Tuesday, February 27, 2007

@ 5:06 PM எழுதியவர்: வரவனையான்மிகுந்த ஆவலாய் எதிர்பாத்துகிட்டு இருந்ததை வாங்கிட்டு வந்து கொண்டிருப்பதாக மியாமி ஏர்போர்ட்டிலிருந்து மயில் போன் செய்தவுடன் மனசு பரபரப்பாகி அதை எப்படி கொண்டாடுவது என யோசிப்பதிலேயே பொழப்பு பூராம் கெட்டு போச்சு. ஒரு ரெண்டுநாளு கழிச்சு மும்பை வந்திட்டேன் பங்காளின்னு திரும்பவும் போனு." ஏலே இவேன் ஒருத்தேன் ரயிலு கணக்க அங்க வந்துட்டேன், இங்க வந்துட்டேனுகிட்டு" வாரவேன் ஊருக்கு வந்துட்டு கூப்பிடவேண்டியதுதானே. அத விட்டுபோட்டு சும்ம இசுமைய கூட்றாய்ங்க " அப்படின்னு சொல்லி போன வச்சுட்டேன்.

அடுத்த நாளு மதுர வந்துட்டு கூப்பிட்டான் போயி நலம் விசாரிச்சுட்டு அப்படியே நான் சொல்லிவிட்டு அவன் வாங்கிட்டு வந்த மேட்டரை வாங்கிட்டு கெளம்பும்போது டேய் இந்த இதயும் எடுத்துட்டு போன்னு சொன்னான், என்னானு பாத்தா ஜானி வொக்கர் ரெட் லெபிள். இதல்லாம் இங்க விக்கிற சுப்பர் ஸ்டார் ரேஞ்சுப்பா . வேற என்னா வச்சுருக்கேன்னு கேட்டேன்.

திருதிருன்னு முழிச்சான் சரி இனி விடக்கூடாதுன்னு நோண்டி துருவுன, அப்புறம் சொல்றான் பக்கார்டி சூப்பிரீயர்னு ஒன்னு மட்டும் இருக்கு மத்ததெல்லாம் வேற பிரண்ட்ஸ்க்கு கொடுக்கனும்டான்னு சொல்லிட்டு அதையும் எடுத்து கொடுமையேன்னு கொடுத்துத்தொலைச்சான். வாங்கிட்டு ஊருக்கு வந்து பாத்தா அது "மெய்ட் இன் போர்ட் டோ ரிகா'ன்னு போட்டு இருந்துச்சு அத பார்க்கவும் நமக்கு மேலும் கிளுகிளுப்பா ஆகிபோச்சு ஆகாதா பின்ன. அதுதான் நம்ம J.LO ஊராச்சே . அந்த made in என்கிற வார்த்தை என் கண்ணுக்கு maid in manhattan ந்னு தான் தெரிஞ்சுச்சுனா பாத்துகோங்களேன்.


அன்னைக்கு சாயுங்காலமே அந்த பக்கார்டி சுப்பீரியருக்கு போத்தலில் இருந்து விடுதலைப்பெருவிழா நடத்தி முடிச்சு வாயெல்லாம் வாழைப்பழ மணம் கமழ வீட்டு போயி மாத்து வாங்கிட்டு படுத்தேன். ( .... எம்பூட்டு ஒசத்தி சரக்கடிச்சாலும் கண்டு பிடிச்சுப்புடுறாய்ங்கப்பா )

