Friday, October 27, 2006

@ 4:51 PM எழுதியவர்: வரவனையான்

2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 இல் இந்திய நாடாளுமன்ற கட்டடத்தின் மீது காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த வழக்கில் ஜெய்ஸ்-இ-முகமது என்னும் அமைப்பைச் சேர்ந்த முகமது அப்சல் குரு என்கிற இளைஞர் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அக்டோபர் 20 ஆம் நாள் அப்சலைத் தூக்கி லிடுமாறு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றமும் உத்தரவிட்டது.

அப்சலுக்கு மரண தண்டனை என்ற செய்தி பரவியதுமே காஷ்மீர் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பு நிலவுகிறது. பிரிவினைவாத அமைப்புகள், ஆளும் கூட்டணிக் கட்சிகள், கம்யூனிஸ்ட்டுகள், பெண்கள், மாணவர்கள் - அனைவருமே அப்சலுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.

கடையடைப்பு, பேரணி, போலீசாருடன் மோதல் என்று ஒவ்வொரு நாளும் வேகம் பரவி வருகிறது. காஷ்மீர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட முதல்வர் குலாம் நபி ஆசாத்தும் “முகமது அப்சலுக்கு குடியரசுத் தலைவரின் மன்னிப்பைப் பெற்றுத் தருவதன் மூலம் மரண தண்டனையிலிருந்து அவரைக் காப்பாற்ற முடியும். பிரதமர் மன்மோகன் இதற்கு உதவ வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஜம்மு காஷ்மீர் மாநிலச் செயலாளரும் சட்டப் பேரவை உறுப்பினருமான தாரிகமி “அப்சலுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறுபரிசீலலை செய்து அவருக்குக் கருணை காட்டலாம். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டால் ஜம்மு காஷ்மீரில் அமைதி முயற்சிகள் எதிர் மறையாகச் செல்லவும் வழி வகுக்கும்” என்று கூறியிருக்கிறார்.

மார்க்சியர்கள் பிரிவினைவாதிகளோ, பலாத்கார நடவடிக்கைகளில் நம்பிக்கையுள்ளவர்களோ அல்லர். மத நல்லிணக்கத்திலும், தேச ஒற்றுமையிலும் பற்றுறுதி வாய்ந்தவர்கள் என்பதால் தாரிகமியின் ஆலோசனை ஆழ்ந்த அக்கறையுடன் கவனிக்கத் தக்கது. காஷ்மீரில் கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகியுள்ள நேரத்தில் அப்சலின் குடும்பத்தினர் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுவும் அளித்திருக்கிறார்கள்.

அப்சலைத் தூக்கிலிடக் கூடாது என்று போராட்டங்களும் கருத்துருவாக்கங்களும் நடந்து கொண்டிருக்கும் அதே சமயம் அப்சலைத் தூக்கிலிட்டே தீர வேண்டும். கருணை காட்டக் கூடாது. நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயிலைப் போன்றது. அதன்மீது தாக்குதல் என்பது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை. அந்தக் கொடுமையைச் செய்தவனை மன்னிப்பது தேச விரோத நடவடிக்கை என்று பா.ஜ.க.வும், சங்கப் பரிவாரங்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

“நாடாளுமன்றத் தாக்குதலின்போது எங்கள் கணவரைத் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றார்கள். கணவரை இழந்து வாடும் எங்கள் கண்ணீருக்கு என்ன பதில்?” என்று தாக்குதலின்போது இறந்த காவலர்களின் மனைவியரும் அப்சலுக்குக் கருணை காட்டக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். இவர்களைத் தயார்படுத்தி முன்னிறுத்துகிறவர்கள் பரிவாரங்களே என்பது ரகசியமல்ல.

“உணர்ச்சி வேகத்தில் கொலைகளைச் செய்த ஒருவன் அந்த உணர்ச்சி நீர்த்துப் போனதும் வருத்தம் கொள்கிறான் மனச்சோர்வு அடைகிறான்.

