ஆச்சரியபட வைத்ததில்லை. மாறாக ஒரு சிறு அதிர்ச்சி மட்டுமே ஏற்பட்டு விலகும்.


ஆனால் நேற்று இரவு எனக்கும் வேறு ஒரு நண்பன் வாயிலாக தெரியும் வரை மறைக்கபட்ட ஒரு மரணம் தெரிந்தபோது ஆச்சரியமளித்தது அவன் மரணம். சாகவே மாட்டான் என்று நான் நம்பிக்கொண்டிருந்த கவுண்டந்தான் அது. கொஞ்சம் கலங்கிப்போய்விட்டேன். சென்ற மாதம் 15 நாள் விடுப்பு எடுத்து ஊர்சுற்றி கிளம்பும்போது பார்த்தேன். என் கடையில் உட்கார்ந்துருந்தான் " ஏண்டா இப்படி பரதேசி மாதிரி இருக்கே' குளிச்சு தொலையவேண்டியதுதானே"ன்னு சத்தம் போட்டேன். "அவன் ஊரு பேரே பரதேசிப்பண்ணப்பட்டி' அப்புறம் எங்கிட்டு மைனர் மாதிரி இருக்கிறது" - பார் மாஸ்டர் அழகர் கிண்டலடிச்சாரு. சரி பைக்குல ஏறுன்னு ஏத்திகிட்டு வீட்ல போயி ஒரு கொஞ்சம் சாயம் போன சட்டையை எடுத்துகொடுத்தேன். 'வாடா, பஸ்ஸ்டாண்டு லாட்ஜுல சொல்லுறேன் குளிச்சிக்கன்னு சொல்லி வரும் போது கேட்டான். "ஏண்ணே , இந்த சட்டை எம்பூட்டு" 1300 ரூவாடான்னேன். 'போண்ணே பொய் சொல்லாத' எங்கூருல 1300 இருந்த ஒரு கல்யாணமே பன்னிரலாம்' ஓம்பாட்டுக்கு இவ்ளோ ரூவாய்க்கு சட்டைய வாங்கி போட்டுகிட்டு திருஞ்சிருக்கேன்னான். 'வாய மூடிகிட்டு உக்காந்து வாடா வெண்ணை"ன்னு சொல்லி இறக்கிவிட்டுட்டு. எங்கண்ணணை கூப்பிட்டு அவனக்கு எதாவது செலவுக்கு டெய்லி கொடு, அவனுக்குதக்கன வேல இருந்த செய்யச்சொல்லுன்னு சொல்லிட்டூ வேலைக்கு வந்துட்டேன்.


"ஏண்டா கோமுட்டித்தலையா. எப்ப பாத்தாலும் இப்படி எருமைச்சாணியை மொகத்துல அப்புன மாதிரியே திரியுற"ன்னு செந்திலை கவுண்டமணி கேப்பாரே அதே உருவமைப்பிலே ஒல்லியாய் இருப்பான் அதுதான் கவுண்டன். அவனை முதல் முதலாய் சந்தித்த அனுபவமே வித்தியாசமானது. ஒரு நாள் திண்டுக்கல் கடையில் பணத்தை வசூல் செய்து விட்டு மதுரைப்பேருந்துக்கு காத்துக்கொண்டிருந்தேன் நேரம் அப்போது நேரம் இரவு 2. திடுதிடு வென்று ஒருவன் ஓடிக்கொண்டிருந்தான் பின்னாடி விரட்டி வந்தவன் பிடி பிடி என்று அலறியவாறே விரட்டிவர. ஓடியவனை ஒரு ஹிரோ நினைப்பில் விரட்டி பிடித்து மூஞ்சியில் ரெண்டு பஞ்ச் வச்சேன். எங்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் மொத குத்தே மூக்குலதான் குத்துவேன். பாவம் பார்ட்டிக்கு சில்லுமூக்கு ஒடைஞ்சு ரத்தம் வடிய நின்றவனை கையில் பிடித்து விரட்டி வந்தவனிடம் ஒப்படைத்து எதோ சாதித்ததைப்போல் நினைத்து பேருந்து ஏறினேன்.

இரண்டு நாள் கழித்து கடையின் முன்னால் நின்று கொண்டிருந்தேன். கடையின் பக்கவாட்டு சுவரில் உக்காந்து பீடி குடித்துக்கொண்டிருந்தான். பார்த்த எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. பிளைடு கிளைடு ஏதும் போட்டுவிடுவானோ நம்ம மேலன்னு ஒரு பயம் வேற உள்ளுக்குள் வர கடையினுள் போய் அண்ணனிடம் சொன்னேன். அன்னைக்கு ராத்திரி ஒருத்தேன் திருடிட்டு ஓடிக்கிட்டுருந்தான் புடிச்சி மொகத்துல ரெண்டு இடி இடிச்சேன், அவன் இப்பா கடை சைடுலதான் உக்காந்துருக்கான்ன்னு சொன்னேன். எங்கண்ணன் வெளியே வந்து பார்த்துட்டு சிரிச்சார். இவனைப்போயி வெரட்டி புடிச்சு அடிச்சியாக்கும். கூப்பிட்டா வந்து அடிவாங்கிட்டு போவானாரு. அப்புறம் அவனை கூப்பிட்டாரு. வந்தான், அண்ணே அன்னைக்கி நீங்க அடிச்சதும் நல்லதாப்போச்சு. என்னை புடிச்சவன் மூக்குல வந்த ரத்தத்தை பாத்து பயந்துட்டான் ஹிஹிஹி போலிஸ் ஸ்டேஷ்னிலும் அவனுக்கு ரெண்டு மாத்து " திருட்டிட்டு ஒடுனா பிடிச்சு ஸ்டேசன் கொண்டு வரவேண்டியதுதானே' அத விட்டுட்டு அடிச்சுருக்க பெரிய ரௌடியா நீன்னு" சொல்லி எஸ்.ஐ போட்டாரு மாத்து. நல்லவேளை அன்னைகு மத்தியானாம்தான் இன்ஸ்பெக்டர் வீட்டுல தோட்ட வேலை பாத்துட்டு வந்தேன் அதனால கேஸ் போடாம வெரட்டி விட்டுட்டாருன்னான்.