மறுநாள் மதியம் "வெட்டும்புலி" தீப்பட்டி படம் வச்சுருகிற பிரண்ட தேடிப்போயி கடன் கேப்போமே அது மாதிரி போண்டா கணேசன் , தோழர் கற்பனையரசு ரெண்டு பேரும் கணேசனின் டூபாக்குர் டிவிஎஸ் 50 ல வந்தாய்ங்க. வந்த உடனே எங்க வீட்ல ரெய்டு அவனுங்களுக்கு அதும் எப்படி " என் கூட சேர வேண்டாம்னு " அப்பப்ப எங்க வீட்ல இப்படித்தான் திகில கெளப்புவாய்ங்க. டயலாக்க கேளங்க உங்களுக்கே புரியும். " ஏண்டா கனேசா உனக்கென்ன வயசு,அரசு உனக்கும் அவனுக்கும் 15 வயசி வித்தியாசம், ஏண்டா அவன் பின்னாடி அலையிறிங்க, அவவேன் கூட சேர்ந்து எவனும் உருப்பிட்டதா சரித்திரமே கெடயாது" இம்பூட்டு பேச்சும் வாங்கியும் மழையில நிக்கிற எருமை கணக்க என் ரூமையே பார்த்துகிட்டு இருந்தாய்ங்க. அப்பதான் குளிச்சிட்டு வெளியே வந்தேன். " சமஸ்தானம் தூங்கி எந்திரிச்சு வர நேரத்த பாரு, இதல்லாம் வெளங்குமா" எங்க வீட்டின் தினமும் வரும் வசனமாகியதால் சாப்பிட உக்காந்தேன் .


டேய் டக்கீலா வச்சுருக்கியமே, எடுத்துட்டு வாடா போலாம்னு ஆரப்பிச்சான் கம்யூனிஸ்ட் கனேசன் ( எ) போண்டா. சாப்பிட்டு வீட்டருகே தம்மடிக்கும் போது.கூட தோழர். கற்பனையரசும் ஊம் கொட்டினார்.

"யோவ் நான் என்ன ரஷ்யன் ஓட்கா வா வச்சுருக்கேன், காம்ரேட் ரெண்டு பெரும் இப்படி அலையிறிங்கன்னு" கலாய்தேன்.

இல்லடா டக்கீலா இன்னும் அடிச்சதே இல்லப்பா அதான் கேட்டேன்'னான் கற்பனை.

நாங்க மட்டும் என்ன டெய்லி ரெண்டு "ஹாட் ஷாட் " அடிச்சுட்டுதான் வெளியேவே கிளப்புறேனாக்கும். நானே கொடைக்கானலில் அந்த பிரெசில்காரியோட அடிச்சது. அதுக்கபுறம் போன வருசம் மயிலை பிளைட் ஏத்தும்போது சொல்லிவிட்டு அது இப்பதான் வந்துருக்கு i am going to drink lonely என்றேன்.இந்த வாக்கியம் முடிக்கும் போது தோழர் கற்பனையரசுவின் கண்களில் ஒரு வெறி வந்து மறைந்தது. சரக்கு தரமாட்டேனு சொன்னதுக்கு அவரு கோபப்படலை, அந்த "பிரெசில்காரி" காரிங்கிற வார்த்தை அவர டென்சனாக்கியது . ( தூத்துக்குடி சிவாஜி ரசிகர் மேட்டர் மாதிரி பிரேசில்காரியும் மேட்டரும் ஒரு நல்ல மூடில்தான் எழுதனும் விரைவில் )

காரணம் அவரு பிரெசிலின் சகல வெளிப்பாடுகளுக்கும் ரசிகர், பிரேசில் புட்பால்,ரொனால்டொ,ரிவால்டொ,ரொமாரியோ என அவரின் கதாநாயகர்கள் மாறியபடியே இருப்பார்கள். அந்த கர்லி பிரெசிலியன் பொண்ணுகள் தான் அவரின் ஆதர்ச நாயகிகளே. இதுமில்லாம அப்பப்ப சம்பா,ஸல்சான்னு ஆடியோ சிடி வாங்கி வந்து இயக்கத்திக்கு (அவரின் மொழியில் - ஸ்தாபனம்) தெரியாமல் கேட்பார். என்கிட்ட அடிக்கடி அவரு மனம் நொந்து போய் சொல்லும் வார்த்தை. வீ மிஸ் காம்ரெட், லத்தின் அமெரிக்காவில் பிறக்காமல் போய்விட்டோம் என்று .

அங்க பிறந்தாலும் இப்ப இருக்கிற மாதிரி ஒரு வீணாப்போன இயக்கத்தில தான் நீங்க இருப்பீங்க தோழர்னு கிண்டலடிப்பேன் சரி மேட்டருக்கு வருவோம்

அழுது அடம் புடிச்சி டக்கீலாவை எடுத்துட்டு வர வச்சுட்டானுங்க. எங்கடா போறது குடிக்கன்னு கேட்டேன். அது நாங்க பாத்துகிறோம் அத எப்படி குடிக்கிறது அத சொல்லு,அதுவுமில்லாம இந்த டக்கீலாக்கு மட்டும் அப்படி என்ன தனி சிறப்பு அதையும் சொல்லுனான் கணேசன்.

