Sunday, January 14, 2007

@ 3:19 PM எழுதியவர்: வரவனையான்


பதின்ம வயதுகளில் நண்பர்கள் சகமாணவிகளையோ அல்லது சமவயது பெண்களை டாவடித்து கொண்டு திரியும் பொழுதுகளில் நான் கொஞ்சம் வயதில் முதிர்ந்த பெண்களை சைட் அடிப்பேன். 19 வயதில் ஒரு 23- 24 வயதுள்ள பெண்களை டாவடிப்பது என் கூட்டாளிகளில் நான் மட்டுமே. இது நண்பர்கள் மத்தியில் ஒரு கேலிப்பொருளாய் ஆகியது. கிண்டலான கிண்டல் என் மீது. காலம் செல்ல செல்ல ஒன்று விளங்கியது . இது தகாச்சிந்தை என்று. பிராய்டை படித்த பின்னும் இன்னும் சுய மனவிசாரணை செய்து பார்த்த பின் கொஞ்சம் உண்மை விளங்கியது. 6 வயதில் UKG (upper kinder garden)படித்துக்கொண்டிருந்தேன். மதிய வேளை எல்லாக்குழந்தைகளும் கட்டாயம் உறங்க வேண்டும். அப்படி உறங்க வைப்பதே ஒரு ஆயாவின் ( இங்கு Baby sitter என்று வைத்துக்கொள்வோம் - ஆயா என்றால் கிழவிதான் எனக்கு நினைவுக்கு வருவதால் ) வேலை. அங்கு இருந்த பேபி சிட்டர் வயது 20 இருக்கும் ( எப்பவும் தாவணி போட்டு லேசான எத்துபல் கொண்ட அந்த உருவம் இன்னும் மனதில் ) . அது போன்ற ஒரு மதியம் அந்த பெண் என்னை தவறாக பயன்படுத்திக்கொண்டாள். என்ன நிகழ்கிறது என்று தெரியாத வயது, தூங்க வில்லை என்றால் ஆசிரியையிடம் சொல்லிடுவாள் எங்கிற பயம் மட்டுமே என்னிடம். பின் விடு திரும்பிய பிறகு இயற்கை அழைப்பை ஏற்க முடியாமல் தவித்த போது வீட்டில் கவனித்து மருத்துவரிடம் போய் ஊசி போட்டு வந்து எனக்கு முதுகில் ரெண்டு விழுந்தது. " எப்பவும் கையிலேயே பிடிச்சிகிட்டு திரிஞ்சா புண்ணாகாம என்ன செய்யும் " என்று ஏச்சு வேறு.


எனக்கறிந்த வகையில் இதுபோன்ற Child abuseகளை சந்திக்காமல் இருப்பவர்கள் மிகக்குறைவு. உங்கள் நினைவுகளை புரட்டிப்பார்த்தால் எங்கோ யாரோ தவறாக பயன்படுத்தி இருப்பார்கள். அப்படி வயதில் முதிர்ந்தவர்களால் பயன்படுத்த படாதவர்கள் பாக்கியவான்கள். கவர்ச்சி எங்கிற பெயரில் வக்கிரங்களும் செய்தி என்கிற பெயரில் உள்மன விகாரங்களாகவும் வெளிவரும் தமிழ்நாட்டு தினசரிகளில் எங்கோ ஒரு மூலையில் வரும் இது போன்ற செய்திகளை காண நேரிட்டால் லேசான பதைப்புடன் தாண்டிச்செல்வேன். ஆனால் நொய்டா படுகொலைகளை தவிர்க்க இயலா காரணத்துடன் அதன் செய்திகளையும் அதன் பின் ஏற்பட்டுள்ள நிலைமைகளை உள்வாங்கியே தீரவேண்டியுள்ளது. நெஞ்சம் உண்மையில் பதைக்கிறது , இத்தனை குழந்தைகள் கொடுரமாக பாலியல் ரீதியாக வதைக்குள்ளாக்கபட்டு பின் கொல்லபட்டுள்ளார்கள். இதை ஒரு இயற்கை பேரழிவாகவோ அல்லது அரசியற்காரணங்களால் ஒரு இனமக்களை கொன்று குவிக்கும் அரசின் இனஒழிப்பு நிகழ்வாக கருதி கண்டனங்களோ அல்லது எதிர்வினையோ பயன்படாது என்பதே என் கணிப்பு. மக்களையும் அரசையும் அதன் அதிகாரிகளையும் விழிப்புணர்வு அடையச்செய்வதே சரியான முடிவாக இருக்கும்.