ஒரு தீவிரவாதியோ, குறிப்பிட்ட பயங்கரவாத இயக்கத்தின் நோக்கத்துக்காக நாட்டின் பொது அமைதியைச் சீர்குலைக்கும் கொலைத் தொழிலைச் செய்து முடித்த பின்னர் அங்கே உயிரிழப்பு பற்றிய வருத்தங்கள் இருப்பதில்லை. மாறாக அச்செயல் கொண்டாடப்படும் வெற்றியாக அமைகிறது.

உணர்ச்சி வேகத்தால் கொலை செய்த மனிதனின் தண்டனையைக் குறைத்தாலோ அல்லது அவனை விடுதலையே செய்தாலும் அதனால் சமூகத்தில் யாருக்கும் ஒன்றும் ஆகிவிடாது.

ஆனால், ஒரு தீவிரவாதியின் மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றினால் சிறைக்கூடத்தில் இருந்தபடி தன் அடுத்த திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் தொடர்கதைதான் நிகழும்.” என்று சில சங்கப் பரிவார ஆதரவு ஏடுகளும் எழுதுகின்றன.

மேலோட்டமாகப் பார்க்கும்போது குறிக்கோள், இலட்சியம், அரசியல்சார்பு எதுவும் இல்லாத ஒரு தனிமனிதனுக்குக் கருணை காட்டுவதும், ஓர் இயக்கத்துக்காக, அதன் இலட்சியங்களுக்காகச் செயல்படும் தீவிரவாதி ஒருவனுக்குக் கருணை காட்டுவதும் வெவ்வேறு தன்மையுடையவை என்று தோன்றலாம். ஆனால், உணர்ச்சி வேகத்தில் கொலை செய்தவனைத் தூக்கிலிடுவதால் அந்தக் குற்றவாளியின் குடும்பத்தார்க்கு மட்டுமே இழப்பும் துயரும் நேரும்.

தீவிரவாதியைத் தூக்கிலிடும்போது அவருடைய குடும்பத்தினர்கூடச் சமயங்களில் வருந்தமாட்டார்கள். ஏடுகள் குறிப்பிடுவதுபோல் அது ஒரு வெற்றியாக - வீரவணக்கத்துக்குரியதாகவும் மாறலாம். தேசத் தந்தை என்று போற்றப்படும் காந்தியடிகளைக் கொன்றதற்காக கோட்சேயும் வருந்தவில்லை. அவனைத் தூக்கிலிட்டதற்காக அவன் குடும்பத்தாரும் வருந்தவில்லை. மாறாக அவனை வீரன் என்றும், எதிர்காலம் கொண்டாடும் என்றும் அவனது சகோதரர் கோபால் வெற்றிக் களிப்புடன் பேசினார்; எழுதினார். இதுவரை கோட்சேயைக் கண்டித்து எந்த அத்வானியும், வாஜ்பேயியும், சோவும், குருமூர்த்தியும் பேசவில்லை; எழுதவில்லை.

கோட்சேக்கு மரண தண்டனை வழங்கிவிட்டதால், சாதுக்களும், சங்கப் பரிவாரங்களும், அத்வானிகளும் தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்திவிடவில்லை. அதுபோலவே அப்சலின் மரணத்தால் அவன் சார்ந்த இயக்கமும் முடங்கிப் போய் விடப் போவதில்லை. தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை அளிப்பதால் தீவிரவாதம் குறைவதில்லை. ஆனால், அதனால் ஏற்படும் துயரங்கள் தேசத்தையே உலுக்கி விடுகின்றன.

அப்சலின் நடவடிக்கை நியாயமானது என்று யாரும் வாதிட முடியாது. ஆனால், நாடாளுமன்றத் தாக்குதல் என்கிற குற்றச் செயல், இருவேறு மதங்களின், இருவேறு கருத்துக்களின், தொடர் நிகழ்ச்சி என்பதை மறுத்துவிட முடியாது. காஷ்மீருக்குள் மாத்திரமே ‘சுதந்திரப் போராட்டம்’ என்கிற முறையில் நடந்து கொண்டிருந்த வன்முறைச் சம்பவங்கள் நாடு முழுவதும் இழுத்து விடப்பட்டது எப்படி? சங்கப் பரிவாரங்களின் தீவிரவாதத்துக்கு இதில் பொறுப்பில்லையா?