அதாவது கணேசா, டக்கிலாங்கிறது மெக்ஸிக்கோவில் மட்டும் கிடைக்கும் சரக்கு எப்படி நம்ம வெள்ளோடு சாராயம் ( 150 ஆண்டுகளாக சாராயச்சாவே நடந்ததில்லை) வேற எங்கையும் கிடைக்காதோ அது மாதிரித்தான் அதுவும் அந்த நாட்டு அரசே உற்பத்தி செஞ்சுட்டு இருக்குது. ரெண்டு,முணு தனியார் கம்பெனிங்க மட்டுமே தனியாக உற்பத்தி செய்யுது.

"நீல அகேவ்" என்கிற கத்தாழைக்கிழங்கு வகையில் உற்பத்தி செய்யப்படும் சுத்தமான மெக்சிக்கோ நாட்டு சரக்கு இது. நாலு டேஸ்ட்தான் இதுல இருக்கு . பிளான்கா, கோல்ட், ரெஸ்பாடோ , ஆனெஜோ அப்படின்னு பேரு.இது இல்லாம 5 வதா ஒன்னு இருக்கு அது "ரிசேர்வ" அது 8 வருசம் ஊரல் போட்டு வாரது. கொஞ்சம் காஸ்ட்லி.


குடிக்கும் போது நவ்வாப்பழம் உப்பு போடாம சாப்பிட்டா ஒரு மாதிரி துவர்க்குமே அது போல இதுவும் துவர்க்கும். அதுனாலதான் ராவா டக்கீலா அடிச்சா கையில உப்ப வச்சுகிட்டு நக்குவானுங்க, அதுக்கு பேரு தான் "ஹாட் ஷாட்" . சொல்லி முடிக்கிறேன் போண்டா வீடு வந்துருச்சு. ஏண்டா நம்ம இங்கையா குடிக்கபோறோம்னேன். ஆமா இதுதான் செலவுமில்லா அப்படியே பிளாட் ஆனாலும் கவலையில்ல என்றார்கள் .

கணேசன் வீடு என்று சொன்னது தவறு அது ஒரு வணிகவளாகம். நகரின் இதய.... ம்கூம் அதையும் தாண்டி வென்டிரிக்கள் என்றுதான் சொல்லவேண்டும். அப்படி ஒரு சொத்து இருப்பதால்தான் அவனை மனிதனாக மதித்தார்கள்.அதன் பின்புறம் கிழே இரண்டு அறைகள் மேலே இரு அறை அதுதான் அவன் வீடு, கீழே கணேசனின் தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள் . தாத்தாவுக்கு 96, பாட்டிக்கு 84. அவர்களுக்கு யார் வருகிறார் போகிறார் என்றேல்லாம் தெரியாது. ஆனால் கணேசனின் வண்டி எழுப்பும் வினோத சத்தம் மட்டும் நன்கு கேட்க்கும். அவன் வண்டி ஓடத்துவங்கினால் தப்பு சத்தம் கேட்க்கும்.

மேலே போயி உக்காந்தோம், ஏண்டா வரவனை இந்த காக்டெய்ல்'னு சொல்லுறாய்ங்களே அது நீ செய்வியாடான்னு கேட்டார் தோழர் கற்பனையரசு. ஓ நிறைய படிச்சிருக்கேன் , குடிச்சும் இருக்கேன் ஆனா இந்த பிராண்ட்ல போட்டதில்ல. ஒரு டைப் இருக்கு இன்னைக்கு போடலாம்.


ஆனா அப்படி குடிச்சா கணேசனுகே இந்த புல் பத்தாவது அதை நம்ம ஸ்டைலில் மாத்திபோடுவோம். ஒகே.