இந்த நிலையில் மொனிந்தர் சிங்கும் அவனின் சக கொலையாளியான வேலைகாரனும் ஒரு விடயத்தை தெரிவித்ததாக செய்திகள் வருகின்றன. அது மனித மாமிசம் உண்ணவே கொலை செய்தோம் என்பதாகும். இந்திய சமூக அமைப்பியல் எங்கிற கருத்தியல் தளதத்தில் இருந்து பார்த்தால் ஒரு குழந்தையை கொன்று தின்பதை விட அவர்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவது அதிக குற்றமாகவும் தங்கள் குழந்தைகளுக்கு அது அவமானம் தேடித்தரும் விடயமாகவும் கருதப்படும். அவன் தன்னை ஒரு மனநோயாளியாக காட்டிக்கொள்ள விழைவது தெரிகிறது. இது பற்றி சகோதரி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த்த பொழுது கோபமாய் சொன்னார்கள் "அவனை எல்லாம் கறி கறியாய் வெட்டி போடனும்டா " என்று. இதே சகோதரி மரணதண்டனைக்கு எதிரான கருத்துக்கொண்டவர் என்பது இங்கு சொல்லிக்கொள்கிறேன். அதுவும் அங்கு குழந்தைகள் காணமல் போவது நீண்ட நாளாய் நடந்து வந்திருக்கிறது , பள்ளி பருவத்தில் நண்பன் ஒருவன் அடிக்கடி வீட்டை விட்டு ஓடிப்போவான். பிறகு அவன் அப்பா சித்தப்பா மாமா எல்லாம் தேடி ஒரு 50 கிலோ மீற்றர் ரேடியஸில் பிடித்து வருவார்கள் அல்லது கையில் வைத்திருந்த காசு செலவாகி தானே வீடு திரும்புவான் .இது ஒவ்வொரு தேர்வு முடிவின் போதும் நிகழும் , பின்னொரு நாள் தன் மிதிவண்டியுடன் காணமல் போனவன் நீண்ட நாளாய் வரவில்லை. ஆறு மாததிற்கு பின் தெரிந்தது அவன் யாராலோ இது போன்று வதைகுள்ளாக்கபட்டு கொலை செய்யபட்ட விதயம்.
குழந்தைகளை பெறுவது எவ்வளவு கடினம் என்பது சென்னை ஜீ.ஜீ மருத்துவமனையில் உள்ள கருத்தரித்தல் மையத்தில் சோதனைக்குழாயிலாவது தனக்கொரு கருவுண்டாகாதா என காத்திருக்கும் பெண்களின் முகங்களை பார்த்தால் தெரியும் . அதை விட கடினம் அவர்களை வளர்த்தெடுப்பது. இதில் அரசின் பங்கும் சரிபாதியாகும். இப்பிரச்சினை 9 மாதங்களுக்கு முன்னே எழுந்த்துள்ள போது இவனிடம் ஏதோ பெற்று இப்பிரச்சினையை மூடி மறைத்த அந்த காவல்துறை அதிகாரியும் இதே குற்றத்தின் அடிப்படையில் தண்டனை பெறவேண்டும். குழந்த்தைகள் காணாமல் போவதும் அது குறித்த புகார் செய்யபடுவதும் இந்தியா போன்ற நாடுகளில் மிக சாதாரண விதயம். காவல் நிலையத்தில் இது போன்ற காணாமல் போன விதயங்களுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை ரொம்ப கேவலமாய் இருக்கும். அது வண்டியானலும் குழந்தையானலும் , நாயாக இருந்தாலும் ஒரே சிந்தை நிலையாகத்தான் கையாளுவார்கள். அவர்களின் முதல் நோக்கம் சட்டம்& ஒழுங்கு இதில் கவனம் செலுத்தினால் போதும் ஊரின் அமைதியும் குற்ற எண்ணிக்கையும் கட்டுப்பாட்டில் இருந்தால் போதும் என்றுதான் இருக்கிறது. பாலியல் வல்லுறவுக்குப்பின் ஒரு பெண்ணாகும் பட்சத்தில் அது உயிர்க்கொலையில் முடிவதில்லை, அதுவே ஒரு சிறுமியாகவோ இல்லை சிறுவனாகவோ இருந்தால் பெரும்பாலும் கொலையில்தான் முடிகிறது. இதற்கான காரணம் சமூகம் , ஒருவன் இவ்வகை குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக்கொள்ள நேரிட்டால் அவனை மிககொடுமையான குற்றவாளியாக நடத்துவார்கள்- புறக்கணிப்பார்கள். இது இந்திய சமூகத்தில் மட்டுமல்ல எல்லாச்சமூகங்களிலும் உண்டு. அன்மையில் வெளிவந்த ஸ்பூபி மூவி ஒன்றில் மைக்கேல் ஜாக்சனின் உருவம் கொண்ட ஒரு நபர் குழந்தைகளை அழைப்பார் , அதைப்பார்த்த நாயகன் அப்பக்கம் போகதீர் என்று குழந்தைகளை தடுப்பார். இப்படி கேலிப்பொருளாகவும் ஒதுக்க பட வேண்டியவனாகவும் சித்தரிப்பதால் கொலையில் முடிகிறது என்றே கொள்கிறேன்.