இஸ்லாமியத் தீவிரவாதத்தைக் கண்டிக்கிற உரிமை அதாவனிக்கோ, குருமூர்த்திக்கோ இல்லை. பாபர் மசூதி தகர்க்கப்பட்ட பிறகுதான் கோவையிலே குண்டு வெடித்தது. மும்பையிலே குண்டு வெடித்தது. அப்சலைத் தூக்கிலிடு என்று ஆர்ப்பாட்டம் நடத்தினால், அதன் அருகிலேயே அத்வானியைத் தூக்கிலிடு என்று ஆர்ப்பாட்டம் நடத்துவதும் சரியானதே! ஆனால், தூக்குத் தண்டனை வழங்குவதால் மக்கள் தொகை குறையலாமே தவிர, இங்கே எரியும் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்து விடாது.

‘சிறுபான்மை’ மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ‘பெரும்பான்மை’யினர் நிம்மதியாக உறங்கிவிட முடியாது. இந்தியாவில் ‘பெரும்பான்மை’ என்கிற பேரிரைச்சலுக்குள் புகுந்திருப்போர் உண்மையில் மிகமிகச் சிறுபான்மையினரான பார்ப்பனர்களே! பார்ப்பன வெறியர்களின் நலன்களே, ஆதாயங்களே இங்கே இந்திய நலன்களாகச் சித்திரிக்கப்படுகின்றன.

உண்மையிலேயே இந்திய நலனில், சமூக ஒற்றுமையில் அக்கறை உண்டென்றால், முதலில் இங்கே சங்கப் பரிவாரங்கள் தடை செய்யப்பட வேண்டும். பாபர் மசூதியைத் தகர்த்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். புதிதாய் அந்த மசூதி கட்டப்பட வேண்டும். இம்மாதிரியான நடவடிக்கைகளே இஸ்லாமியரின் அச்சங்களையும் ஆவேசங்களையும் குறைக்கும். இந்தியாவைப் போல் நமக்குப் பாதுகாப்பான நாடு எங்கும் இல்லை என்று இஸ்லாமியர்கள், அல்லது அசாமியர்கள், மணிப்பூரிகள், தெலுங்கானா மக்கள், தமிழர்கள், நக்சலைட்டுகள் என அனைத்துப் பிரிவினரும் நம்பும் போதுதான், தீவிரவாத தேவையற்று உதிரும்.

‘காரணம்’ அறியாமல், ‘காரியத்தை’ நிறுத்த முடியாது. தீவிரவாதம் ஏன் தொடங்குகிறது என்று யோசிக்க மறுத்தால், மரண தண்டனைகளை வழங்கிக் கொண்டே இருக்கலாம்.

அப்சலுக்குக் கருணை காட்டக் கூடாது. ஏனென்றால் அவன் தனி மனிதனல்ல. ஒரு தீவிரவாதியின் மரண தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றினால், சிறைக் கூடத்தில் இருந்தபடியே தன் அடுத்த திட்டத்தை நடத்துவது எப்படி என்று சிந்திக்கத் தொடங்குவான் என்று வாதிடுவோர் வசதியாக ஒன்றை மறந்து விடுகிறார்கள்.

தீவிரவாதியின் மரண தண்டனையை ரத்து செய்தால் ‘அடுத்து என்ன’ என்று அவன் சிந்திப்பான். அவனை தூக்கிலிட்டு விட்டால் ‘அடுத்து என்ன’ என்று மற்றவர்கள் சிந்திப்பார்கள். “அப்சல் விவகாரத்தைப் பொறுத்தவரை, ‘தகுந்த சாட்சி, ஆதாரத்தின் அடிப்படையில்தான் தண்டனை அளிக்கப்பட வேண்டும்’ என்று கேட்பது மட்டுமே நியாயமான வாதமாக இருக்க முடியும்” என்று எழுதுகிற ஏடுகளும் உண்டு.

அதாவது ‘தூக்கிலிடுங்கள். ஆனால், அதை நியாயப்படுத்துங்கள்” என்பதுதான் அவர்கள் தரப்பு வாதம்.
ஆதிக்க சக்திகள் நினைத்தால், அரசுகள் விரும்பினால், எதையும் எப்படியும் நியாயப்படுத்த முடியும்.
நியாயப்படுத்தப்பட்ட தீர்ப்புகள் எல்லாமே வரலாற்றில் ஏற்கப்பட்ட தீர்ப்புகளாகி விடுவதில்லை.