சரி முதலில் போய் திராட்சையும்,ஆரஞ்சும் வாங்கிட்டு வா. அப்படியே கொறிக்க ஏதாவது வாங்கிட்டு வாடா, என்னாலைலாம் உன்ன மாதிரி கட்டிங்க ராவா அடிச்சிட்டு செவுத்த நக்கிட்டு போக முடியாதுன்னு சொல்லி அனுப்பினேன்.

போயி ஒரு 1 மணி நேரம் கழிச்சு வந்தான் சொல்லிவிட்ட மாதிரியே எல்லாம் வாங்கி வந்தவன். கொஞ்சம் டல்லா இருந்தான் என்னாடனு கேட்டேன்.


"தாத்தா செத்து போயிட்டாருடா"ன்னான்

உடனே பக்கதுல இருந்த தோழர் கற்பனைஅரசு முஷ்டி மடக்கி செவ்வணக்கம் வச்சாரு,

யோவ் நீ ஒருத்தேன் நேரங்கெட்ட நேரத்துல,அவங்க தாத்த காங்கிரசு காரருயா'ன்னு எரிச்சலா சொல்லிட்டு " கணேசா நீ பாத்தியா"ன்னு கேட்டேன்.

"பாத்தேண்டா அவரே சொன்னாருடா'ன்னான்.என்னாது அவரே சொன்னாரா என்னடா சொல்லுற, வெளியே போயி தனியா சரக்க ஏதும் போட்டு வந்துட்டியான்னு டென்சன் ஆனேன்.

இல்லடா இன்னும் நாலு நாள்ல நான் போய் சேர்ந்துடுவேன்னு சொன்னாருடா அன்னைகேன்னான்.

சரி ஆகவேண்டியத பார்ப்போம், தோழர் நீங்க போய் கட்சி ஆபிஸுல எழவு சொல்லிட்டு வாங்கன்னு கற்பனையரசுவை கிளப்பிவிட்டேன். அவருக்கு திடீருன்னு அவர "எழவு சொல்லி"யாக்குனத்துல கொஞ்சம் மனவருத்தம் அடைஞ்சமாதிரி தெரிஞ்சது. தோழர் ஒன்னும் பிரச்சினையில்லைல நீங்க போய் சொல்லுறதுலன்னு கேட்டேன், அதுக்கு அவரு "ச்சா எனக்கென்னங்க பிரச்சினை நீங்க போனாத்தான் எங்க ரெண்டு பேருக்குமே பிரச்சினை" ( என்னுடன் சேரக்கூடாதுன்னு அவய்ங்க ஆபிசில் சொல்லிவச்சுருக்கானுங்க)ன்னு சொல்லிட்டே கிளம்பி போனவரு டக்குன்னு திரும்பி வந்து "கணேசன் தோழர் உங்க தம்பிகளுக்கு சொல்லிட்டிங்களா"ன்னு கேட்டாரு. கணேசன் எதோ அவரு இவன பாத்து சுப்பிரமணிய சாமி கட்சியில சேரலாமான்னு கேட்ட மாதிரி திகிலாகி பார்த்தான். நான் உள்ள புகுந்து 'என்ன இருந்தாலும் கணேசா அவய்ங்களுக்கு சொல்லாம விட்டா நல்லாயிருக்காதுன்னு' சொன்னேன். அரை மனசா சரின்னு சொன்னவன். இருடா சொந்தகாரங்களுக்கு சொல்லிட்டு வந்திடுறேன் என்றபடி கீழே இறங்க போனவனின் ஓரக்கண் ட்க்கீலா பாட்டிலையும் கவனிக்க தவறவில்லை.

அவன் தம்பி இரண்டு பேரும் ரெண்டு மாதிரி கிறுக்கனுங்க, மூத்தவன் கஞ்சா இழுவை பார்ட்டி( அவன் பேரே ஏரியாக்குள்ள "சிவன் செல்வம்னு" மாறி போய்யிடுச்சு - மதுரையில டோப்பு, சிவன், சைலென்ஸ் என்கிற குறிச்சொற்கள் கஞ்சாவைக்குறிக்கும் )இன்னொருத்தேன் வேற மாதிரி மென்டலு, ஒரு பொம்பள புள்ளையை விட மாட்டான், வெரட்டி வெரட்டி "லவ் லெட்டரு கொடுத்து பொது மாத்து வாங்காம ஒரு மாசம் கூட கடந்ததில்லை. அவனுங்களை எகனை போட்டு பாத்தா கணேசன் எவ்வளவோ தேவலை, என்ன இவன் "புரட்சி வரும்"னு மட்டும்தான் நம்புவான். அதுக்கு கஞ்சாவே அடிச்சிட்டு போலாம்பேன். " u too an utopian assole " comrade, நான் அடிக்கடி சொல்லுற டயாலாக்கு கணேசன பார்த்து.