அதுக்கபுறம் கொஞ்சம் கொஞ்சமா என்கிட்ட ஒட்டிகிட்டான். திருடினால் என் கடைபக்கம் வராதேன்னு சொன்னதால கொஞ்சம் கோவம் வேற. ஒரு நாள் திண்டுக்கல் பேருந்து நிலைய அனேக்ஸ் கட்டிடம் என் நண்பர்கள் ஒப்பந்த அடிப்படையில் எடுத்து கட்டிக்கொண்டிருந்தனர். அதன் மாடியில் விடியலில் வரும் வண்டியை எதிர் நோக்கி கயிற்றுக்கட்டிலில் படுத்து கிடந்தேன். இரவு இரண்டு மணி இருக்கும் லேசா அரவம் கேட்டது எழுந்து பார்த்தால் அருகில் கவுண்டன் படுத்துகிடந்தான். ஒரு உதைய விட்டு என்னடா இங்க வந்து படுத்துருக்கேன்னேன். "அண்ணே சத்தம் போடதிங்க அப்படியே அங்க மண்ணு கொட்டிருக்குல அதுல பாருங்க ஒருத்த படுத்துருக்கானா" அவன் இப்ப எந்திரிச்சு நிப்பான் பாருங்க " ஆமாம்டா என்றேன். அப்படியே சட்டை, டவுசரு பையெல்லாம் கையவிட்டு பார்ப்பான் பாருங்கன்னான். அட ஆமாம்டா என்றேன். வேற ஒன்னும் இல்ல மாப்பளை காச தேடுறான்ன்னான். திரும்பி அவன பாத்தேன் "அது இங்கேல்ல இருக்குன்னி கைய காமிச்சான். ஏண்டா களவாணி, நீ ஆட்டைய போட்டுட்டு நான் இருக்குற இடத்துக்கு வந்தா பாக்குறவன் என்னடா நினைப்பான்னு வெரட்டி விட்டேன். போகும் போது " அவன் நைட்டு கட்டிங் அடிக்க போன இடத்துல மாமு மாமுன்னு கூப்பிட்டான். சரி இன்னிக்கு உனக்கு தீவாளின்னு நெனச்சுகிட்டேன்"ன்னு சொல்லிகிட்டே போயிட்டான்.

சரி அதெல்லாம் பழைய கத இன்னோரு நாளைக்கு பேசுவோம். இப்ப கவுண்டன் இவ்வுலகில் இல்லை. அத விட முக்கியமான விசயம். அவன் கடைசியாய் நடந்த உள்ளாட்சித்தேர்தலில் அவங்க ஊரு கவுன்சிலராகிட்டான் அதுவும் அன்னாபோஸ்டா . இதக்கேள்விபட்ட போதே ரூம் போட்டு சிரிச்சேன்.

குடிச்சி குடிச்சி செத்த கவுண்டனுக்கு : உன் நினைவுகளில் வாழ்கிறாய் என்னை போன்ற அண்ணண்களிடம்

பிடித்த விளிம்புகள் :

கவுண்டன் - பஸ்ஸாண்டில் போதையில் கிடப்பவரை மாமன் மச்சான் என சொந்தம் கொண்டாடி அவரிடம் திருடுவது

5 மறுமொழிகள்:

 1. நல்ல பதிவு செந்தில்.

  உங்கள் சோகத்தை இன்னும் அதிகமாக்கிட்டேனா?

 1. உண்மையாவா?? பாவம்,...:(

 1. சாகும்வரை குடித்து வாழ்ந்த "அவனுக்கு" என்னுடைய வணக்கங்கள்!

  :-)

 1. இதுல இன்னோரு மேட்டர் இங்க ஊருக்கு வந்திருப்பதால் தெரியவந்தது , சாகும் முதல் நாள்

  கவுண்டரு எங்க ஊரு கோவில் திருவிழாவில் சிவன் வேசம் போட்டிருக்காரு போட்டவருக்கு ( திருவிழாவில் சாமி வேசம் போட்டு பிச்சை எடுப்பது ஒரு வகைநேர்த்திக்கடன் ) செம கலக்சன் கவுண்டனுக்கு இவன் நேரா ஒயின் ஷாப் போயி சரக்கபோட்டு மட்டை சிவன் வேசத்துலையே

  மனிசன் சாகும் போது கூட ஒரு "கலக" காரனாய்த்தான் இருந்துருக்கான்

 1. oh is it...poor guy ...