நொய்டா சம்பவம் குறித்து நாளும் ஒரு தகவலும் புதிய செய்திகளும் வரும் இவ்வேளையில் புலம் பெயர் ஈழத்து எழுத்தாளரான ஷோபசக்தியின் நாவலான "ம்" ல் வரும் நேசக்குமார் எனும் பாத்திரம்


தன் பதின்ம வயது மகளின் கர்ப்பத்திற்கு காரணம் தான் எங்கிற பழியுடன் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு அலைவதாக முடிகிறது. நேசக்குமார் அமிர்தலிங்கம் எங்கிற அந்த பாத்திரம் ஈழப்போராட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு மௌன சாட்சியாயும் காட்டிகொடுத்து வாழ்வதை ஒரு பொருட்டாக மதிக்காத நபராகவும் அந்நாவலின் வாசிப்பனுபவம் எனக்குணர்த்தியது. அந்த நாவலின் முடிவை எப்படி நான் உள்வாங்கிக்கொண்டேன் என்றால்
சொந்த நாட்டில் இயக்கத்தால் தூரோகி எங்கிற முத்திரை குத்தபட்டு உயிர்காக்க ஓடி வந்தவன், வாழ்வின் துயர பக்கங்களை மட்டும் வாசித்தவன் , புலத்தில் வீட்டோரால் தகாப்புணர்ச்சியாளன் எங்கிற அவச்சொல்லை பெற்று தெருவில் அலைவதாக உள்வாங்கிக்கொண்டேன். நண்பனொருத்தனிடம் கேட்டேன் அவன் மூன்று விதமாய் உள்வாங்கியிருந்தான் அது சரி இனி அது வாசகரின் உரிமையல்லவா. . எனக்கோ கருக்கலைப்புக்கு காத்திருக்கும் அந்த "நிறமி"யின் கண்களும் அது வெளிப்படுத்தும் காதலும் நினைவில் அவ்வப்போது நினைவுக்கு வரும்

எப்படியாயினும் வாசிக்கவேண்டிய புத்தகம் "ம்" தவிர்க்கபடவேண்டியவகள் இது போன்ற கொலைகள்

8 மறுமொழிகள்:

 1. செந்தில்,
  ம்... நான் இப்போது 'ம்'தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் உங்கள் பதிவின் கடைசிப் பகுதியை வாசிப்பதை நிறுத்திவிட்டேன். கதை தெரிந்தால் வாசிக்க முடியாதல்லவா?
  மற்றது, வளர்ந்த பெண்களே தங்கள் உடல்மீது நிகழ்த்தப்படும் பாலியல் இழிவைக் குறித்து மனவுளைச்சலுக்கு ஆளாகும்போது... குழந்தைகள் எப்படி உணர்ந்திருப்பார்கள்? இந்த சமூகம், பெரியவர்கள் குறித்து அவர்கள் அதன்பின் எப்படியான மதிப்பீட்டைக் கொண்டிருப்பார்கள்...? நினைக்க முடியவில்லை. பதைக்கத்தான் முடிகிறது.