அப்சலுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்வது, தீவிரவாதத்துக்கு முன் ஓர் அரசு பணிந்துவிட்டதாக மக்கள் எண்ண மாட்டார்களா? - கேட்கலாம். ஆனால், “தூக்குத் தண்டனை வழங்கிய அரசுகள் நிமிர்ந்துதான் நிற்கின்றனவா?” - இப்படியும் மக்கள் கேட்பார்கள்.


: தோழர் இளவேனில் செய்திமடலில் எழுதியது

9 மறுமொழிகள்:

 1. Thanking you for the connec

 1. இன்னும் அந்த மரணதண்டனை விதிக்கப்பட்ட பஞ்சாபி சகோதரர்களைப் பற்றி யாரும் மூச்சு கூட விடமாட்டேங்குறாங்க; ஆனா அப்சலுக்கு வ்ரிந்து கட்டிக் கொண்டு எல்லோரும் வந்திர்ரீங்க...அதுதான் ஏன்னு புரியலை எனக்கு.

 1. அவசியமான பதிவு. அவசியமான தருணத்தில்..

 1. சோதனைப் பின்னூட்டம்..

  தருமி, அந்தப் பஞ்சாபி சகோதரர்களின் தூக்கு தண்டனையும் ஒத்தி வச்சிருக்காங்களாம்.. போன வாரம் படிச்சேன்..

 1. //இன்னும் அந்த மரணதண்டனை விதிக்கப்பட்ட பஞ்சாபி சகோதரர்களைப் பற்றி யாரும் மூச்சு கூட விடமாட்டேங்குறாங்க; ஆனா அப்சலுக்கு வ்ரிந்து கட்டிக் கொண்டு எல்லோரும் வந்திர்ரீங்க...அதுதான் ஏன்னு புரியலை எனக்கு. //

  அது மட்டும்தான் உங்களுக்கு பிரச்சினையா?:)

 1. இனிமேல் பாராளுமன்றத்துக்கு குண்டு வைக்கிறவர்களுக்கு தூக்கு தண்டையெல்லாம் வேண்டாமா?

 1. //இனிமேல் பாராளுமன்றத்துக்கு குண்டு வைக்கிறவர்களுக்கு தூக்கு தண்டையெல்லாம் வேண்டாமா//

  ஓகை அய்யா,

  தூக்கு தண்டனை என்ன , தண்டனையே வேண்டாம்.நம்ம சுகுமாரன் அய்யா,மற்றும் நவ பார்பனீயரான ரோசா அய்யா அவர்களிடம் சொல்லி டொனேஷன் வசூல் செய்து குண்டு வைப்பவருக்கு கொடுப்பது சாலச்சிறந்தது.

  நம்ம அய்யன் சொல்லியபடி,

  இன்னா செய்தாரை ஓறுத்தல் அவர் நாண,
  நன்னயம் செய்து விடல்.

  எனக்கு இந்த வழியில் நம்பிக்கை உண்டு.

 1. //
  இன்னும் அந்த மரணதண்டனை விதிக்கப்பட்ட பஞ்சாபி சகோதரர்களைப் பற்றி யாரும் மூச்சு கூட விடமாட்டேங்குறாங்க; ஆனா அப்சலுக்கு வ்ரிந்து கட்டிக் கொண்டு எல்லோரும் வந்திர்ரீங்க...அதுதான் ஏன்னு புரியலை எனக்கு.
  //

  ஒண்ணு மட்டும் உருதி தருமி சார்,

  இது போன்ற விஷயங்கள் தான் என்னைப் போன்றவர்களை மேலும் மேலும் "இந்து" வாக மாற்றுகின்றது.

  செந்தில்,

  சுயமாக சிந்திக்கத் தகுதி படைத்த எந்த உயிரினமும் உடனடியாகக் கேட்கும் கேள்விகள்,

  1. சந்தோஷ் சிங் என்ற மிருகம் பிரிய தர்ஷனி மட்டூ என்ற பெண்ணை வண்புணர்ச்சி செய்து கொன்றிருக்கிறது அதுக்கு தூக்கு கொடுத்தார்களே அதைப்பற்றி உங்கள் கருத்து இதே தான் என்று எடுத்துக் கொள்ளலாமா?.

