வைகோ கொலைப்பழி சுமத்தி திமுக'வில் வெளியேற்றப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் நேரில் பார்த்தேன். மதுரை திமுக பவள விழா மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியாய் பேரணி வண்டியூர் தெப்பக்குளத்தில் துவங்கியது. அங்கு நான் படித்த பள்ளியின் முன் பேரணியில் கலந்து கொள்ள நானும் நின்றிருந்தேன். கருப்பு நிற அம்பாசிடர் காரில் மதிய உணவுக்கு பின் வெத்தலை போட்டிருந்த வாயுடன் வந்திறங்கினார் வைகோ.( அப்போது நான் பார்த்த மற்றோரு சம்பவம் ஒரு வரலாற்று நிகழ்வு) . என் பள்ளியின் அருகில் வக்கில் பாபு என்பவரின் வீட்டின் முன் இறங்கிய வைகோ ஒரு சொம்பில் தண்ணிர் வாங்கி வாய் கொப்பளித்தபடி தன் காரின் டிக்கியில் இருந்து ஒரு துணிப்பதாகையை எடுத்து சிலரிடம் கொடுத்து ஏதோ உத்தரவிட்டு கொண்டிருந்தார். வைகோ வைகோ என என்னுடன் இருந்தவர்கள் ஓட நானும் ஓடி கைகொடுத்து மகிழ்ந்தேன். அடுத்த பத்தாண்டுகள் நான் அதிகம் உச்சரிக்க போகும் பெயர் அது என அப்போது தெரியாது.
அவரின் பேச்சுக்கள் என் ரத்தத்தை திராவகமாய் மாற்றின, ஈழப்பிரச்சினையில் அவரின் உறுதி (இன்று வரை) இயல்பாய் அவரிடம் கொண்டு சேர்த்தது. ஸ்பார்ட்டகஸும் நெப்போலியனும் கிரேக்க வரலாறுகளும் அவரின் குரலில் மேலும் ஏகாந்தம் பூசிக்கொண்டு வெளிவந்தன. காளிமுத்து திமுக வை விட்டு வெளியேறிய போது கலைஞரை மேடையில் இருத்தி " ஒரு வீபிடனன் போனாலென்ன, ஓராயிரம் இந்திரஜித்துகள் இங்கே இருக்கிறோம்" என பேசிய அவரின் பேச்சு செவிபுலன் நன்கமையப்பட்ட எந்த தமிழனைத்தான் ஈர்க்காது. ராசிவ் கொலை காரணம் காட்டி ஈழவிடுதலை ஆதரவாளர்கள் மாநில மத்திய ஆள்தூக்கி சட்டங்களால் வேட்டையாடப்பட்ட போது பிரபாகரனும் புலிகள் இயக்கமுமே ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் என தமிழ்நாட்டு தெருக்களில் முழங்கித்திரிந்த வைகோ எப்படி என் போன்றவர்களுக்கு பிடிக்காமல் போகும் .
எல்லாம் முடிந்தது, வைகோ நீக்கபட்டார், தான் தான் உண்மையான திமுக என உரிமைகோரினார். திருச்சியிலே போட்டி பொதுக்குழு கூட்டினார். நானும் இருந்தேன் அங்கு. சரியாய் நினைவிருக்கிறது அந்த பொதுக்குழு முகப்பில் இருந்த வாசகம் " பாடி வீட்டில் கூடி நிற்கிறோம்' போர் நடத்த இது ஒத்திகை - பகைவருக்கு இனி ஏது நித்திரை" வாசலில் நாஞ்சில் சம்பதண்ணன் நின்று கொண்டு அனுமதி சீட்டு சரி பார்த்து உறுப்பினர்களை அனுமதித்துக்கொண்டிருந்தார். அதன் பின் ஏப்பிரல் 16- 1994 அன்று சென்னையில் பேரணி நடத்தி தனது வலிவை காட்ட முனைந்தார். தமிழகம் அது வரை கண்டிராத மாபெரும் பேரணி அது.
அந்த பேரணி முடிவில் துவங்கியது வைகோவின் ஊசலாட்ட அரசியல், அந்த பிராமாண்ட பேரணி முதல்நாள் மதியம் 2 மணிக்கு துவங்கி அடுத்தநாள் காலை 8 மணிவரை தொடர்ந்து கொண்டிருந்தது. வைகோ கூட அவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை என்பது அவரின் மறுநாள் காலை5.55 க்கு துவங்கிய உரையில் தெரிந்தது, அந்த கூட்டம் வைகோ எனும் தங்களின் ஆதர்ச தலைவனின் நீக்கத்துக்கு எதிராயும் அதற்கு புலிகளை குற்றம் சாட்டிய தங்கள் இயக்கத்துக்கு எதிராயும் திரண்டிருந்தது. தன் பேச்சின் இடையே கூட்டத்தினை பார்த்து கேட்டார் "நமது அரசியல் எதிரி யார்?" என்று. கூட்டம் கருணாநிதி என ஆர்ப்பரித்தது. அதற்கு வைகோ " இல்லை ஜெயலலிதா" என விடையுரைத்து தன் முதல் தவறினை அரங்கேற்றினார். அந்த பேரணிக்கு பிறகு மே மாதத்தில் புதிய இயக்கம் துவங்கினார். அன்றைய ஜெயலலிதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என சூளுரைத்து ஜூலை மாதத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபயணம் துவங்கினார். நானும் துவக்கம் முதல் நாள் இனைந்தேன் பயணத்தில்.
அடுத்த வருட ஏப்பிரலில் தேர்தல் வந்தது, திமுகவில் வைகோவின் பிளவை "செங்குத்தான பிளவு" என வர்னித்து சுய இன்பம் அனுபவித்து கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்ஸிட்) யுடன் மறுமலர்ச்சி திமுக கூட்டணி கண்டது. " தோற்பதற்கு இனி தொகுதிகள் இல்லை" என நாஞ்சில் சம்பத் அண்ணன் கிண்டலாய்ச்சொல்லுவார் அது போன்றதொரு தோல்வி கண்டது அக்கூட்டணி. மதிமுக தொண்டர்களை பற்றிய பெருமிதமான மதிப்பீடு ஒன்று எப்போதுமே ஒன்று எனக்குள் உண்டு,அது அவர்களின் தோல்விகளை தாங்கும் பக்குவம். இன்னும் இருபது தேர்தல்களை கூட சந்தித்து தோத்தாலும் அவர்கள் துவள மாட்டார்கள் என்பது திண்ணம்.