 1. நேசக்குமாரை வைத்து காமெடி கீமடி செய்யல்லியே ??

  முதலில் பிரிக்கவும். பிறகு மேயவும். பிறகு பிரித்து பிரித்து மேயவும்...நான் புத்தகத்தை மட்டும் சொன்னேன்..!!!

 1. மிக முக்கியமான பதிவு. அருமையாக எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி!

  child molestation என்பது இருந்தும் இல்லாதது மாதிரி கண்டுகொள்ளாமல்தான் இருந்து கொண்டிருக்கிறோம். நொய்டா கொலைகள் வக்கிரத்தின் extreme என்றால், இதைப் போல் பல வீடுகளில் பல வகைகளில் அத்துமீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

  மீரா நாயரின் - Monsoon Wedding என்ற திரைப்படத்தில் இதை மிக நுணுக்கமாக கையாண்டிருப்பார்.

  மற்றொரு திரைப்படம் 'மகா நதி'. அதில் வரும் சோலார் கஞ்ச் போல் பல நகரங்களில் சிறு குழந்தைகள் பாலியல் வன்முறை நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

 1. நல்ல பதிவு.

 1. கொடுமை தான்!
  நீங்கள் எழுதிய விதம் நன்று...
  அவசியமான பதிவு..

 1. கொடுமை தான்!
  நீங்கள் எழுதிய விதம் நன்று...
  அவசியமான பதிவு..

 1. Its everywhere..poor kidss

  http://news.ninemsn.com.au/article.aspx?id=178372

 1. ஷோபாசக்தியின் 'ம்' கதையில் நேசகுமாரன் (ரவிக்கு - இந்த நேசகுமாரனுக்கும் நேசகுமாருக்கும் சம்பந்தமில்லை. இவன் 'ம்' நாவலின் நாயகன் ஏர்னஸ்ட் நேசகுமாரன்)

  தன் மகள் நிறமியோடு உறவு கொண்டதாய் ஒப்புக்கொண்டு சிறைக்குச் செல்கிறான். பின் மீண்டு தமிழ்க்கலாச்சாரத்தைக் கெடுத்துவிட்டதாய் இளைஞர்களால் தண்டனைக்குத் தயாராவாதோடு நாவல் முடிகிறது.
  தன் வாணாள் முழுதும் அனைத்தையும் காட்டிக்கொடுத்தே வாழ்ந்தவன் கடைசியில் தன் மகள் நிறமியின் கர்ப்பத்திற்குக் காரணமானவனைக் காட்டிகொடுக்காமல் குற்றத்தை ஏற்றுகொண்டான் என்றே நான் உள்வாங்கிக்கொண்டேன்.

  ஷோபாவைச் சந்திக்கும்போது 'ம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்.நான் அதைச் சொன்னேன். ஷோபா சிரித்தார். ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உறவு இருக்கக்கூடாது என்னும் கலாச்சாரமனம் சிந்தித்ததன் விளைவுதான் அது என்று புரிந்தது.

  யுத்தம், சிறை, பிணங்கள் என்று நெருக்கடிநிலையில் வாழ்ந்தவனின் உளவியல் நெருக்கடி என்ற கருத்தும் இருந்தது. ஆனால் அதுவும் கூட "இளைஞர்களுக்கு வேலை போட்டுத் தந்தால் நக்சலைட்டு ஆக மாட்டார்கள்" என்று அரசாங்கம் சொல்வதைப்போலத்தான். வேலைகிடைக்காவிட்டால் திருடர்களாவார்கள், பிச்சைக்காரர்களாவார்களே தவிர நக்சல்போராளியாக மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் நெருக்கடியே இல்லாத சங்கராச்சாரி கூட இதைச்செய்வான் என்றுதான் தோன்றுகிறது. இதை வேறொருகோணத்தில்தான் அணுகவேண்டும். ஆனால் அது எது என்றுதான் தெரியவில்லை.