  ஏனென்றால் இந்தத் தமிழ் வலைப்பூவில் அஃப்சலுக்காகப் பேசிய வாய்கள் சந்தோஷ் சிங்கிற்காகப் பேசவில்லை.

  2. சமீபத்தில் கைர்லாஞ்சி என்னும் கிராமத்தில் ஒரு தலீத் குடும்பத்துப் பெண்களை ஊர் முன்னிலையில் கற்பழித்தனர் OBC மேல் சாதி க்கள். அவர்கள் பிடிபட்டுவிட்டனர். விஷயம் நிச்சயம் சில நாட்களில் பூதாகரமாக வெடிக்கும்.

  அப்போது தூக்கு வழங்கப்பட்டால் உங்கள் கருத்து இதே போல் இருக்குமா ?

  3.அப்சல் (அல்லது முகம்மது அல்லது இக்பல், அல்லது இப்ரஹீம், இத்யாதி இத்யாதி) என்றவுடன் வக்காலத்து வாங்கவரும் வாயும் கையும், சந்தோஷ் என்றவுடன் வராமல் விளங்காமல் போவது ஏனோ ?

  இப்படி செலக்டிவாக விளங்காமல் போன வாயும் கையும் மொத்தமாக விளங்காமல் போனால் தான் என்ன ?

  //
  தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை அளிப்பதால் தீவிரவாதம் குறைவதில்லை.
  //

  இதை extrapolate செய்தால், எந்தக் குற்றத்திற்கும் தண்டனையே இருக்கக் கூடாது என்ற நிலையில் வந்து முடியும்.

  The point is, how long can you take it.

  உங்கள் வீட்டில் நுளைந்து உங்கள் கண் முன்னே உங்கள் மனைவியைக் கற்பழித்தவனுக்கும் தூக்கு கூடாது என்று சொல்வீர்களா ?

  இந்திய இறையாண்மையை தகர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் கூலாக உட்கார்ந்து plan போட்டவனுக்கெல்லாம் கருணை காட்டவேண்டும் என்பது அபத்தத்தில் உச்சகட்டமாகத் தெரியவில்லையா ?

  அவன் என்ன ஆத்திரத்தில் ஒண்ணுக்குப் போக இடம் தேடி அலைந்து பார்லிமெண்டில் பாம் வைத்தானா ?

  //
  இனிமேல் பாராளுமன்றத்துக்கு குண்டு வைக்கிறவர்களுக்கு தூக்கு தண்டையெல்லாம் வேண்டாமா?
  //

  இனிமேல் அப்படிச் செய்பவர்களுக்கு first class air ticket டுடன் மொரீஷியஸ், சிங்கப்பூர் 7 days 7 nights Holiday inn suite (with jaccuzi and sauna) உடன் இங்கே அப்சலுக்குத் தூக்கு கூடாது என்று பதிவு போட்ட அத்தனை பேர் சம்பளத்திலிருந்தும் பிடிக்கப் பட்டு அந்த ஆள் "நாடு கடத்தப் படுவான்"!!

  ...
  இந்தியாவின் இறையாண்மைக்கு பெரும் பாதகம் செய்பவர்கள் பாகிஸ்தானோ, பங்களா தேஷோ, அல்லது கூட்டிக் கொடுக்கும் உள்ளிருக்கும் இஸ்லாமியர்களோ அல்ல, எல்லோரையும் விட கொடூரமான பாதகம் செய்பவர்கள் இந்த அறிவு சீவிக்களே.

 1. //
  இன்னா செய்தாரை ஓறுத்தல் அவர் நாண,
  நன்னயம் செய்து விடல்.
  //

  பாலா,

  அவர்கள் "நாண"வில்லை எனில் "நன்னயம்" செய்தே ஓட்டாண்டி ஆகவேண்டியது தானா ? அல்லது, வெக்கங்கெட்டவர்களிடம் "நாண"த்தை எதிர் பார்ப்பது முட்டாள்தனமில்லையா ?