அப்புறம் போயி அவனுங்களை புடிச்சி "உங்க பெரிசு மட்டையாயிட்டாருடான்னு " சொல்லி கூட்டியாந்தேன்.வந்தவனுங்க ஏதோ வாழ்ற வயசுல்ல அவரு செத்து போனா மாதிரி அலாரம் வச்சு அழுதுகிட்டு இருந்தானுங்க. "ஏண்டா... வைகோ முரசொலி மாறன் செத்ததுக்கு அழத மாதிரி அழுது இருக்கிறனுவனுக்கு பூராம் திகில கெளப்புறீங்க" ந்னு சொல்லி சத்தம் போட்டு அந்த பக்கம் வெரட்டி விட்டு கணேசன கூப்பிட்டு கணேசா 5 மணீக்குத்தான் ஆம்புலன்ஸ் வருமாம் முனிசிபல் ஆபிசுக்கு பேசிட்டேன். சேர்மன் வருத்தபட்டாருன்னு சொல்லிட்டு ஒரு டர்க்கி துண்ட தோள்ல போட்டுகிட்டு எழவுக்கு வந்தவய்ங்களுக்கு கேன் டீ கொண்டுவர சொல்லிட்டு வர போயிட்டு வந்து பார்த்தா தெரு பூராம் போஸ்டர் ஒட்டிருக்கு. கணேசன் ஒரு டுபாக்கூர் ப்ரஸ் ஒன்னு வச்சுருந்தான் ஊருல இருக்கிற கேப்புமாறி மொள்ளமாறிக எல்லாம் அங்கதான் ருவா நோட்ட தவிர போலி ரேசன் கார்டுல இருந்து எல்லாமே அடிப்பானுங்க கணேசனுக்கு அது தெரியாது. இவந்தான் செவப்பு கலரா ரயில்வே டீடீஆர் கொடி ஆட்டினா கூட பின்னாடியே ஓடிருவானே. சரி அவனுங்க சங்கத்துல அடிச்சி ஒட்டிருந்துருப்பாய்ங்கன்னு நெனைச்சு போஸ்டர பார்த்தேன் கீழே " பாசமுள்ள பேரன் போண்டா கணேசன்"னு போட்டுருந்துச்சு. கணேசா போஸ்டர் நீதான் அடிச்சியான்னு கேட்டேன் "ஆமாண்டா வாழ்ந்து செத்தவரு இதுகூட செய்யலைனா எப்படி"னான். அப்புறம் கரகாட்டத்துக்கு சொல்லியாச்சு, சோலைஹால் லதா ஆடுது. சும்மா ஜேஜேன்னு பெருச தூக்கிட்டு போலாம்னான். அதுகு நானு " ஏலேய் லூசு லதா உங்க தாத்தா காலத்துல இருந்து ஆடுறா" பாக்குறன் வயித்துல புளியை கரைக்கலாம்னு நினைச்சிட்டியான்னு சொல்லிட்டே போஸ்டரை படிச்சேன். கணேசா போஸ்டர் வாசகம் நீதான் எழுதினியான்னு கேட்டேன். ஆமான்னான். சரி திரும்ப படின்னு சொன்னேன்

நினைத்தால் தானே மறப்பதற்கு


அப்படின்னு கொட்டை எழுத்தில் போட்டு துவங்குச்சு.

அவன் ரெண்டு முணுதடவை படிச்சும் அவனுக்கு ஏறலை. ஏலேய் கேண மறந்தால்தானே நினைப்பதற்குன்னுதானே போடுவாய்ங்க இப்படி போட்டுருக்க அடிச்சவன் தப்பாடன்னு கேட்டா "விடுவிடு எவனும் கவனிக்கலை , நான் எழுதிகொடுத்ததுதான் "ன்னான்.

பாடை கட்ட வேண்டாம்டா ஆம்புலன்ஸ் இருக்கு 5 நிமிசத்துல கொண்டு போயிறலாம் சொன்னா இல்ல தெரு முக்கு வரைக்கும் பாடையில கொண்டு போவோம் கட்டுன பாடையை என்ன செய்யுறதுன்னான். எனக்கும் சரியா பட்டுச்சு


அதுக்காக கெழவி சாகற வரையிலுமா பாடையை வச்சுருக்க முடியும்ன்னேன். டென்சனாகி உள்ளே போயி காரியம் எல்லாம் முடிச்சு வந்தான். ( இந்த விதயங்களில் கணேசன் ஒரு கருத்து முதல்வாதி ) பாடை தூக்கின ஆள்கள்ள நானும் ஒருத்தன் சரி தெரு முனை வரைக்கும் தானேன்னு தூக்கி நடக்க ஆரம்பிச்சோம் கணேசன் கொள்ளி சட்டியை கையில வச்சுகிட்டு போயிட்டுருந்தான் கொஞ்ச தூரம் நடந்தவன். "ம்ம் அப்படித்தான் இந்தா ம்ம் அஜக்கு குமுக்குன்னு" சவுண்ட கொடுக்க ஆரம்பிச்சான். என்னாடன்னு பார்த்தா கொள்ளி சட்டியை யார் கையிலையோ கொடுத்துட்டு கரகாட்டம் ஆடுறவளுக கூட குத்தாட்டம் போட்டுகிட்டு போயிட்டுருந்தான். நல்ல வேளை தெரு முக்கு வந்துச்சு. ஒரு வழியா அமுத்தி ஆம்புலன்ஸ்ல ஏத்தி சுடுகாட்டுக்கு கொண்டு போனோம். அங்க மின்மயானம் என்பதால் தாத்தா உடலை பர்னர் மேல வச்சுட்டு எவ்ளோ நேரங்க ஆகும்னு கேட்டா அவரு பெருசு உடம்ப பார்த்து மத்த பாடியில்லாம் 3- 4 மணி நேரம் ஆகும் இவருக்கு 45 நிமிசம் போதும்னாரு. அவங்க தாத்த பிதுக்குன பேஸ்ட் மாதிரி இருப்பாரு அதான் அப்படி.

வீட்டுக்கு வந்து அவனை விட்டுட்டு "சரி நான் மேல போயி சரக்க முடிச்ச்சிட்டு வந்துடுறேன்டான்னு சொன்னேன். அதுக்கு ஒரு புல் தானே கொண்டுவந்தோம் ஏது உனக்குன்னான். ஏன்டா அதான் ஒரு புல் டக்கீலா மேலதானே இருக்குன்னு சொன்னேன். அதுக்கு கோவிச்சுக்காதடா டான்ஸ் ஆடுன லதா கேட்டா அதான் நானும் அவளுமே அடிச்சிட்டோம்னான். வந்துச்சே கோவம் இப்போ வரைக்கும் பாக்கலை அவன

4 மறுமொழிகள்:

 1. தோழர் உண்மையை சொல்லவும்,
  போண்டா கனேசன் தெக்கீலா அடித்துவிட்டு லதாவோடு கரகாட்டமா ஆடினார்.

  //நினைத்தால் தானே மறப்பதற்கு//

  சக கம்மூனிஸ்டா நெனச்சி கலாச்சிட்டாரோ?

 1. 6:21 PM  
  Anonymous said...

  :))))))))))))

  How about Golden Takkeeeeelaa ? Did u 'F' that :))))

  Senthazal Ravi

 1. //அதுக்காக கெழவி சாகற வரையிலுமா பாடையை வச்சுருக்க முடியும்ன்னேன். டென்சனாகி உள்ளே போயி காரியம் எல்லாம் முடிச்சு வந்தான்//

  குடிகாரப்பசங்க இல்ல.

  கொலகாரப்பசங்க.

 1. மிகவும் ரசித்துப் படித்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

  தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி.


  http://www.desipundit.com/2007/02/28/tequila/